World first aid day: ஒவ்வொருவரும் முதலுதவிக்கான அடிப்படைக் குறிப்புகளைத் தெரிந்து வைத்துக் கொண்டிருக்க வேண்டும். அவை;
முதலுதவி வசதிகளுடன் கூடிய முதலுதவிப் பெட்டியை எப்போதும் வீட்டில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அதில் அவசரத் தேவைக்கான மருந்துகள் இருத்தல் வேண்டும்.
முதலுதவிப் பெட்டி மற்றும் மருந்துகளைக் குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்யும் பொழுது, முதலுதவி செய்யும் நபரின் பாதுகாப்பைக் கவனத்தில் கொள்ளல் அவசியம்.
அவசர சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இயல்பாக மூச்சு விடுவதற்குத் தேவையான சூழ்நிலையினை ஏற்படுத்தித் தர வேண்டும். இல்லையெனில் செயற்கை சுவாசத்திற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
பாதிக்கப்பட்ட நபரின் உடலில் இருந்து இரத்தம் அதிகமாக வெளியேறும் நிலையிலும், பாதிக்கப்பட்ட நபர் விசம் உட்கொண்ட நிலையிலும், இதய மற்றும் சுவாச இயக்கங்கள் நிற்பது போன்ற நிலையிலும் மிகவும் வேகமாக செயல்படுதல் அவசியம். ஒவ்வொரு விநாடியும் மிக மிக முக்கியமானதாகும்.
பாதிக்கப்பட்டவர்கள் கழுத்திலோ அல்லது பின்புறத்திலோ காயம் இருந்தால் உடனே மருத்துவ வசதி அளிக்க வேண்டும். வாந்தி செய்து ஆபத்துக் கட்டத்தைத் தாண்டி விட்டால், ஒருசாய்த்துப் படுக்க வைத்து வெது வெதுப்பாக வைப்பதற்கு போர்வை அல்லது கம்பளியால் போர்த்தி விட வேண்டும்.
முதலுதவி அளிக்கும் போதே மருத்துவ உதவிக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
அமைதியாய் இருந்து பாதிக்கபட்டவருக்கு மனத்துணிவை அளிக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட நபர் மயக்க நிலையில் இருக்கும் போது, திரவப் பொருட்கள் எதையும் கொடுக்கக்கூடாது.
பாதிக்கப்பட்ட நபரின் மருத்துவ அடையாள அட்டை மற்றும் அவர்களுக்கு ஒவ்வாமை தரும் மருந்துகளின் குறிப்புகள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
வெட்டுக்காயங்களுக்கான முதலுதவி அளிக்கப்படும் போது,
காயம்பட்ட இடத்தை சோப்பு மற்றும் தண்ணீரால் சுத்தமாகக் கழுவி விட வேண்டும்.
இரத்தம் நிற்கும் வரை அழுத்தம் கொடுக்க வேண்டும்.
காயத்தைக் கட்டுவதற்கு சுத்திகரிக்கப்பட்ட பேண்டேஜ் துணியைப் பயன்படுத்த வேண்டும்.
ஆழமான காயமாக இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
இதேப் போன்று, சிறுகாயங்கள் மற்றும் சிராய்ப்புகள் எனில்,
வெதுவெதுப்பான நீரில் சோப்பினால் காயத்தினை நன்றாகக் கழுவ வேண்டும்.
இரத்தக்கசிவு இருப்பின் சுத்தமான பேண்டேஜ் துணியினால் காயத்தினைக் கட்ட வேண்டும். இது காயத்தின் மீது தொற்று ஏற்படுவதைத் தவிர்க்கிறது.
காயத்தின் மீது வீக்கம், காயம் சிவந்து காணப்படுதல், வலி, காய்ச்சல், காயத்தில் சீழ்பிடித்தல் போன்றவை தொற்று ஏற்பட்ட காயத்திற்கான அறிகுறிகள் என்று கொள்ளலாம்.
மூச்சுத்திணறலுக்கான முதலுதவி சிகிச்சையின் போது,
பாதிக்கப்பட்ட நபர் இருமினால் உடனடி ஆபத்தான நிலையில் இல்லை என்று கருதலாம். அவ்வாறு இருமும் போது, தொண்டையில் அடைத்துள்ள பொருள் வெளியே வராமலிருந்தால், சிரமத்துடன் மூச்சு விடும் நிலை நீடித்தால், பாதிக்கப்பட்ட நபரின் உடல் நீலநிறமாக மாறுவதுடன் மூச்சுத்திணறலின் அறிகுறிகள் இருப்பின், அந்நபரிடம் மூச்சுத்திணறலினால் பாதிப்பு இருக்கிறதா என்பதைக் கேட்டறிதல் அவசியம்.
பாதிக்கபபட்ட நபரால் பேச முடியாத நிலையிலும், அவரால் தன் தலை அசைத்து பதிலுரைக்க முடியும். இவ்வாறு கேட்பது மிக முக்கியம். ஏனெனில் மாரடைப்பினால் பாதிக்கப்பட்ட நபருக்கும் இதே போன்ற அறிகுறிகள் இருக்கும், ஆனால் அவரால் பேச இயலும். பாதிக்கப்பட்ட நபரை மருத்துவரிடம் அழைத்து செல்வதில் தாமதம் செய்யக்கூடாது.
