World Elderly Day 2025
World Elderly Day 2025

இன்று உலக முதியோர் தினம்! முதுமை ஒரு நோயல்ல, ஒரு வரம்!

Published on

இன்று அக்டோபர் 1, சர்வதேச முதியோர் தினம். அனுபவத்தின் கருவூலமாகவும், சமூகத்தின் வழிகாட்டிகளாகவும் திகழும் மூத்த குடிமக்களைக் கொண்டாடும் இந்த நாளில், ஐக்கிய நாடுகள் சபை இந்த ஆண்டுக்கான ஒரு மிகச் சக்திவாய்ந்த கருப்பொருளை முன்வைத்துள்ளது: "Older Persons Driving Local and Global Action: Our Aspirations, Our Well-Being, Our Rights". இந்தக் கருப்பொருள், முதியோரை வெறும் பயனாளிகளாகப் பார்க்காமல், சமூக மாற்றத்தை உருவாக்கும் சக்திவாய்ந்த முகவர்களாக அங்கீகரிக்கிறது. 

முதுமையின் புதிய இலக்கணம்!

இந்த ஆண்டின் கருப்பொருள், முதியோரின் பங்களிப்பிற்கும், உரிமைகளுக்கும் வலுவான குரல் கொடுக்கிறது. அவர்கள் தங்கள் உள்ளூர் சமூகங்களிலும், உலக அளவிலும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவர்கள் என்பதை இது வலியுறுத்துகிறது. அவர்களின் லட்சியங்கள் மதிக்கப்பட வேண்டும், அவர்களின் நல்வாழ்வு உறுதி செய்யப்பட வேண்டும், அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே இதன் சாராம்சம். முதுமை என்பது ஓய்வுக்கான காலம் மட்டுமல்ல, அது புதிய இலக்குகளை நிர்ணயித்து, புதிய கனவுகளைக் காணக்கூடிய ஒரு புதிய வாய்ப்பு மற்றும் வலிமையின் காலகட்டமாகும்.

முதுமையை நோயாகப் பார்க்காதீர்கள்!

வயதாகும்போது, உடலில் பல மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு. ஆனால், நாம் பெரும்பாலும் இந்த இயற்கையான மாற்றங்களை நோய்களாகக் கருதி, தேவையற்ற அச்சத்திற்கும், மருத்துவ சிகிச்சைகளுக்கும் ஆளாகிறோம். பல சமயங்களில், உங்கள் உடல்நலம் குன்றவில்லை, அது வயதாகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
கவிதை - இளமை சொன்னதும் முதுமை மறுத்ததும்!
World Elderly Day 2025
  • சிறு மறதிகள் நோயல்ல: சாவியை எங்கே வைத்தோம் என்பதை மறந்துவிட்டு, சிறிது நேரத்திற்குப் பிறகு நீங்களே அதைக் கண்டுபிடித்தால், அது அல்சைமர் அல்ல. அது, தேவையற்ற தகவல்களை நீக்கி, மூளை தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ளும் ஒரு வழிமுறை.

  • தள்ளாட்டம் பக்கவாதமல்ல: நடை மெதுவாக மாறுவதும், கால்கள் தள்ளாடுவதும் தசை சிதைவின் அறிகுறியே. இதற்கு மருந்து தேவையில்லை, மிதமான உடற்பயிற்சியே தீர்வு.

  • தூக்கமின்மை ஒரு மாற்றமே: வயதாகும்போது உறக்கத்தின் தன்மை மாறும். இதற்காக உறக்க மாத்திரைகளை நாடும்போது, அது அறிவாற்றல் குறைபாடு போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பகலில் சிறிது நேரம் வெயிலில் நிற்பதும், ஒரு குறிப்பிட்ட நேர வழக்கத்தைப் பின்பற்றுவதுமே சிறந்த உறக்க மருந்தாகும்.

  • உடல் வலி வாதமல்ல: உடலில் ஏற்படும் பல வலிகள், நரம்புகள் வயதாவதால் ஏற்படும் இயல்பான எதிர்வினைகளே. வலி நிவாரணிகளை விட, உடற்பயிற்சி, இயன்முறை சிகிச்சை, மற்றும் வெந்நீர் ஒத்தடம் போன்றவை சிறந்த பலனைத் தரும்.

மாற்ற வேண்டிய மருத்துவக் கண்ணோட்டம்!

முதியோருக்கான மருத்துவப் பரிசோதனை அளவுகோல்கள், இளைஞர்களுடையதிலிருந்து மாறுபட வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது. உதாரணமாக, முதியோருக்கு ரத்த அழுத்தம் 150/90 mmHg வரை இருப்பது இயல்பானதாகக் கருதப்படுகிறது. எனவே, ஒவ்வொரு அசௌகரியத்தையும் நோயாகக் கருதிப் பயப்படத் தேவையில்லை.

குடும்பத்தின் பங்கு!

பிள்ளைகளின் மிக முக்கியமான கடமை, தங்கள் பெற்றோரை ஒவ்வொரு சிறு பிரச்சனைக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது மட்டுமல்ல. அவர்களுடன் நேரம் செலவிடுவது, நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்வது, மனம் விட்டுப் பேசுவது போன்றவையே அவர்களுக்கு மிகச் சிறந்த மருந்துகளாகும். தேவையற்ற மருத்துவ அறிக்கைகளைக் காட்டி அவர்களைப் பயமுறுத்துவதை விட, அன்பும், ஆதரவும், மகிழ்ச்சியான சூழலுமே அவர்களின் ஆயுளை நீட்டிக்கும்.

இதையும் படியுங்கள்:
முதுமை ஒரு வரம்: முதியோர் தினத்தில் மனதை உலுக்கும் நிஜங்கள்!
World Elderly Day 2025

முதுமை நமது எதிரி அல்ல; அது வாழ்வின் தவிர்க்க முடியாத, அழகான ஒரு பருவம். நமது உண்மையான எதிரி, உடல் அல்லது மன ரீதியான தேக்கநிலையே. இந்த முதியோர் தினத்தில், மூத்த குடிமக்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதோடு, முதுமையை ஒரு நோயாகக் கருதும் மனப்பான்மையை மாற்றி, அதை ஆரோக்கியத்துடனும், நேர்மறையாகவும் அணுகுவழிவகுப்போம். சுறுசுறுப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதே நீடித்த ஆயுளின் ரகசியம்.

logo
Kalki Online
kalkionline.com