கோலிவுட் பிறந்த கதை: மெட்ராஸ் எப்படி சினிமா தலைநகரமாக மாறியது தெரியுமா?

ஆகஸ்ட் 22: மெட்ராஸ் டே ஸ்பெஷல்
Kollywood  - Old movie shooting
Kollywood - Old movie shooting
Published on

சென்னை (முன்னாள் மெட்ராஸ்), இந்தியாவின் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகரம் மட்டுமல்ல, தென்னிந்திய சினிமாவின் இதயமும் கூட. கோலிவுட் (Kollywood) எனப் பிரபலமாக அறியப்படும் தமிழ்த் திரைப்படத் துறையின் பிறப்பிடமாக சென்னை விளங்குகிறது.

1897-ம் ஆண்டு:

ஐரோப்பியர்களால் முதன்முறையாக மெட்ராஸின் விக்டோரியா பப்ளிக் ஹாலில் சில சிறிய சைலன்ட் படங்கள் (silent short films) திரையிடப்பட்டன. இதுவே சென்னை மண்ணில் சினிமா தோன்றியதன் ஆரம்பம். இவை எம்.எட்வர்ட்ஸ் என்பவரால் திரையிடப்பட்டன.

1900-ம் ஆண்டு:

அதைத் தொடர்ந்து, மேஜர் வார்விக் என்பவரால் சென்னையில் முதல் நிரந்தரத் திரையரங்கமான 'எலக்ட்ரிக் தியேட்டர்' கட்டப்பட்டது.

1912-ம் ஆண்டு:

ரகுபதி வெங்கையா நாயுடு என்பவர், சென்னையின் மவுண்ட் சாலையில் (இன்றைய அண்ணா சாலை) 'கெயட்டி தியேட்டர்' என்ற முதல் நிரந்தர திரையரங்கை நிறுவினார். இதன் மூலம் சினிமா தினசரி பொழுதுபோக்காக மாறத் தொடங்கியது.

1918-ம் ஆண்டு:

ஆர்.நடராஜ முதலியார், 'கீசகவதம்' என்ற தென்னிந்தியாவின் முதல் ஊமைப் படத்தைத் தயாரித்து இயக்கினார். அப்போது படத்தின் தொழில்நுட்ப வேலைகள் புனே அல்லது கல்கத்தாவில் செய்யப்பட்டன. பின் 1931 முதல் பேசும் படமான 'காளிதாஸ்' வெளியானது.

கோடம்பாக்கம்: கனவுகளின் பூமி

1940-களின் பிற்பகுதியில் மெட்ராஸின் ஒதுக்குப்புற கிராமமாக இருந்த கோடம்பாக்கம், தமிழ்த் திரையுலகின் மையமாக மாறியது. இந்தக் கிராமத்தின் பெயர் உருது மொழியில் 'கோடா பாக்' (குதிரைகளின் தோட்டம்) என்பதிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

1930களின் பிற்பகுதியில், 'துக்காராம்' (1938) போன்ற திரைப்படங்கள் வெளியானபோது தமிழ்ச் சினிமா வெகுஜன மக்களிடையே பிரபலமடையத் தொடங்கியது. ஆரம்பகாலத் திரைப்படங்கள் பெரும்பாலும் புராண மற்றும் வரலாற்று கதைகளை அடிப்படையாகக் கொண்டிருந்தன.

ஆனால், 'வேலைக்காரி' (1949) திரைப்படம் வெளியான பிறகு திரைப்பட உள்ளடக்கத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் வந்தது. அன்றிலிருந்து தமிழ்ச் சினிமாவிற்கும் தமிழக அரசியலுக்கும் இடையிலான ஆழமான தொடர்பு தொடங்கியது.

ஏ.வி.எம் ஸ்டுடியோ:

ஏ.வி.மெய்யப்ப செட்டியார் தனது ஸ்டுடியோவை காரைக்குடியில் இருந்து வடபழனிக்கு மாற்றியபோது, மற்ற பல ஸ்டுடியோக்களும் (ஜெமினி, விஜயா வாகினி, பிரசாத் போன்றவை) கோடம்பாக்கத்தைச் சுற்றியே அமைந்தன. நடிகர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரும் இந்தப் பகுதியில் குடியேறியதால், கோடம்பாக்கம் தமிழ்த் திரையுலகின் உயிர்நாடியாக மாறியது.

'கோலிவுட்' என்ற பெயர்:

கோடம்பாக்கம் என்ற பெயரும், ஹாலிவுட் என்ற பெயரும் இணைந்து 'கோலிவுட்' என்ற வார்த்தை உருவானது.

இதையும் படியுங்கள்:
நாய் வளர்ப்பவரா நீங்கள்? இந்த 7 நோய்கள் உங்களுக்கு வரலாம்!
Kollywood  - Old movie shooting

1960களில் இருந்து, கே.பாலசந்தர், பாரதிராஜா, மகேந்திரன், பாலு மகேந்திரா, மணிரத்னம் போன்ற புகழ்பெற்ற இயக்குநர்கள், சமூக-அரசியல் களங்களை விரிவுபடுத்தி, பெண்ணியம், பொருளாதார ஏற்றத்தாழ்வு, இனவாதம் போன்ற கருப்பொருள்களைத் தங்கள் படங்களில் கையாண்டனர். அவர்கள் உலகளாவிய திரைப்படத் தொழில்நுட்பங்களையும், கதை சொல்லும் பாணிகளையும் தங்கள் படைப்புகளில் இணைத்தனர்.

Kollywood movies
Kollywood movies

தமிழ்ச் சினிமா, சுயமரியாதை மற்றும் சாதிய எதிர்ப்பு இயக்கங்களுடன் வலுவான தொடர்பு கொண்டது. 'பராசக்தி', 'மனோகரா' போன்ற 1950களின் திரைப்படங்கள் முதல் 'விடுதலை' (2023) மற்றும் 'வாழை' (2024) வரை பல படங்கள் சாதிய எதிர்ப்பு கருப்பொருள்களைப் பேசின.

தற்கால வளர்ச்சி

ஸ்டுடியோக்கள் மாற்றம்:

1970-களுக்குப் பிறகு, வெளிப்புறப் படப்பிடிப்புகள் அதிகரித்ததால், ஸ்டுடியோக்களின் முக்கியத்துவம் குறைந்தது. பல ஸ்டுடியோக்கள் அடுக்குமாடிக் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் என மாற்றப்பட்டன.

இதையும் படியுங்கள்:
தலை முதல் கால் வரை - கடுகு செய்யும் மாயம்!
Kollywood  - Old movie shooting

தொழில்நுட்ப மையங்கள்:

இன்று, கோடம்பாக்கம், வடபழனி, மற்றும் ஈக்காட்டுத்தாங்கல் போன்ற பகுதிகள் படப்பிடிப்பு, படத்தொகுப்பு, ஒலிச்சேர்க்கை, கிராபிக்ஸ் போன்ற தொழில்நுட்பப் பணிகளுக்கான மையங்களாகத் திகழ்கின்றன.

சென்னை, அதன் வரலாற்றுக் காலத்திலிருந்தே தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு அசைக்க முடியாத அடித்தளத்தை அமைத்துள்ளது. பல தலைமுறை நட்சத்திரங்களையும், தொழில்நுட்ப வல்லுநர்களையும் உருவாக்கிய இந்த நகரம், இன்றும் கோலிவுட்டின் கனவுத் தொழிற்சாலையாகத் திகழ்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com