
விதவிதமான சோப்பு விளம்பரங்களால் ஈர்க்கப்பட்டும், சுகாதாரத்தைப் பேணும் வகையிலும் வீட்டில் ஒவ்வொருவரும் தனித்தனியே தமக்கென்று சோப்புகளை உபயோகிக்கிறார்கள். நான்கு பேர் கொண்ட வீட்டில் நான்கு விதமான அல்லது நான்கு தனித்தனி சோப்புகளைப் பயன்படுத்துவார்கள். அவை தேய்ந்து மிகச் சிறிதாக ஆகும்போது உபயோகப்படுத்த முடியாமல் போய்விடும். பலரும் அவற்றை குப்பைத் தொட்டியில்தான் வீசுகிறார்கள். மீந்துபோன குட்டி சோப்புகளை பயனுள்ள வழியில் உபயோகிப்பது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. புதிய சோப்போடு சேர்க்கவும்: தேய்ந்து மிகச் சிறியதாகிப்போன சோப்பின் மிச்சத்தை கையில் பிடித்து உடலில் தேய்த்துக் குளிக்க முடியாது. எனவே, அதை புதிய சோப்பில் மேல் ஒட்ட வைக்கலாம். பழைய சோப்பையும் புதிய சோப்பையும் தண்ணீரில் நனைக்க வேண்டும். புதிய சோப்புக் கட்டியின் மேல் பழைய சோப்பின் மிச்சத்தை ஒட்டி விட்டால் நன்றாக ஒட்டிக்கொள்ளும். அதை உபயோகித்துக் கொள்ளலாம். சோப்பின் எந்தப் பகுதியும் வீணாகாது. அதேபோல மிச்சமான துவைக்கும் சோப்பையும், புதிய சோப்புடன் ஒட்டவைத்து உபயோகிக்கலாம்.
2. சோப்புப் பையில் போட்டு உபயோகிப்பது: தற்போது சோப்புகளைப் போட்டு உபயோகிப்பதற்கென்றே சிறிய சைசில் சணல் பைகள் கிடைக்கின்றன. இவை துளைகளுடன் இருக்கும். இதில் சோப்பை போட்டு உபயோகிக்க வேண்டும். இந்தப் பையை உடலில் தேய்த்துக் குளிக்கும்போது அது சருமத்தில் உள்ள அழுக்கை எடுப்பதுடன் உள்ளிருக்கும் சோப்பின் ஆயுட்காலமும் நீட்டிக்கப்படுகிறது. மிகவும் சிறியதாகிபோன சோப்பையும் பைக்குள் வைத்தபடியே உபயோகிக்கலாம்.
3. லிக்விட் சோப்பாக மாற்றவும்: கொரோனா காலத்தில் ஆரம்பித்த ஒரு நல்ல பழக்கம் அடிக்கடி கை கழுவுவது. மீதமான சோப்புத் துண்டுகளை பயன்படுத்தி லிக்விட் சோப்பு தயாரிக்கலாம். சோப்புத் தூண்டுகளை சிறிய அளவில் நறுக்கிக் கொள்ளவும். கேரட் துருவியில் கூட துருவிக் கொள்ளலாம். துருவிய சோப்பு துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். அதை சில மணி நேரங்கள் ஆற விடவும். பின்பு அந்தக் கலவையைக் கிளறி, கெட்டியாக இருந்தால் மீண்டும் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். இப்போது அந்த திரவத்தை புனலைப் பயன்படுத்தி காலியான லிக்விட் சோப் டப்பாவில் ஊற்றி உபயோகிக்கலாம்.
4. ஷேவிங் கிரீம்: மீதமுள்ள சோப்புத் துண்டுகளை உபயோகித்து ஷேவிங் கிரீம் தயாரித்துக் கொள்ளலாம். சோப்புத் துண்டுகளை ஒரு பழைய குவளையில் போட்டு அதில் சிறிது சூடான நீர் ஊற்றவும். ஷேவிங் பிரஷை அதில் வைத்து கலக்கினால் நன்றாக நுரை வரும். அதை ஷேவிங் கிரீமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
5. கை கழுவ உபயோகிக்கலாம்: மீதமான சோப்புகளை வாஷ் பேஷனின் ஓரத்தில் வைத்து விட வேண்டும். கழிவறையை உபயோகித்து முடித்த பின்பும், வெளியில் இருந்து வீட்டிற்கு வந்ததும் கை கழுவ இதை உபயோகித்துக் கொள்ளலாம். கைகளுக்கு மட்டும் உபயோகிப்பதால் மிகவும் சிறியதாகப் போனாலும் கூட வீணாக்காமல் உபயோகிக்கலாம்.
6. ஒரு நாள் டூருக்கு: வெளியூர் செல்லும்போது பலரும் சோப்பு எடுத்துச் செல்ல மறந்துவிட்டு புதிய சோப்பு வாங்குவார்கள் அல்லது புதிய சோப்புக்கட்டியை எடுத்துக் கொண்டு போய் வெளியூரில் இருக்கும் ஹோட்டல் ரூமிலேயே மறந்து வைத்து விடுவதும் நிகழ்கிறது. அதற்கு பதிலாக சிறிய சோப்பு துண்டுகளை எடுத்துச் சென்றால் ஒன்று இரண்டு நாட்களுக்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
7. பயணத்தின்போது: நீண்ட கார், ரயில் பயணத்தின்போது இந்தத் துண்டு சோப்புகள் மிகவும் உபயோகமாக இருக்கும். முகம் கழுவ, கை கழுவ இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
8. உடைகளுக்கு நறுமணமூட்ட: அலமாரியில் துணிகளுக்கு அடியில் உலர்ந்த சோப்புக் கட்டிகளை சிறிய துணியில் சுற்றி அங்கங்கே வைக்கலாம். இதனால் துணிகள் நல்ல நறுமணத்துடன் திகழும்.