செப்டம்பர் மாதம் 14 அல்லது செப்டம்பர் மாதத்தில் வரும் இரண்டாம் சனிக்கிழமை உலக முதலுதவி நாளாகக் கொண்டாடப்படுகின்றது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால் உருவாக்கப்பட்ட இந்நாள், நெருக்கடி நிலைமையில் உயிரை காப்பாற்றுவதன் அவசியத்தை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதாகும்.
முதலுதவி என்பது ஒரு நோய் அல்லது காயத்திற்குக் கொடுக்கும் முதற்கட்டக் கவனிப்பாகும். சிறந்த மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வரை இம்முதலுதவி ஒரு நோய்வாய்ப்பட்ட அல்லது காயப்பட்ட நபர்க்கு அளிக்கப்படும். இது மருத்துவத்துறையில் சிறப்புடைய வல்லுநர் அல்லாதவர் எனினும் பயிற்சி பெற்ற ஒரு நபரால் அளிக்கப்படும். சில கட்டுப்படுத்தக்கூடிய நோய்கள் மற்றும் சிறிய காயங்களுக்கு முதலுதவி அளித்த பிறகு மருத்துவத் தலையீடு தேவையில்லாமலேப் போகலாம். முதலுதவி சில சமயங்களில் உயிர் காப்பாற்றுகிற திறன்களை உள்ளடக்கியது. குறைந்த உபகரணங்களைக் கொண்டே செயல்படுத்தும் வகையில் முதலுதவி அமைகிறது.
முதலுதவியின் பழக்கம் முதன்முதலில் பதினோராம் நூற்றாண்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இப்பழக்கம் இடைக்காலங்களில் வெகுவாகக் கைவிடப்பட்டது. அதன் பிறகு, 1859 ஆம் ஆண்டில் தான் ஜீன் ஹென்ரி டுனன்ட், சல்பிரினோ போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யக் கிராமவாசிகளை திரட்டினார். அவர்கள் முதலுதவியையும் செய்தனர். நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், நான்கு நாடுகள் ஜெனீவாவில் சந்தித்து, போரால் பாதிக்கப்பட்ட வீரர்களுக்கு உதவுவது என்ற நோக்கத்தோடு ஒரு சங்கத்தை உருவாக்கின. அதுதான் பின்னாளில் செஞ்சிலுவை சங்கமாக வளர்ந்தது.
அதன் பிறகு புனித ஜான் அவசர ஊர்தி 1877 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அது முதலுதவியை கற்பிப்பதற்கென தொடங்கப்பட்டது. அதன் பிறகு, அதனுடன் நிறைய சங்கங்கள் இணைந்தன. இது போன்ற செயல்களால் முதலுதவி என்னும் சொல் 1878 ஆம் ஆண்டில் முதன்முதலில் வழங்கப்பெற்றது. பல தொடர்வண்டி மையங்களிலும், சுரங்கங்களிலும், அவசர ஊர்தி சேவைகள் முதல் சிகிச்சை (First Treatment) என்ற பெயரிலும், தேசிய சேவை (National Aid) என்ற பெயரிலும் செய்யப்பட்டன.
1878 ஆம் ஆண்டில் அறுவை சிகிச்சை நிபுணர் பீட்டர் ஷெப்பர்ட் பொதுமக்களுக்கு முதல் உதவி திறன்கள் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை வெளிக்கொண்டு வந்தார். டாக்டர் கோல்மனுடன் இணைந்து ஷெப்பர்ட், அவர் உருவாக்கிய பாடத்திட்டத்தை கொண்டு வுல்விச்சில் உள்ள பிரஸ்பைடிரியன் பள்ளியில் பாடம் நடத்தினார். ஷெப்பர்ட்தான் முதன்முதலில் காயப்பட்டோருக்கான முதலுதவி என்ற வார்த்தையை பயன்படுத்தினார். இச்செயல்களுக்குப் பிறகு முதலுதவியின் பயிற்சி வகுப்புகள் வெகுவாக நடத்தப்பட்டன.
முதலுதவியின் முக்கிய நோக்கங்களை 1. உயிரைப் பாதுகாத்தல், 2. நிலமை மோசமடையாமல் தடுத்தல், 3. குணமடைய முன் ஏற்பாடு செய்தல் என்று மூன்று வகைகளாகச் சொல்லலாம்.
முதலுதவிக்கான அடிப்படைக் குறிப்புகளாக, கீழ்க்காணும் குறிப்புகளை நினைவில் கொள்ளலாம்.
முதலுதவி வசதிகளுடன் கூடிய முதலுதவிப் பெட்டியை எப்போதும் வீட்டில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அதில் அவசர தேவைக்கான மருந்துகள் இருத்தல் வேண்டும்.
முதலுதவிப் பெட்டி மற்றும் மருந்துகளை குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்யும் பொழுது, முதலுதவி செய்யும் நபரின் பாதுகாப்பைக் கவனத்தில் கொள்ளல் அவசியம்.
அவசர சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இயல்பாக மூச்சுவிடுவதற்குத் தேவையான சூழ்நிலையினை ஏற்படுத்தித் தர வேண்டும். இல்லையெனில் செயற்கை சுவாசத்திற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
பாதிக்கப்பட்ட நபரின் உடலில் இருந்து இரத்தம் அதிகமாக வெளியேறும் நிலையிலும், பாதிக்கப்பட்ட நபர் விஷம் உட்கொண்ட நிலையிலும், இதய மற்றும் சுவாச இயக்கங்கள் நிற்பது போன்ற நிலையிலும் மிகவும் வேகமாக செயல்படுதல் அவசியம். ஒவ்வொரு விநாடியும் மிக மிக முக்கியமானதாகும்.
பாதிக்கப்பட்டவர்கள் கழுத்திலோ அல்லது பின்புறத்திலோ காயம் இருந்தால் உடனே மருத்துவ வசதி அளிக்க வேண்டும். வாந்தி செய்து ஆபத்துக் கட்டத்தைத் தாண்டி விட்டால், ஒருசாய்த்துப் படுக்க வைத்து வெது வெதுப்பாக வைப்பதற்கு போர்வை அல்லது கம்பளியால் போர்த்தி விட வேண்டும்.
முதலுதவி அளிக்கும் போதே மருத்துவ உதவிக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்
அமைதியாய் இருந்து பாதிக்கபட்டவருக்கு மனத்தைரியத்தை அளிக்க வேண்டும்
பாதிக்கப்பட்ட நபர் மயக்க நிலையில் இருக்கும் போது திரவப்பொருட்களை எதையும் கொடுக்கக்கூடாது.
பாதிக்கப்பட்ட நபரின் மருத்துவ அடையாள அட்டை மற்றும் அவர்களுக்கு ஒவ்வாமை தரும் மருந்துகளின் குறிப்புகள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
உயிர்காக்கும் முதலுதவியைப் பற்றி அனைவரும் அறிந்து வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் நம்முடன் இருப்பவர்களுக்கு ஆபத்து வரும் நிலையில், அவர்களைக் காப்பாற்ற முடியும் என்பதை இந்நாளில் அனைவருக்கும் வலியுறுத்தலாம்.