

இயற்கை பலவித மாற்றங்களை நமக்குத் தருகிறது. ‘இயற்கை அன்னை தந்ததெல்லாம் எல்லோா்க்கும் சொந்தமம்மா’ என்ற பாடலுக்கு ஏற்ப இயற்கையைப் போல கொடுப்பதும் இல்லை, கெடுப்பதும் இல்லை. பருவகால மாற்றங்களுக்கு தகுந்தவாறு பல்வேறு நிலைகளில் பருவமழையின்போது புயல், சூறாவளி, அளவுக்கு மீறிய மழை வெள்ளம் இவற்றால் பல தரப்பு மக்களும் அல்லல்படுவது வாடிக்கையான நிகழ்வே!
இந்த பாதிப்பு சீசனுக்கு சீசன்தான் என்றாலும், ஒருசில மாவட்டங்களை அதிக பாதிப்புக்கு உள்ளாக்குவதே இயற்கை சீற்றத்தின் விளைவாகும். அவை நமக்குக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டுப் போகிறது. அந்த வகையில், உலகையே அச்சுறுத்தும் பூகம்பம், நிலநடுக்கம், சுனாமி பேரலை போன்ற இடர்பாடுகளின் அழிவுக்கு அளவே இல்லை.
சுனாமி ஆழிப்பேரலை உலகையே ஆட்டிப்படைத்து விடுவதோடு, கடற்கரை மற்றும் அதனை ஒட்டியுள்ள கிராமங்களையும் அதில் வாழும் மீனவர்கள் மட்டுமல்லாது, ஏனைய மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கச் செய்து விடுவதே நிஜம். சுனாமியானது 2004ல் மிகப்பொிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டு போய் விட்டது.
ஆழிப்பேரலை என்பது கடல் அல்லது பொிய ஏரி போன்ற நீா்நிலைகளில் ஏற்படும் பூகம்பம், நில நடுக்கம், நிலச்சரிவு போன்றவற்றால் உண்டாகும் ஒரு பொிய அலைத்தொடராகும். சுனாமி என்பது ஜப்பானியச் சொல்லான துறைமுக அலை என்பதாகும். கடற்கரைக்கு வரும் அலைகள் மிக உயரமாகவும் வேகமாகவும் இருப்பதால் பேரழிவை ஏற்படுத்துகிறது. இதன் தாக்கத்திலிருந்தும் அழிவிலிருந்து மீளவும் பாதுகாப்பை உறுதிபடுத்தவும், சுனாமி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரதி வருடம் நவம்பர் 5ம் நாளில் உலக சுனாமி விழிப்புணர்வு தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது (World Tsunami Awarness Day). டிசம்பர் 2015ல் ஐ.நா. சபை இந்த நாளை அறிவித்தது.
சுனாமி என்பது துறைமுகம் Tsu, அலை என்பது Nami என பொருள்படும். பருவநிலை மாற்றமும் இதற்கு ஒரு காரணமாகும். அதேபோல, நாடுகள், சர்வதேச அமைப்புகள், சிவில் சமூகம் சுனாமி விழிப்புணர்வு மற்றும் அபாயக் குறைப்புகளை அதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அழைப்பு விடுத்தன.
சுனாமி ஒரு அரிதான நிகழ்வே. இருந்தாலும் அவை மிகவும் ஆபத்தானவையே! பொதுவாக, கடந்த காலங்களில் மிகப்பொிய சுனாமி அழிவுகளால் 2,60,000க்கும் அதிகமானோா் இறந்திருக்கிறாா்களாம். அதாவது, ஒரு பேரழிவிற்கு சுமாா் 4600 போ் வீதம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. 2004 டிசம்பர் 26 அனைவராலும் மறக்க முடியாது. அன்று இந்தோனேஷியா தீவு, சுமத்ராவுக்கு அருகே இந்தியப் பெருங்கடல் பூகம்பத்தால் ஏற்பட்ட சுனாமி, இந்தியாவின் தெற்கு கடற்கரை பகுதியைத் தாக்கியபோது இந்தியாவில் அதிகாரபூா்வ கணக்குகளின்படி 10,136 போ் இறந்துள்ளதோடு, பல்லாயிரக்கணக்கானவர்கள் வீடு வாசல்களை இழந்தாா்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆக, நீலச்சேலை கட்டி வந்த சமுத்திரப் பெண்ணே, கடல் அன்னையே இனி ஒரு தாக்கம் வேண்டாம். கடல் மாதாவே கருணை உள்ளத்தோடு ஆழிப்பேரலை வராமல் அனைவரையும் காப்பாற்று என இந்த நாளில் இறைவனை வேண்டுவோம்!