பசும் பால் உற்பத்தியில் முதல் ஐந்து இடங்களில் இருக்கும் நாடுகள் எவை?

World Milk Day
World Milk Day

ஜூன் 1 – உலகப் பால் நாள்

பாலூட்டி வகையைச் சேர்ந்த பசு, எருமை, ஆடு, குதிரை, ஒட்டகம் போன்ற விலங்குகளிடமிருந்து பால் பெறப்படுகிறது. பால் மற்றும் பால் பொருட்கள் ஊட்டச்சத்து மிகுந்த மற்றும் ஆரோக்கியமான உணவுகளாக இருக்கின்றன. இதில் இயற்கையான ஊட்டச்சத்துக்களான கால்சியம், பொட்டாசியம் உடன் லாக்டின் (புரதம்), லாக்டோசு (இரட்டைச் சர்க்கரை) உள்ளிட்டவை அடங்கியுள்ளன.

வேதியல் மாற்றங்களின் மூலம் பாலிலிருந்து பல துணைப் பொருட்களைப் பெறலாம். பாலை நொதிக்கச் செய்வதன் மூலம் தயிரைப் பெறலாம். பின்னர் தயிரைக் கடைந்து கொழுப்புச்சத்து நிறைந்த வெண்ணெயையும், பக்கப் பொருளாக நீர்த்தன்மையான மோரையும் பெறலாம். வெண்ணெயைக் காய்ச்சி நறுமணமும் சுவையும் மிக்க நெய்யைப் பெறலாம். பாலை நொதிக்கச் செய்வதின் மூலம் பாலாடைக்கட்டியையும் பெற இயலும்.

பால் குழந்தைகளுக்கு இன்றியமையாத எளியவகை ஊட்டச்சத்தாக அமைந்திருக்கிறது. உலகில் பால் ஒரு முக்கிய உணவுப் பொருளாகவும் இருக்கிறது. அதனால். உலகில் பால் உற்பத்தி, சேமிப்பு, சேகரித்தல் அல்லது கொள்முதல், நுகர்தல், மற்றும் விற்பனை என்று பாலுக்கான தொழில்துறை மிக விரிவான ஒரு துறையாகவே இருக்கிறது.

2023 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, உலக அளவில் பசும் பால் உற்பத்தியில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் 143 மில்லியன் மெட்ரிக் டன் எனும் அளவில் முதலிடத்தில் இருக்கிறது. அதனையடுத்து, அமெரிக்க ஐக்கிய நாடுகள் 104.1 மில்லியன் மெட்ரிக் டன் எனும் அளவில் இரண்டாமிடத்திலும், இந்தியா 99.5 மில்லியன் மெட்ரிக் டன் எனும் அளவில் மூன்றாமிடத்திலும், சீனா 40.9 மில்லியன் மெட்ரிக் டன் எனும் அளவில் நான்காமிடத்திலும், ரசியா 32.3 மில்லியன் மெட்ரிக் டன் எனும் அளவில் ஐந்தாமிடத்திலும் இருக்கின்றன. அதனைத் தொடர்ந்து, பிரேசில் (24.5), நியூசிலாந்து (21), ஐக்கிய ராச்சியம் (15), மெக்சிகோ (13.25), அர்ஜெண்டினா (12), கனடா (10.33) என்று இருந்து வருகின்றன.

2015 ஆம் ஆண்டில் 497 மில்லியன் மெட்ரிக் டன் எனும் அளவிலிருந்த பசும் பால் உற்பத்தி, 2023 ஆம் ஆண்டில் 549 மில்லியன் மெட்ரிக் டன் எனும் அளவில் உயர்ந்திருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. 2022 ஆம் ஆண்டில், நியூசிலாந்து 7.8 பில்லியன் டாலர்கள் எனும் அளவிலான பாலை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, பால் ஏற்றுமதியாளர்களில் முதலிடத்தில் இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
மதிய உணவுக்குப்பின் சிறிது ஓய்வு எடுக்கலாமா?
World Milk Day

ஐக்கிய நாடுகள் அவையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு பால் தொடர்பாக வெளியிட்டிருக்கும் சில குறிப்புகள் கவனத்திற்குரியதாக இருக்கின்றன. அவை;

  • உலகளவில் 6 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பால் மற்றும் பால் பொருட்களை உட்கொள்கின்றனர். இந்த மக்களில் பெரும்பாலோர் வளரும் நாடுகளில் வாழ்கின்றனர்.

  • 1960s ஆண்டுகளின் முற்பகுதியில் இருந்து, தற்போது வளரும் நாடுகளில் தனி நபர் பால் நுகர்வு கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இருப்பினும், பால் நுகர்வு மற்ற கால்நடைப் பொருட்களை விட மெதுவாகவே வளர்ந்துள்ளது; இறைச்சி நுகர்வு மும்மடங்காகவும், முட்டை நுகர்வு ஐந்து மடங்காகவும் அதிகரித்துள்ளது.

  • கடந்த இரண்டு தசாப்தங்களாக, ஆப்பிரிக்காவின் சஹாரா பகுதிகளில் தனிநபர் பால் நுகர்வு குறைந்துள்ளது.

  • அர்ஜென்டினா, ஆர்மீனியா, ஆஸ்திரேலியா, கோஸ்டாரிகா, ஐரோப்பா, இஸ்ரேல், கிர்கிஸ்தான், மங்கோலியா மற்றும் வட அமெரிக்காவில் தனிநபர் பால் நுகர்வு (>150 கிலோ / தலை விகிதம் (capita) / ஆண்டு) என்று அதிக அளவாக இருக்கிறது.

  • இந்தியா, ஜப்பான், கென்யா, மெக்சிகோ, நியூசிலாந்து, பாகிஸ்தான், வடக்கு மற்றும் தென்னாப்பிரிக்கா, அண்மைக் கிழக்கின் பெரும்பகுதி மற்றும் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகளில் தனி நபர் பால் நுகர்வு (30 முதல் 150 கிலோ / தலை விகிதம் (capita) / ஆண்டு) என்று நடுத்தர அளவாக இருக்கிறது.

  • ஈரான், செனகல், வியட்நாம், மத்திய ஆப்பிரிக்காவின் பெரும்பகுதி மற்றும் கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பெரும்பாலான பகுதிகளில் தனி நபர் பால் நுகர்வு (<30 கிலோ/ தலை விகிதம் (capita) / ஆண்டு) என்று குறைவாக இருக்கிறது.

  • ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் 2 முதல் 4 சதவிகிதம் உணவு சக்தியை பால் வழங்குகிறது.

உலகம் முழுவதும் பாலின் தேவை அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. பாலின் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க பாலின் உற்பத்தியும் அதிகரிக்க வேண்டியிருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com