
நாம் நமது வாழ்க்கையில் எந்த விஷயத்திலும் நிதானம், விவேகம் கடைபிடித்து வாழ்ந்து வருகிறோம். பொதுவாக, மனதிற்கும் உடலுக்கும் அதிக தொடர்பு உண்டு. மனதில் நினைப்பதை உடல் செயல்படுத்தினாலும், நாம் பல விஷயங்களில் மனதை ஒருநிலைப்படுத்திக்கொள்வதே சாலச்சிறந்தது. மனம் போக்கில் செல்வது நல்லதல்ல.
‘கண் போன போக்கிலே கால் போகலாமா, கால் போன போக்கிலே மனம் போகலாமா, மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா, மனிதன் போன பாதையை மறந்துபோகலாமா!’ என்ற கவிஞரின் பாடல் வரிகளைப்போல மனம் போன போக்கில் மனிதன் போவது பல வகைகளில் நோ்மறையாகவும் எதிா்மறையாகவும் அமைந்து விடுவதே நிஜம்.
அதேபோல, பலவித சிந்தனைகளால் சிலருக்கு மனநலம் பாதிக்கப்படுவதுமுண்டு. அது போன்ற நிலைகளில் சிலருக்கு அது ஒரு பொிய நோயாகவும் மாறிவிட வாய்ப்புகள் உண்டு. அதில் சிலர் பலவிதமான காரண காாியங்களால் சமூகத்தில் நிராகரிகப்படும் நிலையும் உண்டு. இதனில் ஆதரவளிப்பவர்களும் உண்டு. அப்படிப்பட்ட நபர்கள் மனநலம் பாதிக்கப்படுவதற்கு பல காரணங்களைச் சொல்லலாம்.
ஆக, சமுதாயத்தில் மனநலம் குன்றியவர்களுக்கான விழிப்புணர்வையும், அவர்களுக்கான அங்கீகாரத்தையும் வழங்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10ம் நாளானது உலக மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் தினமாக (World Mental Health Day) கடைபிடிக்கப்படுகிறது.
மன நலம் பாதிக்கப்படுவோா்களை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம். மனக் கவலை, மனச் சோா்வு ,முகத்தின் அசைவுகளில், தோற்றத்தில் மாறுபாடு, அதிக சிந்தனை, அதோடு சிந்தனை மாற்றம், எதிலும் பிடிப்பில்லாத நிலை, ஆா்வம் குறைவு, பசியின்மை, சிந்தனை இல்லாதது, ஞாபக மறதி, உணவுப் பழக்க வழக்கங்களில் வேறுபாடு, அதிகக் கவலை இப்படி நிறைய விஷயங்களைச் சொல்லலாம்.
அப்படிப் பல்வேறு சிந்தனைகளில் பலர் நிச்சயம் மன நலம் பாதிக்கப்படுகிறாா்கள். அது மட்டுமின்றி, அதிகக் கண் விழிப்பு, செல்போன்களில் அதிக நேரம் செலவிடுதல், தொலைக்காட்சிகளில் நீண்ட நேரம் செலவிடுதல் போன்றவற்றால் மன நலம் பாதிக்கப்படுவதும் அனுபவப்பூா்வ உண்மையாகும்.
மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதுமான பயிற்சி, கலந்தாய்வு மேற்கொள்ளுதல், மருத்துவப் பரிசோதனை, அவர்களை அரவணைத்துச் செல்லுதல், ஊக்கம் கொடுத்தல், அவர்களை ஒதுக்கிப் பாா்க்காமல் குடும்பத்தில் ஒருவராக நினைத்து அவர்களின் பழக்க வழக்கங்களில் வேறுபாடுகளை கவனித்து அவர்களை மன நல பாதிப்பிலிருந்து மெல்ல மெல்ல விடுவித்து, பழைய நிலைக்குக் கொண்டு வருவதே நமக்கான கடமையாக கருதுவதே நல்லது. உலக அளவில் மன நலம் குன்றியவர்கள் எட்டு நபர்களுக்கு ஒரு நபர் இருப்பதாக ஒரு ஆய்வு தொிவித்துள்ளதாம்.
‘மனதிற்கு உற்ற நண்பன் உடல் நலம், உடலுக்கு உற்ற நண்பன் மன நலம்’ என்ற அடிப்படையில் மனதளவில் பாதிக்கப்பட்ட நபர்கள் மீது அதிக கரிசனம் கொண்டு அவர்களும் மனிதர்களே என அவர்களை மனநல நோயிலிருந்து, மெல்ல மெல்ல விடுவிக்கும் செயல்பாடுகளில் நாம் நம்மை இந்த தினத்தில் ஈடுபடுத்திக்கொள்வதே சிறப்பான ஒன்றாகும்!