உங்கள் சிறுநீரகங்களைப் பாதுகாக்க 8 பொன்னான விதிகள்!

உலக சிறுநீரக தினம் (WORLD KIDNEY DAY) - மார்ச் 12, 2026!
WORLD KIDNEY DAY 2026
WORLD KIDNEY DAY 2026
Published on

உலக சிறுநீரக தினம் (WORLD KIDNEY DAY) - மார்ச் 12, 2026

அன்பான கல்கி ஆன்லைன் வாசகர்களே!

அனைவருக்கும் வணக்கம். இன்று உலக சிறுநீரக தினம்!

சிறுநீரக நோய்கள் என்பவை பெரும்பாலும் எந்தவொரு வெளிப்படையான அறிகுறியும் இன்றி நம்மைத் தாக்கும் Silent Killers. இவை நமது அன்றாட வாழ்க்கைத் தரத்தை முற்றிலுமாகப் பாதித்துவிடும் அபாயம் கொண்டவை. இருப்பினும், சில எளிய வாழ்க்கை முறை மாற்றங்களைப் பின்பற்றுவதன் மூலம், சிறுநீரக நோய் வருவதற்கான வாய்ப்புகளை நம்மால் பெருமளவு குறைக்க முடியும்.

2026 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் (Theme):

"அனைவருக்கும் சிறுநீரக ஆரோக்கியம்: மக்களைக் காப்போம், பூமியைப் பாதுகாப்போம்" (Kidney Health for All: Caring for People, Protecting the Planet).

உடலின் மிக முக்கிய உறுப்பான சிறுநீரகத்தை நாம் எப்படிப் பாதுகாப்பது? இதோ உங்களுக்காக சில ஆலோசனைகள்!

உங்கள் சிறுநீரகங்களைப் பாதுகாக்க 8 பொன்னான விதிகள்!

1. உடற்பயிற்சி செய்து சுறுசுறுப்பாக இருங்கள்

தினமும் உடற்பயிற்சி செய்து உடலைச் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வது உங்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இதன் மூலம் நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) வருவதற்கான அபாயம் குறைகிறது.

2. இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வையுங்கள்!

 நீரிழிவு நோய் உள்ளவர்களில் பாதிப் பேருக்குச் சிறுநீரக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, சர்க்கரை நோய் உள்ளவர்கள் தங்களது சிறுநீரகச் செயல்பாட்டைத் தொடர்ந்து பரிசோதித்து வருவது அவசியம். ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், நீரிழிவு நோயால் ஏற்படும் சிறுநீரக பாதிப்பைக் குறைக்கவும், தடுக்கவும் முடியும். மருத்துவர்களின் ஆலோசனையோடு இரத்த சர்க்கரை அளவை எப்போதும் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.

3. இரத்த அழுத்தத்தைக் கண்காணித்து வாருங்கள்!

உயர் இரத்த அழுத்தம் மாரடைப்பு அல்லது பக்கவாதத்தை ஏற்படுத்தும் என்பது பலருக்கும் தெரியும். ஆனால், அதுதான் சிறுநீரக பாதிப்பிற்கான மிக முக்கியக் காரணம் என்பது சிலருக்கு மட்டுமே தெரியும். எனவே உங்கள் இரத்த அழுத்தத்தைத் தொடர்ந்து கண்காணியுங்கள்.

4. ஆரோக்கியமான உணவு மற்றும் சரியான உடல் எடை!

 சரியான உடல் எடையைப் பராமரிப்பது நீரிழிவு, இதய நோய் மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோயைத் தடுக்க உதவும். குறிப்பாக உணவில் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு 5 முதல் 6 கிராம் (சுமார் ஒரு டீஸ்பூன்) உப்பு மட்டுமே எடுத்துக் கொள்வது நல்லது. பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் உணவகங்களில் சாப்பிடுவதைக் குறைத்தாலே உப்பின் அளவைக் கட்டுப்படுத்தலாம். வீட்டிலேயே சமைத்துச் சாப்பிடுவது மிகவும் பாதுகாப்பானது.

இதையும் படியுங்கள்:
RO வாட்டர் நல்லதா? கெட்டதா? - RO தண்ணீர் குடித்தால் சத்து குறைபாடு ஏற்படுமா..?
WORLD KIDNEY DAY 2026

5. போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள்!

தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதில் பல்வேறு கருத்துகள் இருந்தாலும், பொதுவாக ஒரு நாளைக்கு 1.5 முதல் 2 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது நல்லது. போதுமான அளவு தண்ணீர் குடிக்கும்போது, சிறுநீரகங்கள் உடலில் உள்ள சோடியம், யூரியா மற்றும் நச்சுகளை எளிதாக வெளியேற்றிவிடும்; இதனால் நாள்பட்ட சிறுநீரக நோய் வரும் அபாயம் கணிசமாகக் குறையும். அதேநேரம், அளவுக்கு அதிகமாகவும் தண்ணீர் குடிக்கக்கூடாது. தட்பவெப்ப நிலை, உடற்பயிற்சி, உடல் நிலை, கர்ப்பம் மற்றும் பாலூட்டுதல் ஆகியவற்றைப் பொறுத்து குடிக்கும் நீரின் அளவு நபருக்கு நபர் மாறுபடும். ஏற்கனவே சிறுநீரகக் கல் வந்தவர்கள், மீண்டும் கல் உருவாவதைத் தடுக்க தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம்.

6. புகைப்பிடிப்பதைத் தவிர்க்கவும்!

புகைப்பிடிக்கும் பழக்கம் சிறுநீரகங்களுக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தைக் குறைக்கிறது. இதனால் சிறுநீரகங்களின் சீரான செயல்பாடு பாதிக்கப்படுகிறது. மேலும், புகைப்பிடிப்பதால் சிறுநீரகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 50 சதவீதம் அதிகரிக்கிறது.

7. மருத்துவர் பரிந்துரையின்றி மாத்திரைகளைத் தொடர்ந்து எடுக்காதீர்கள்!

இப்யூபுரூஃபன் (Ibuprofen) போன்ற வலி நிவாரணி மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனையின்றி நாமாகவே கடைகளில் வாங்கித் தொடர்ந்து சாப்பிடும் பழக்கம் இருந்தால், அது சிறுநீரகங்களை மிகக் கடுமையாகப் பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:
அதிக லாபம் தரும் 2026-ன் புதிய முதலீட்டு ரகசியங்கள்!
WORLD KIDNEY DAY 2026

8. 'அதிக ஆபத்து' (High Risk) இருந்தால் தவறாமல் பரிசோதனை செய்யுங்கள்!

சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன் அல்லது குடும்பத்தில் யாருக்கேனும் சிறுநீரக நோய் பாதிப்பு போன்ற 'அதிக ஆபத்து' காரணிகள் உங்களுக்கு இருந்தால், உங்கள் சிறுநீரகச் செயல்பாட்டை முன்கூட்டியே பரிசோதித்துக் கொள்வது மிகவும் அவசியம்.

நம் சிறுநீரகங்கள் நம் உடலின் மிக முக்கிய வடிகட்டிகள். அவற்றைச் சரியாகப் பராமரிப்பது நமது தலையாய கடமை. இந்த உலக சிறுநீரக தினத்தில், மேற்சொன்ன 8 பொன்னான விதிகளைப் பின்பற்றி ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வோம் என உறுதியேற்போம்! 

உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இந்தத் தகவலைப் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

உங்கள் நலம் விரும்பும், 

டாக்டர். R. பார்த்தசாரதி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com