
உலக கிறித்தவ மக்களின் சமய மரபுகளுக்கு அடித்தளமாக விளங்கும் புனித நூல் பைபிள் எனும் விவிலியம். பைபிளின் விரிவாக்கம் BIBLE - Behold I Being The Life Eternal என்பதாகும். பைபிள் என்பது ஒரு தனிநபர் எழுதிய நூல் அல்ல. பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு, பல்வேறு காலங்களில், வெவ்வேறு மனிதர்களால் எழுதப்பட்ட பல தனித்தனி நூல்களின் தொகுப்பே பைபிள் ஆகும்.
பைபிள் (விவிலியம்) பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு என இரண்டு முக்கிய பிரிவுகளைக் கொண்டது. இது எபிரேய, அராமிக் மற்றும் கிரேக்கம் ஆகிய மூன்று மொழிகளில் சுமார் 40க்கும் மேற்பட்ட ஆசிரியர்களால் 1600 வருட இடைவெளியில் எழுதப்பட்டது. முதல் பைபிள் புத்தகம் கி.மு. 1500ல் வெளியிடப்பட்டது என்கிறார்கள். கடைசி புத்தகம் கி.பி. 95ல் வெளியிடப்பட்டது.
பைபிளில் பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என்று இரு பிரிவு உண்டு. பழைய ஏற்பாடு புத்தகங்களில் பெரும்பாலான பகுதிகள் எபிரேய மொழியில் எழுதப்பட்டது. சில பகுதிகள் அராமிய மொழியில் எழுதப்பட்டுள்ளது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்பு எழுதப்பட்ட புத்தகம் பழைய ஏற்பாடு என்றும், கிறிஸ்து பிறந்த பின் எழுதப்பட்டவை புதிய ஏற்பாடு என்றும் அழைக்கப்பட்டன. கி.பி. 369ல் பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு புத்தகங்கள் இணைக்கப்பட்டு ஒரே பைபிள் புத்தகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பைபிளில் '7' என்ற எண் 400 தடவைக்கு மேல் வருகிறது. பைபிளில் ஏழு சபை, ஏழு கொம்பு, ஏழு முத்திரை, ஏழு கலசங்கள் என்று காணப்படுகிறது. சிலுவையில் இயேசு உதிர்த்த வார்த்தைகள் ஏழு.
உலகிலேயே மிக அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரே புத்தகம் பைபிள்தான். 115 இந்திய மொழிகள் உள்பட இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மொழிகளில் அது மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
சந்திரனில் முதல் முறையாக கால் பதித்த ஆம்ஸ்ட்ராங் பைபிளை மைக்ரோ பிலிமாக மாற்றி சந்திரனில் வைத்தார். அவருடன் சென்ற ஆல்ட்ரின், காலின்ஸ் ஆகிய விஞ்ஞானிகள் பைபிளின் முதல் வாசகமான, ‘ஆதியிலே தேவன் வானத்தையும், பூமியையும் சிருஷ்டித்தார்’ என்ற வாசகத்தை படித்தனர். அதன் பிறகே ஆராய்ச்சியை துவங்கினர்.
ஹார்ட் வெல் என்பவர் 17 வருடங்கள் ஆங்கில பைபிள் பற்றி ஆய்வு செய்து கூறிய விபரங்கள்:
பைபிள் 35 லட்சத்து 66 ஆயிரத்து 480 எழுத்துகளையும், 7 லட்சத்து 73 ஆயிரத்து 693 வார்த்தைகளும், 31 ஆயிரத்து 102 வாசகங்களையும், ஆயிரத்து 189 பிரிவுகளையும், 60 புத்தகங்களையும் கொண்டது என்றும் பைபிளில் பெரிய அத்தியாயம் 119வது அத்தியாயம் என்றும், 117வது அத்தியாயம்தான் சிறிய அத்தியாயம். மேலும், அதில் ‘அண்ட் (and) என்ற வார்த்தையை 46 ஆயிரத்து 277 தடவையும். கடவுள் (lord) என்ற வார்த்தையை 1855 இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்கிறார்.
உலகின் மிகச் சிறிய பைபிள் 1910ம் ஆண்டு இத்தாலியில் அச்சிடப்பட்டதுதான். இதன் நீளம் 0.5 மி.மீ., அகலம் 0.5 மி.மீ. ஜெர்மன் நாட்டிற்கு விஜயம் செய்த ஜெர்மன் நாட்டை தாயகமாகக் கொண்ட போப் ஆண்டவர் 2005ம் ஆண்டு அங்கு ஒரு மாதா கோயிலுக்குச் சென்றுபோது இந்த பைபிளை கண்டெடுத்தார். உலகின் மிகப் பழைமையான பைபிள் 9ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து 10ம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஹிப்ரூ மொழியில் எழுதப்பட்டதுதான். கையெழுத்து பிரதியான இந்த 1100 ஆண்டுகள் பழைமையான பைபிள் 2023ம் ஆண்டு மே 18ம் தேதி சோதேபீஸ் ஏல நிறுவனத்திற்கு வந்து ஏலமிடப்பட்டது. 4 நிமிட நேரத்தில் அது 38.1 மில்லியன் டாலர்களுக்கு விற்கப்பட்டது. உலகிலேயே மிக அதிக விலைக்கு ஏலம் போன பைபிள் இதுதான். இந்திய மதிப்பில் ஏலம் போன தொகை 313 கோடி ரூபாய்.
டென்மார்க் நாட்டைச் சேர்ந்த சீகன்பால்க் என்பவர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடிக்கு 1706ம் ஆண்டு வந்தார். இரண்டு ஆண்டுகளில் தமிழை பேசவும் எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டு பைபிளை தமிழில் மொழிபெயர்த்தார். 1708ம் ஆண்டு எழுத ஆரம்பித்து 1711ல் முடித்தார். 1713ம் ஆண்டு முதல் தமிழ் பைபிள் புத்தகம் வெளிவந்தது. இந்திய மொழிகளிலேயே முதன் முதலாக தமிழில்தான் பைபிள் எனும் விவிலியம் மொழிபெயர்க்கப்பட்டது. அதன் பின்னர் 250 ஆண்டுகளில் 8 முறை மொழிபெயர்ப்பு திருத்தி அமைக்கப்பட்டது.
கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள் மிகப் பெரியது. அதைப் படித்து முடிப்பதற்கு பல நாட்கள் ஆகும். இந்நிலையில், 100 நிமிடங்களில் படித்து முடிக்கக் கூடிய ஒரு பைபிளை லண்டன் காண்டன்பரி கதிட்ரல் வெளியிட்டது. பைபிளின் சாராம்சங்களை மட்டும் கொண்ட சுருக்கப் புத்தகம் இதுவாகும். இந்த பைபிளை சுருக்குவதற்கு மைக்கேல் ஹிண்டனுக்கு இரண்டு ஆண்டுகள் ஆனது. இந்த பைபிளை ஒரு மணி 40 நிமிடங்களில் படித்து முடித்து விடலாம்.