ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் முன் எந்த குறியீடுகளை கவனிக்க வேண்டும்?

Stock Market
Stock Market
Published on

ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்குவது என்பது அந்த நிறுவனத்தின் சொந்தக்காரர் ஆவதைப் போன்றது. நிறுவனங்களை வாங்குங்கள் பங்குகளை அல்ல என்று பங்குச் சந்தையின் ஜாம்பவான் வாரன் பஃபெட் அவர்கள் கூறுகிறார்கள். அதாவது, நிறுவனத்தின் பங்கான காகிதத்தின் சொந்தக்காரர் என்று நினைப்பதற்கு மாறாக நிறுவனத்தின் சொந்தக்காரர் போல் யோசியுங்கள் என்கிறார். எனவே, ஒரு நிறுவனத்தை வாங்குவதற்கு முன்பு அந்த நிறுவனத்தைச் சொந்தமாக்கிக் கொள்ளலாமா என்பதைப் போல் யோசிக்க வேண்டும். 

ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு முன் பல விஷயங்களை அலச வேண்டும். அவற்றில் சிலவற்றை பார்ப்போம். 

அந்த நிறுவனத்தைப் பற்றி நன்றாக அறிந்து கொள்ள வேண்டும்;

  • அந்த நிறுவனம் எதை தயாரிக்கிறது? 

  • எந்தெந்த நாடுகளில் செயலாற்றுகிறது?

  • எவ்வாறு இலாபமிட்டுகிறது?

  • அதே துறையை சார்ந்த மற்ற நிறுவனங்களில் இருந்து எவ்வாறு மேம்பட்டு செயல்படுகிறது? 

  • எத்தகைய சந்தை அனுகூலத்தை (Competitive advantage) கொண்டுள்ளது?

  • நாட்டின் பொருளாதார நிலை அந்த நிறுவனத்திற்கு எவ்வாறு சாதகமாக உள்ளது?

  • பொருளாதார நிலவரம் அந்த நிறுவனத்திற்கு எவ்வாறு சாதகமாக உள்ளது ?

  • அது தன் துறையில் முன்னோடியாக உள்ளதா ?

  • அந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் எவ்வளவு பங்குகளை அந்த நிறுவனத்தில் கொண்டுள்ளனர்?

  • அந்த நிறுவனத்தின் பங்குகளைப் பரஸ்பர நிதி நிறுவனங்கள் எவ்வளவு கொண்டுள்ளன ? 

  • அந்த நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி எத்தகைய திறன் கொண்டவர் ? 

நிறுவனத்தைக் குறித்து, இன்னும் பல தகவல்களை இணையத்தில் பெற முடியும். 

இதையும் படியுங்கள்:
பிள்ளைகளின் எதிர்கால ஆரோக்கியத்துக்கு அவசியமாகும் உடற்பயிற்சி!
Stock Market

அந்த நிறுவனத்தின் பங்கின் சில குறியீடுகளைப் பார்ப்போம். 

1. ஒரு பங்கு சம்பாதிக்கும் பணம் (Earnings Per Share (EPS)): ABC என்ற ஒரு நிறுவனம்   ஒரு வருடத்தில் சம்பாதிக்கும் நிகர லாபம் 10 இலட்சம் என்று கொள்வோம். அதன் பங்குச் சந்தை பங்குகள் 1 இலட்சம் என்று கொள்வோம்.

ஒரு பங்கு சம்பாதிக்கும் பணம்(Earnings Per Share (EPS)) = 10 இலட்சம் / 1 இலட்சம் = 10 ரூபாய்

2. விலை மற்றும் சம்பாத்தியத்திற்கு இடையேயான விகிதம்- பிஈ விகிதம் (Price to Earnings Ratio (P/E Ratio)): ஒரு நிறுவனம் பங்குச் சந்தையில் எந்த விலையில் விற்கப்படுகிறது மற்றும் அது எவ்வளவு பணம் வருடாந்திரம் ஈட்டுகிறது என்பதை கொண்டு இந்த விகிதம் கணக்கிடப்படுகிறது. இதன் மூலம் நீங்கள் முதலீடு செய்யும் ஒரு ரூபாய் எவ்வளவு பணம் வருடம் ஈட்டித் தருகிறது என்று தெரிய வரும். 

மேலே கண்ட ABC என்ற நிறுவனத்தின் பங்கின் சம்பாத்தியம் 10 ரூபாய். அதன் சந்தை விலை 120 என்று கொள்வோம்.

பிஈ விகிதம் = 120 / 10 = 12  

இந்த விகிதம் குறைவாக இருந்தால், அந்த பங்கு குறைந்த விலையில் சந்தையில் உள்ளது எனத் தெரியவரும். 

