உலக மிதி வண்டிகள் நாள் - ஜூன், 03! 6 வகையான மிதி வண்டிகள்!

World Bicycle Day
World Bicycle Day
Published on

ஜூன் 3 ஆம் நாள் உலக மிதிவண்டி நாளாக (World Bicycle Day) அமைந்திருக்கிறது. இந்நாளில், இன்றையப் பயன்பாட்டிலிருக்கும் மிதிவண்டிகளைப் பற்றிச் சிறிதாவது அறிந்து கொள்வது நல்லது. பொதுவாக மிதிவண்டிகளை இங்கு, பயன்பாடு, சுற்றுலா, பந்தயம், மலை, கலப்பு மற்றும் கரட்டுநில இருசக்கரப் போட்டிக்கான மிதிவண்டி என்று ஆறு வகைகளாகப் பிரித்துக் கொள்ளலாம்.

1. பயன்பாட்டு மிதிவண்டி

வளரும் நாடுகளில் அடிப்படைப் போக்குவரத்துக்கு மிதி வண்டிகளின் தேவை அதிகமாகவே இருக்கிறது. எனவே, இங்கு நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் மிதிவண்டியைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். வளர்ந்த நாடுகளில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் குறுகியப் பயணத்திற்கு இவ்வகை மிதிவண்டிகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இவ்வகையான மிதிவண்டிகள் கனமான சட்டங்கள் (Frames), தட்டையான கைப்பிடிகள் (Handlebars), அகலமான வட்டகைகள் (Tyres) மற்றும் இருக்கைகள் (Seats), எளிய நிறுத்தக்கருவிகள் (Brakes) மற்றும் பொதுவாக ஒற்றை வேகம் (Single Speed) போன்றவற்றைக் கொண்டிருக்கின்றன. 14 கிலோ (30 பவுண்டுகள்) எடையுடன் கடுமையாக உருவாக்கப்பட்ட இம்மிதி வண்டிகள் பராமரிக்க எளிதானவை மற்றும் விலை மலிவானவை. 1963 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பொறியாளர் அலெக்ஸ் மௌல்டன் என்பவரால் உருவாக்கப்பட்ட தனித்துவமான மிதிவண்டியிலிருந்து பெறப்பட்ட மிதி வண்டிகளாகவே இவ்வகை வண்டிகள் அமைந்திருக்கின்றன.

2. சுற்றுலா மிதிவண்டி

சுற்றூலா மிதிவண்டிகள் நிலையான பயணத்தை வழங்குகின்றன. இவை மூன்று தொடர் சக்கரங்கள் மற்றும் அடுக்குச் சட்டங்களைக் கொண்டு, சாமான்களை (கூடைகளை) எடுத்துச் செல்வதற்கான சிறப்பு வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மிதிவண்டிகள் இலகு ரகச் சட்டங்கள், 14 முதல் 27 வேகம், குறுகிய வட்டகைகள் மற்றும் சேணங்கள் மற்றும் சரிவு பாணி (Drop - Style) கைப்பிடிகளைக் கொண்டிருக்கின்றன. இந்த மிதிவண்டிகளின் எடை 11 முதல் 14 கிலோ (25 முதல் 30 பவுண்டுகள்) வரை இருக்கின்றன.

3. பந்தய மிதிவண்டி

சாலைப் பந்தயங்களுக்கான மிதிவண்டிகள் அதிகபட்ச வேகத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை 9 கிலோ (சுமார் 20 பவுண்டுகள்) எடையுள்ளதாக இருக்கும். இவ்வகை மிதிவண்டிகள் மிகவும் இலகுவான சட்டங்கள், குறுகிய உயர்

அழுத்த வட்டகைகள், கைவிடப்பட்ட கைப்பிடிகள் மற்றும் குறைந்தது 16 வேகம் கொண்ட பற்சக்கரங்களைக் கொண்டுள்ளன. இவற்றுள் தடகளப் பந்தயத்திற்கான மிதிவண்டிகள் ஒற்றை நிலையான பற்சக்கரத்தைக் கொண்டிருக்கும்.

