
உலக அளவில் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டிருந்த நிலை. அவா்களுக்கான உரிமைகள் பறிக்கப்பட்ட காலம். ‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு’ என கட்டுப்பட்டியாய், அடிமைப்பட்டு, அதோடு இருள் நிறைந்த வாழ்க்கையில் கரடு முரடான பாதையில் பெண்கள் பயணித்திருக்கிறாா்கள். அதிலும் கிராமப்புற, படிக்காத பெண்களின் நிலை பற்றி கேட்கவே வேண்டாம்.
கால் போக்கில் இந்த நிலை மாறினாலும் முழுமையான சுதந்திரம் அவர்களுக்குக் கிடைக்கப்பெறாத நிலை தொடர்வதும் தொடர்கதையாகி வருகிறது, அதுவே வேதனையான விஷயம்தான். பொதுவாக, விவசாயம், உணவு பாதுகாப்பு, இயற்கை வளம் பாதுகாத்தல், வீட்டுப் பராமரிப்பு போன்றவற்றில் கிராமப்புற பெண்களின் பங்களிப்பு அதிகம் என்றே சொல்லலாம்.
கூட்டுக்குடும்ப வாழ்க்கை ஒருபுறம் இருந்தாலும், அதில் பல்வேறு கஷ்டங்கள் என அவர்கள் சிரமப்படுவதற்காகவே பிறந்தவர்கள் போல கிராமப்புற பெண்களின் வாழ்க்கை அங்கீகாரம் இல்லாமலே வாழ்ந்து வரவேண்டிய சூழல். பொதுவாக கிராப்மப்புறப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பங்களிப்பினை உலக அளவில் உறுதி செய்திடவேண்டும். அதேநேரம் அவர்களின் பணியையும் பாராட்டியே ஆக வேண்டும். அவர்களின் உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்கப்படுவதில் பிரச்னைகள் எழவே கூடாது.
பல்வேறு இனங்களில் அவர்களது உன்னதமான பணியை நாம் யாருமே பாராட்டுவதே கிடையாது. மழை வெள்ள காலங்களில் கூட அவர்களின் பணியில் தொய்விருக்காது. அவர்களது முயற்சிகள் பாராட்டப்பட வேண்டும். பல விஷயங்களில் நாட்டுக்கும் வீட்டிற்கும் அவர்கள் செய்து வரும் பணிகளுக்கும் பல விதங்களில், பல்வேறு நிலைகளில் அவர்கள் சந்தித்துவரும் பிரச்னைகளை வெளிக்கொணர்ந்து அவர்களின் சிரமத்திற்கும் முன்னேற்றத்திற்கும் பாலமாய் இருந்து இந்த சமுதாயம் தனது கடமைகளை சரிவர செய்ய வேண்டும். இதில் ஆண்களுக்கு மிகப்பொிய பங்கு உண்டு!
இது போன்ற நிலைப்பாடுகளில் அவர்களுக்கான உாிமைகளைப் பெற்றுத் தர வேண்டும். அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே உலக கிராமப்புற பெண்கள் தினத்தின் நோக்கமாகக் கொள்ள வேண்டும். இது போன்ற பல்வேறு விஷயங்களின் அடிப்படையில் அவர்களுக்கான பாதுகாப்பு அம்சங்களை வலியுறுத்தி பொியதொரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாய் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15ம் நாளை உலக கிராப்புற பெண்கள் தினமாக அங்கீகரித்து அனுசரிக்கப்படுகிறது .
இந்த தினமானது 2008 முதல் தொடங்கப்பட்டதாகும். காலப்போக்கில் மாநில, மைய அரசுகளின் முயற்சியால் பல சலுகைகளை அவர்கள் பெறும்விதமாய் வாய்ப்புகள் வழங்கப்பட்டிருந்தாலும், என்னதான் பெண்களுக்குக் கல்வி, வேலை வாய்ப்பு, அடிமைத்தனம் விலக்கியது, பதவி அமைப்புகளில் இடஒதுக்கீடு முறை, ஆணுக்குப் பெண் சமம் என அனைத்துத் துறைகளிலும் அவர்களின் பங்களிப்பு என்ற நிலை மாறி வந்தாலும் சமுதாயத்தில் அவர்களுக்கு உாிய அந்தஸ்தும் பாதுகாப்பும் வழங்கித்தான் ஆக வேண்டும்.
அந்த வகையில், இரவு நேரத்தில் பெண்கள் தனியே பயமில்லாமல் வெளியே நடந்து போகும் நிலை வந்தால்தான் அனைவருக்கும் நல்லது. அதேநேரம் அரசு மட்டுமல்லாது, சமுதாயத்தில் ஆண்களுக்கும் நிறையவே பொறுப்பு உள்ளது. எனவே, அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதே சாலச்சிறந்ததாகும்.