
தமிழ் சினிமாவை அரை நூற்றாண்டுக்கும் மேலாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த மாபெரும் நடிகர் சிவாஜி கணேசன். தனது அபாரமான நடிப்பால் தமிழ்த் திரையுலகிற்கு புகழ் சேர்த்தவர். இன்று ஜூலை 21 சிவாஜி கணேசனின் 24வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. கடந்த 1921 அக்டோபர் 1 இல் விழுப்புரத்தில் அவதரித்த சிவாஜி கணேசன், சிறு வயதில் இருந்தே நாடகங்களின் மீது அதிக நாட்டம் கொண்டிருந்தார். ஆணாக இருந்தும் பெண் வேடத்திலும் சிறப்புற நடிக்கும் மாபெரும் கலைஞர் இவர். சிவாஜி நடித்த முதல் வேடமே இராமாயணத்தில் வரும் சீதையின் கதாபாத்திரம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மாமன்னர் ‘சத்ரபதி சிவாஜி’ நாடகத்தில் ஒருமுறை சிவாஜி நடித்திருந்தார். இந்த நாடகம் தான் சிவாஜி கணேசன் என்ற பெயரை இவருக்குப் பெற்றுத் தந்தது. அதாவது விழுப்புரம் சின்னய்யா மன்ராயர் கணேசனான இவர், சிவாஜி வேடத்தில் கம்பீரமான நடிப்பை வெளிப்படுத்தியதால், அன்று முதல் சிவாஜி கணேசன் என்ற பெயரால் அழைக்கப்பட்டார். 1952 இல் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் எழுத்து மற்றும் வசனத்தில் உருவான திரைப்படம் பராசக்தி. இப்படத்தின் மூலமாகத் தான் தமிழ்த் திரையுலகில் தனது வருகையை பதிவு செய்தார் சிவாஜி.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என பல மொழிகளில் மொத்தம் 288 திரைப்படங்களில் நடித்துள்ளார் சிவாஜி. இதில் 275 படங்கள் தமிழ்ப் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றுவரை அதிகப் படங்களில் நடித்த தமிழ்க் கதாநாயகன் என்ற பெருமையை சிவாஜி தன்வசம் வைத்துள்ளார். தமிழ் உச்சரிப்பு, நல்ல குரல்வளம் மற்றும் திறமையான நடிப்பு தான் இவரை தமிழ் சினிமாவின் நடிகர் திலமாக்கியது.
சிறுவயதில் தனது தந்தையுடன் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தைக் கண்ட சிவாஜி, அன்று முதல் தானும் ஒரு நடிகனாக வேண்டும் என்ற ஆர்வத்தை விதைத்துக் கொண்டார். பிறகு வீட்டிற்கு தெரியாமல் திருச்சிக்கு சென்று ஒரு நாடக சபையில் சேர்ந்தார். அங்கு சீதை வேடத்தை ஏற்று நடித்த போது அவரது வயது வெறும் 7 தான். அதன்பிறகு சூர்ப்பனகை மற்றும் இந்திரஜித் உள்பட பல வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிட்டியது.
தனது உறவுக்காரப் பெண் கமலாவை 1952 இல் திருமணம் செய்து கொண்டார் சிவாஜி. இவருக்கு ராம்குமார் மற்றும் பிரபு என்ற 2 மகன்களும், தேன்மொழி மற்றும் சாந்தி என்ற 2 மகள்களும் உள்ளனர்.
சர்வதேச அரங்கில் சிறந்த நடிகருக்கான விருதை வென்ற முதல் இந்தியர் சிவாஜி தான். பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருதை வென்ற முதல் இந்திய நடிகரும் இவர் தான். திரைப்படத் துறையின் மிக உயரிய விருதான தாதாசாகிப் பால்கே விருது, மத்திய அரசின் பத்ம ஶ்ரீ மற்றும் பத்ம பூஷன் விருதுகளையும் வென்றுள்ளார் சிவாஜி கணேசன். சரித்திர வீரர்களான வீரபாண்டிய கட்டபொம்மன், இராஜராஜ சோழன், கர்ணன் மற்றும் மனோகரா போன்ற படங்களில் சிவாஜி பேசும் வசனங்கள் இன்றும் பாராட்டப்படுகிறது.
நடிப்பு மட்டுமின்றி பொது வாழ்விலும் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட சிவாஜி, பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்துள்ளார். பள்ளிகள் கட்டுவதற்கும், மருத்துவமனைகள் கட்டுவதற்கும், இயற்கை சீற்றங்களின் போது நிதி உதவியையும் அளித்துள்ளார்.
தனது நடிப்புத் திறனுக்கு விதை போட்ட வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு பெருமை சேர்க்கும் விதமாக அவர் தூக்கிலப்பட்ட கயத்தாறு என்ற இடத்தை விலைக்கு வாங்கி, அங்கு கட்டபொம்மனுக்கு சிலை ஒன்றையும் வைத்தார் சிவாஜி. இன்றும் இந்த இடம் கட்டபொம்மனுக்கு சிறந்த நினைவுச்சின்னமாகப் போற்றப்பட்டு வருகிறது.
தமிழ் திரையுலகிற்கும், தமிழ்நாட்டிற்கும் எத்தனையோ பெருமைகளையும், உதவிகளையும் செய்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு நாள் இன்று. இன்றைய தினத்தில் சிவாஜியின் அருமை பெருமைகளை இன்றைய இளம் தலைமுறையினர் நிச்சயமாக அறிந்து கொள்ள வேண்டும்.