4. மலையேற்றத்திற்கான மிதிவண்டி

மலையேற்றத்திற்கான மிதிவண்டிகளில் இழுவைக்கான கைப்பிடிகள், தட்டையான கைப்பிடிகள், 27 வேகம் வரையிலான அகலமான பற்சக்கரங்கள் மற்றும் சக்திவாய்ந்த நிறுத்தக் கருவிகளுடன் கூடிய அகலமான குறைந்த அழுத்த வட்டகைகளைக் கொண்டுள்ளன. அவற்றின் தட்டையான கைப்பிடிகள் நிமிர்ந்து சவாரி செய்யும் நிலைக்கு உதவுகின்றன. பல மலையேற்ற மிதிவண்டிகள் மோட்டார் மிதிவண்டிகளைப் போலவே முன் தொங்கல்களைக் கொண்டுள்ளன. முழுத் தொங்கல்கள் பின் சக்கர இயக்கத்தை அனுமதிக்கும் வழக்கத்திற்கு மாறான சட்டங்களைக் கொண்டுள்ளன. மலையேற்ற மிதிவண்டிகள் 11 முதல் 16 கிலோ (25 பவுண்டுகளுக்கும் குறைவான எடையில் இருந்து சுமார் 35 பவுண்டுகள்) வரை இருக்கும்.

இதையும் படியுங்கள்:
பெற்றோரே குழந்தைகளின் முதன்மை பராமரிப்பாளர்கள்!
World Bicycle Day

5. கலப்பு மிதிவண்டிகள்

கலப்பு செய்யப்பெற்ற மிதிவண்டிகள் சாலையில் ஓடும் மிதிவண்டிகள் மற்றும் மலையேற்றத்திற்கான மிதிவண்டிகள் என்று இரண்டு நிலைகளையும் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கின்றன. இவ்வகை மிதிவண்டிகள் மிகவும் பிரபலமாகிவிட்டன. பொதுவாக எளிமையான பொழுதுபோக்கிற்கும் நகர்ப்புறப் பயணத்திற்கும் இம்மிதிவண்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகை மிதிவண்டிகளில் பெரும்பாலானவை தட்டையான கைப்பிடிகள் மற்றும் நடைபாதைச் சாலைகளுக்காக வடிவமைக்கப்பட்ட நடுத்தர அகல வட்டகைகளைக் கொண்டுள்ளன.

6. கரட்டு நில இருசக்கரப் போட்டிக்கான மிதிவண்டிகள்

இவ்வகையான மிதிவண்டிகள் 1970 ஆம் ஆண்டுகளின் முன்பகுதியில் கரட்டு நில இருசக்கரப் போட்டிகளுக்காக உருவக்கப்பட்டன. அவை இறுக்கமான திருப்புகைகள், கரை விளிம்புகள் மற்றும் தாவல்கள் நிறைந்த கரடு முரடான தடங்களில் பந்தயத்திற்குப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டன. இவ்வகை மிதிவண்டிகள் 20 அங்குலம் (51 செ.மீ) விட்டம் கொண்ட சக்கரங்கள், ஒரு சிறிய சட்டத்தில் பொருத்தப்பட்டவையாக இருக்கின்றன. ஒற்றை வேகம் உள்ள இம்மிதி வண்டிகளில் இருக்கை குறைவாகவே உள்ளது. கைப்பிடி அதிகமாக உள்ளது. இவ்வகை மிதிவண்டிகள் கரட்டு நிலங்களை விட்டு நகர்ந்து, தற்போது புறநகர் மற்றும் நகரத் தெருக்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த ஆறு வகையான, பொதுவான மிதிவண்டிகள் தவிர்த்து, வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்கேற்ப சிறு மாறுதல்களுடன் பல்வேறு வடிவமைப்புகளைக் கொண்ட மிதிவண்டிகள் உருவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உடற்பயிற்சிக்கென

தனியாகவும் மிதிவண்டி வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com