கோயில் கட்டி, கடவுளாக வணங்கப்படும் ஒரே சீன தத்துவ ஞானி!
தத்துவ ஞானி கன்பூசியஸ் பிறந்த தினம் சரியாகக் கணிக்கப்படாவிட்டாலும், அவரது பிறந்த நாளாக கி.மு. 551ம் ஆண்டு செப்டம்பர் 28ம் நாள் கொண்டாடப்படுகிறது. கன்பூசியஸ் சீனாவில் ஒரு உயர் குடி வகுப்பில் பிறந்தவர்தான். கன்பூசியஸ் ஒரு சீன தத்துவ ஞானி. இவர் ‘தத்துவ ஞானிகளின் பிதாமகர்’ என்று போற்றப்படுபவர். இவரது உண்மையான பெயர் ‘குங் சங்- நீ’ என்பதாகும். அவருடைய சீடர்களால் பின்னாளில் பெருமையுடன் வழங்கப்பட்ட பெயர்தான் ‘கன்பூசியஸ்.’
உயர் குடி வகுப்பில் அவர் பிறந்ததால் அவரிடம் பல திறமைகள் இருந்தன. கவிதை, இசை, இலக்கியம் போன்றவற்றில் அவர் புலமை பெற்றிருந்தார். இதனால் சீனாவின் ‘லூ’ பகுதி மன்னரின் வாரிசுகளுக்கு கல்வி போதிக்கும் உயரிய பணியை செய்து வந்தார். அவருடைய 30வது வயதில் ஆசிரியர் பணி ஏற்று அன்புடனும், கனிவுடனும் மாணவர்களுக்கு பாடங்களை போதித்தார். இதனால் மாணவர்கள் அவரிடம் மிகுந்த மரியாதையாக இருந்தனர்.
பின்னர் சீனாவின் அப்போதைய ‘சங் டூ’ பகுதியில் முதல் முறையாக நீதிமன்றங்களுக்கு நீதிபதியாக அரசப் பதவியை ஏற்றார் கன்பூசியஸ். அதன் பின்னர் அந்த நாட்டின் சட்டத்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டார். பிறகு அவருக்கு அரசப் பதவியில் ஆர்வம் குறைந்தது. அதனால் சீனா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களுக்கு போதனைகள் செய்ய ஆர்வம் கொண்டு, சீனா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அந்த சுற்றுப் பயணத்தின்போதுதான் சீனாவின் பல சிற்றரசர்களுக்கு ஒரு அரசன் எப்படி நடந்துகொள்ள வேண்டும், பொது மக்களிடம் எப்படி கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும் மற்றும் அவர்களின் தேவைகளை எப்படிப் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற போதனைகளை சொல்லித் தந்தார். 6ம் நூற்றாண்டில் சீனாவை ஆண்ட பல மன்னர்களின் ஆட்சியில் ஊழலும், கொடுங்கோன்மையே நிலவி வந்தன. அவற்றை எல்லாம் தனது போதனைகள் மூலம் சீர் திருத்தி அங்கே நல்லாட்சி நடக்க வைத்தார் கன்பூசியஸ். அவர் சீனா முழுவதும் சுற்றுப்பயணம் முடித்து மீண்டும் தனது சொந்த ஊரான ‘லூ’ பகுதிக்கு வந்தார். ஆனால், அவருக்கு அங்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நேரத்தில்தான் அவரது மகன் ஒருவர் இறந்தார். அவருடைய தலைமை சீடன் ஒருவனும் இறந்தான்.
கடுமையான சிந்தனை, ஓயாத உழைப்பு, பொருளாதார பாதிப்பு போன்ற காரணங்களால் நோய்வாய்ப்பட்ட கன்பூசியஸ் தனது 70வது வயதில் ஓய்வெடுத்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டார். ஒரு மலைப்பாங்கான இடத்தில் தமது சீடர்களுடன் கடைசிக் காலத்தைக் கழிக்கத் தொடங்கினார். சீடர்களுக்கு உபதேசங்கள் வழங்கிக்கொண்டே நூல் ஒன்றையும் எழுதினார். இந்நிலையில், கி.மு.479ம் ஆண்டு நான்காவது சந்திர மாதத்தின் 11வது நாளில் (வைகாசி மாதம் - மே மாதம்) அவர் 73ம் வயதில் இறந்தார். அவருடைய காலத்தால் அழியாத அவருடைய போதனைகள் மற்றும் பல்வேறு துறை நூல்களை எல்லாம் கன்பூசியஸ் சீடர்கள் தொகுத்து புத்தகமாக வெளியிட்டனர். அதில் ‘புக் ஆப் ஓடிசிஸ், புக் ஆப் டாகுமெண்ட்டேசன், புக் ஆப் மியூசிக்’ ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
அனலெக்ட்ஸ், மென்சியஸ், சுன்சி, சிறந்த கற்றல் மற்றும் சராசரி கோட்பாடு போன்ற கன்பூசியஸ் படைப்புகளிலுள்ள அவரது கருத்துக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆசியா மற்றும் ஆசியா அல்லாத சிந்தனையாளர்களாலும், ஆட்சியாளர்களாலும் போற்றப்பட்டு, செல்வாக்கு செலுத்தி வந்துள்ளன. கன்பூஸியசின் மரணத்திற்குப் பிறகுதான் அவரது கருத்துக்களால் அவர் மீதான நன்மதிப்பு அதிகமானது. அவரது கொள்கைகள், தத்துவம் என்பதையும் தாண்டி மதமாக உருவெடுத்தது. அதுவே, ‘கன்பூசியனிஸம்’ என்ற பெயரில் அவரது கருத்துக்கள் அனைத்தும் மதமாக மாறியது.
உலகில் மக்களிடையே ஏழை, பணக்காரர் என்கிற மாதிரியான எவ்விதப் பாகுபாடும் இருக்கக் கூடாது. ஆதரவற்றோர், முதியோர், ஏழை எளியவர்களுக்கு அடைக்கலம் தந்து பாதுகாப்பு தர வேண்டியது அரசின் கடமை. கல்வியை வளர்க்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது, இளைஞர்கள் சுதந்திரமாக சிந்தனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கன்பூசியஸ் தனது போதனைகள் மூலம் வலியுறுத்தினர்.
கன்பூசியஸ் அவரது போதனைகள் மூலம் ஒரு கடவுளாகவே மதிக்கப்படலானார். அவர் பிறந்த கு பூவில் அவருக்குக் கோயில் ஒன்று எழுப்பப்பட்டது. இக்கோயில் உலக பாரம்பரியச் சின்னம் என்று யுனெஸ்கோ 1994ம் ஆண்டு அறிவித்தது. அத்துடன் கன்பூசியஸ் பிறந்த வீடும் உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.
கன்பூசியஸ் கோயில் மற்றும் வீடு அமைந்துள்ள 14 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவிலான வளாகத்தில், 1300க்கும் மேற்பட்ட கட்டடங்கள் அமைந்துள்ளன. ஐந்தாயிரத்துக்கும் அதிகமான கல்வெட்டுக்களும் அங்கே காணப்படுகின்றன. பல ஆயிரம் ஆண்டுகளாக சீனாவை ஆட்சி செய்து வந்த ஆட்சியாளர்கள் அனைவரும் இந்த வளாகத்தைப் பாதுகாத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.