மயக்கமடைந்த நிலையில் முதலுதவி சிகிச்சையின் போது,
பாதிக்கப்பட்ட நபரை முன்புறமாக சாய்க்க வேண்டும். தலையை முழங்கால்களுக்கு நேராகக் கீழே சாய்த்துக் கொள்ள வேண்டும். தலையானது இதயப் பகுதியை விடக் கீழாகத் தாழும் போது மூளைப் பகுதியின் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. பாதிக்கப்பட்ட நபர் சுயநினைவை இழக்கும் போது, பாதிக்கப்பட்ட நபரின் தலை குனிந்தும், கால்களை உயர்த்தியுள்ள நிலையில் படுக்க வைக்கவும் வேண்டும். இறுக்கமான உடைகளைத் தளர்த்தி விட வேண்டும், குளிர்ந்த ஈரமான துணிகளை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் போட வேண்டும்.
மேற்கண்ட நடவடிக்கைகளின் மூலமாக பாதிக்கப்பட்ட நபர் உடனடியாக சுயநினைவைப் பெற்றால், பாதிக்கப்பட்ட நபரிடம் அவரைப் பற்றிய கேள்விகளை கேட்பதன் மூலமாக அவர் முழுமையாக சுயநினைவப் பெற்றுள்ளாரா என்பதனை உறுதிசெய்து கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட நபரை உடனே மருத்துவரிடம் அழைத்துச் செல்வது மிகச் சிறந்தது.
வலிப்பு வந்த நிலையில் முதலுதவி சிகிச்சையின் போது,
வலிப்பு என்பது திடீரென ஒருவரின் உணர்வில்லாமல் ஏற்படக்கூடிய திசுக்களின் சுருங்குதல் ஆகும். திடீரென ஏற்பட்ட உடல்நலக் கேட்டினாலோ அல்லது "எபிலப்சி" என்ற நோயினாலோ ஒருவருக்கு வலிப்பு ஏற்படலாம். பாதிக்கப்பட்ட நபரின் சுவாசம் நின்று போகும் தருவாய் ஏற்பட்டால், ஆபத்தான நிலையாகும். இது போன்ற தருணங்களில் மருத்துவரின் உதவி அத்தியாவசியமான ஒன்றாகும். இந்நிலையில்,
பாதிக்கப்பட்ட நபரின் அருகில் உள்ள அனைத்துப் பொருட்களையும் அப்புறப்படுத்த வேண்டும். மேலும் தலைக்கு அடியில் மென்மையான ஏதாவது ஒரு பொருளை வைக்க வேண்டும்.
நோயாளிகளின் பற்களுக்கு இடையிலோ அல்லது வாயிலோ எத்தகைய பொருட்களையும் கொடுக்கக்கூடாது.
எத்தகைய திரவ உணவுப் பொருட்களையும் கொடுக்கக்கூடாது.
மூச்சு இழக்க நேரிட்டால், பாதிக்கப்பட்ட நபரின் சுவாசப் பாதையில் அடைப்பு உள்ளதா என்று பார்ப்பதுடன், நல்ல காற்றோட்ட வசதி செய்ய வேண்டும்.
மருத்துவ உதவி கிடைக்கும் வரை பரபரப்பு இல்லாத அமைதியான சூழலை பாதிக்கப்பட்ட நபருக்கு ஏற்படுத்தித் தரவேண்டும்.
பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர் வலிப்பு நின்றவுடன், மயக்க நிலை அல்லது மீண்டும் வலிப்பினாலோ பாதிக்கப்படக்கூடும்.
முடிந்த வரையில் உடனடியாக, பாதிக்கப்பட்ட நபரை மருத்துவரிடம் கொண்டு செல்ல வேண்டும்.
வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புக்கு முதலுதவி அளிக்கும் நிலையில்,
வெப்பத்தினால் பாதிக்கப்பட்ட நபரின் உடலை உடனடியாக குளிர்விக்க வேண்டும்.
முடிந்தால் பாதிக்கப்பட்ட நபரை குளிர்ந்த நீரில் இடலாம். மேலும் குளிர்ந்த ஈரமான துணியால் உடலைப் போர்த்தி விடலாம். ஐஸ் கட்டியினால் ஒத்தடம் கொடுக்கலாம்.
உடல்சூடு சாதாரணமான நிலைக்கு வநதவுடன், பாதிக்கப்பட்ட நபரை, குளிர்ந்த இடத்தில் ஓய்ந்திருக்கச் செய்யவும்
உடல்சூடு அதிகரிக்கும் போது மீண்டும் குளிர்விக்கும் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
எவ்விதமான மருந்துகளையும் கொடுக்கக் கூடாது.
மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
பொதுவாக, முதலுதவி சிகிச்சையில் ஒருவர் உடல் நிலையில் முன்னேற்றம் மேற்பட்டு சரியாகி விட்டது என்று கருதினாலும், முதலுதவிச் சிகிச்சைக்குப் பின்பு, மருத்துவரிடம் அழைத்துச் சென்று, தகுந்த மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)