
உலகம் முழுவதும் உள்ள மக்கள் சந்தோஷமாக கொண்டாடும் பண்டிகை கிறிஸ்துமஸ். கிறிஸ்துமஸ் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரம், கிறிஸ்துமஸ் தாத்தா மற்றும் விதவிதமான கேக் வகைகள். கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிறது என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் கொண்டாட்டம். ஏனென்றால் சாண்டா க்ளாஸ் எனக்கு நல்ல பரிசுகள் தருவார் என்று ஆவலோடு குழந்தைகள் எதிர்பார்த்து காத்திருக்கும்.
குட்டையான, குண்டான உருவம், வெண்மையான தாடி, சிவப்பு வெல்வெட் உடை, தலையில் குல்லா அணிந்து, முதுகில் தொங்குகின்ற ஒரு நீண்ட பையில் பலவிதமான பரிசு பொருட்களை சுமக்கக் காட்சி தருபவர்தான் கிறிஸ்துமஸ் தாத்தா, சாண்டா கிளாஸ்.
மேற்கத்திய நாடுகளிலும் சில கீழை நாடுகளிலும் மட்டுமே காணப்பட்ட கிறிஸ்துமஸ் தாத்தா இன்றைக்கு உலகெங்கும் பரவி குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்ற வருகிறார். சாண்டா கிளாஸ் என்றால் அறியாத குழந்தைகளே இல்லை எனலாம்.
‘கிறிஸ்துமஸ் தாத்தா' எனப்படும் ‘சாண்டா கிளாஸ்' இனிப்புகளை அள்ளித் தந்து குழந்தைகளை உற்சாகப்படுத்துவார். இந்த கிறிஸ்துமஸ் தாத்தா எப்படி உருவானார் என்பது உங்களுக்கு தெரியுமா?
முதன்முதலில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் போட்டவர் செயிண்ட் நிக்கோலஸ். இவர் பிறந்தது தென் துருக்கியில் இருக்கும் லிசியாவில். 4-ம் நூற்றாண்டை சேர்ந்த நிக்கோலஸ் பிஷப் பதவியில் இருந்தவர். குழந்தைகளிடம் அதிக பிரியம் கொண்டவர். டிசம்பர் 6-ந் தேதி இரவே வந்து கிறிஸ்துமஸ் பரிசுகளை கொடுப்பார். பழங்கள், சாக்லெட்கள், சிறு பொம்மைகள், சிறு பொருட்களை பரிசாக வழங்குவார்.
16-ம் நூற்றாண்டில் சிலுவை போர் நடந்தபோது செயிண்ட் நிக்கோலஸ் ஐரோப்பாவிலிருந்து வெளியேற்றப்பட்டார். டச்சுக்காரர்கள் மட்டும் செயிண்ட் நிக்கோலஸின் பழக்கங்களைப் பின்பற்றினர்.
செயிண்ட் நிக்கோலஸ் மரித்த நாளான டிசம்பர் 6, புனித நாளாகக் கருதப்படுகிறது. 18ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவிற்கு குடி பெயர்ந்த டச்சு நாட்டவர், டிசம்பர் 6ஆம்தேதி செயிண்ட் நிகோலஸ் இறந்த தினத்தைக் கொண்டாடும் வழக்கத்தை ஆரம்பித்தனர். செயிண்ட் நிகோலஸின் டச்சுப் புனை பெயர் சின்டர் கிளாஸ். இதிலிருந்து உருவானதுதான் சாண்டா கிளாஸ் என்ற பெயர்.
அமெரிக்காதான் சாண்டா கிளாஸை பிரபலப்படுத்தியது. சாண்டா கிளாஸ் குண்டானவராக, வெள்ளை தாடியுடன், தொந்தி வயிறுடன், பல வண்ண உடையணிந்து வேடிக்கையானவராக சித்தரிக்கப்பட்டார். உண்மையில் ஏழைகள், இல்லாதவர்களுக்கு உதவும் பொருட்டே ‘கிறிஸ்துமஸ் தாத்தா' அவதரித்தார்.
கிறித்துமஸ் நாளுக்கு முதல் நாள் டிசம்பர் 24-ம்தேதி இரவில் இவர் குழந்தைகளுக்கு அன்பளிப்புகளை கொண்டு வருபவராகக் குறிக்கப்படுகிறார்.
எது எப்படி இருந்தாலும், கிறிஸ்துமஸ் தாத்தா என்பவர் இல்லாதவர்களுக்கு உதவ கூடிய ஒரு நல்ல மனம் கொண்ட மனிதராக உள்ளார் என்பதை நாமும் உணர்ந்து கிறிஸ்துமஸ் அன்று நம்மால் முடிந்ததை ஏழை எளியவர்களுக்கு உதவி செய்து இந்த 2024-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை இனிமையாக கொண்டாடுவோம்.
Merry Christmas and Happy New Year!