மேலும், இதன் மூலம் நீங்கள் ஒரு ரூபாய் ஈட்டுவதற்கு 12 ரூபாய் பணத்தை கொடுக்கிறீர்கள் என்பது தெரியவரும். இதனை தலைகீழாக வைத்தால், அது ஒரு வருடம் ஈட்டித் தரும் இலாபத்தை அறியலாம். 

இங்கு  1/ 12 x 100 = 8.3% 

8.3% இலாபத்தை ஒரு வருடத்தில் அந்தப் பங்கு ஈட்டித் தருகிறது. இது வங்கி தரும் வட்டி விகிதமான 7% விட அதிகமாக உள்ளது.‌ 

ஆனால், இந்த பிஈ விகிதம் சில பங்குகளுக்கு அதிகமாக இருந்தாலும், அவை நல்ல பங்குகளாக இருக்க வாய்ப்புள்ளது. அது அந்த நிறுவனத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது. 

இதையும் படியுங்கள்:
வளமான எதிர்கால வளர்ச்சிக்கு பசுமை மின்சார சக்தியின் தேவை!
Stock Market

3. சம்பாத்தியம் வளர்ச்சி விகிதம் - பிஈஜி விகிதம் (Price Earnings Growth Ratio- PEG Ratio): இதன் மூலம், அந்த நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கும் நிறுவனத்தின் பிஈ விகிதத்திற்கும் உள்ள சம்பந்தத்தை அறிந்து கொள்ளலாம். 

மேலே குறிப்பிட்ட, ABC நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி 12% என்று கொண்டால், 

பிஈ விகிதம் / வளர்ச்சி = 12/ 12 = 1

இந்தப் பிஈ விகிதம் 1 க்கு குறைவாக இருந்தால், நிறுவனத்தின் பங்கு குறைந்த விலை என்று அறிந்து கொள்ளலாம். 1க்கு அதிகமென்றால், பங்கு அதிக விலையில் விற்கப்படுகிறது என்று அறிந்து கொள்ளலாம். 

4. நிறுவனத்தின் நடப்பு விளிம்பு (Operating Margin): நிறுவனம் சந்தையில் ஈட்டும் இலாபத்திற்கும், அது நிறுவனத்தை நடத்துவதற்கு எடுத்துக் கொள்ளும் செலவிற்கும் இடையே உள்ள வித்தியாசம். இதன் மூலம் ஒரு நிறுவனம் எவ்வாறு தன் செலவுகளைக் கட்டுப்படுத்தி இலாபத்தை அதிகமாக ஈட்டுகிறது என்பதை அறிந்து கொள்ள முடியும். அதிக செலவுகள் கொண்ட நிறுவனத்திற்கு எதிர்காலத்தில் பண வீக்கத்தின் காரணமாக செலவுகள் கூடினால் நஷ்டத்தில் இயங்க நேரலாம். எனவே இந்த விளிம்பையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

உதாரணமாக, மேலே குறிப்பிட்ட ABC நிறுவனத்தின் ஈட்டும் தொகை 10 இலட்சம். நடப்பு செலவுகள்  6 இலட்சம் எனக் கொள்வோம். 

நடப்பு விளம்பு = 10 இலட்சம் - 6 இலட்சம் = 4 இலட்சம்

நல்லதொரு நடப்பு விளிம்பினை ABC நிறுவனம் கொண்டுள்ளது. 

இதையும் படியுங்கள்:
கின்னஸ் உலக சாதனை படைத்த இன்சூரன்ஸ் நிறுவனம்!
Stock Market

5. கடன் மற்றும் சொத்திற்கு இடையே உள்ள விகிதம் (Debt to Equity Ratio): இது அந்த நிறுவனம் எவ்வளவு கடனில் உள்ளது என்று கூறும். அதிக கடனில் உள்ள நிறுவனம் திவாலாக வாய்ப்புண்டு.

இன்னும் பல்வேறு விகிதங்கள் மற்றும் அலசல் காரணிகள் உள்ளன. பங்குகளைத் தேர்ந்தெடுக்க அதிக மெனக்கெடல் அவசியம். வாரம் சில மணி நேரங்களை ஒவ்வொரு பங்கிற்கும் ஒதுக்க வேண்டும். அத்தகைய மெனக்கெடல்கள் இல்லாத பட்சத்தில், பரஸ்பர நிதிகள் வாயிலாக பங்குகளில் முதலீடு செய்வது சிறப்பானது. அங்கு பரஸ்பர நிதி மேலாளர் குழு, பங்குகளைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்கிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com