உடல் நலத்திற்கு உதவும் விதமாக பல மருந்துப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த மருந்துப் பொருட்கள் குறித்த முழுமையான தகவல்களை மருத்துவர்களுக்கும், அவர்கள் வழியாகப் பயன்பாட்டாளர்களுக்கும் கொண்டு செல்ல உதவுபவர்களாக மருந்தாளுநர்கள் செயல்படுகின்றனர். பன்னாட்டு மருந்துக் கூட்டமைப்பு (International Pharmaceutical Federation) எனும் அமைப்பு, 2020 ஆம் ஆண்டு முதல், செப்டம்பர் 25 ஆம் நாளை, ‘பன்னாட்டு மருந்தாளுநர்கள் நாள்’ (World Pharmacists Day) என்று அறிவித்தது.
நெதர்லாந்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பன்னாட்டு மருந்துக் கூட்டமைப்பு (International Pharmaceutical Federation) எனும் அமைப்பு 1912 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் நாளில் தொடங்கப் பெற்றது. இக்கூட்டமைப்பில் உலக முழுவதுமுள்ள 160 தேசிய மருந்துக் கூட்டமைப்புகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. இக்கூட்டமைப்பில் மருந்தாளுநர்கள், மருந்து அறிவியலாளர்கள் மற்றும் மருந்துக் கல்வியாளர்கள் போன்றவர்கள் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். இவ்வமைப்பு, நான்கு மில்லியனுக்கும் அதிகமான மருந்து தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை முதன்மைப்படுத்துகிறது.
கோவிட்-19 தொற்றுநோய்க் காலத்தைச் சுட்டிக்காட்டி, பல நாடுகளும், அமைப்புகளும் தற்போதைய மற்றும் எதிர்காலச் சவால்களை எதிர்கொள்ளும் நோக்கில் புதிய உலகளாவிய உடல் நல உத்திகளை வகுத்துள்ளன. இந்த உத்திகளில், உடல் நலப் பாதுகாப்புக்கான வரையறுக்கப்பட்ட அணுகல், மருத்துவ வல்லுநர்களின் பற்றாக்குறை, நுண்ணுயிர் எதிர்ப்பு, காலநிலை மாற்றம், காற்று மாசுபாடு, எச்.ஐ.வி மற்றும் வளர்ந்து வரும் தொற்று நோய்கள் போன்ற சிக்கல்களும் இடம் பெற்றிருக்கின்றன.
இந்தச் சிக்கல்களுக்கு, ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் இணைந்து, பன்னாட்டு மருந்துக் கூட்டமைப்பு உடல் நல அமைப்புகளை வலுப்படுத்துதல், தொடக்க உடல் நலப் பராமரிப்புக்கான அணுகலை மேம்படுத்துதல் உட்பட உடல் நலப் பாதிப்புகளைத் தடுப்பது மற்றும் உடல் நல நெருக்கடிகளுக்குத் தயார்படுத்துதல் மற்றும் பதிலளிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்வுகளை முன் வைக்கின்றன.
இவ்வமைப்பு, உலகின் அனைத்துப் பகுதிகளிலும் உடல் நலத்தை மேம்படுத்துவதில் மருந்தாளரின் பங்கை ஊக்குவிக்கும் வகையிலும், மக்களுக்குத் தேவையான சிறந்த மருந்துகளைப் பெறுவதற்கு மருந்தாளுநர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை வலியுறுத்தும் வகையிலும், பன்னாட்டு மருந்துக் கூட்டமைப்பு தொடங்கப்பெற்ற செப்டம்பர் 25 ஆம் நாளை, 2020 ஆம் ஆண்டு முதல் பன்னாட்டு மருந்தாளுநர்கள் நாளாகக் (World Pharmacists Day) கொண்டாடப்பட வேண்டும் என்று அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளை முன்னிறுத்தி ‘உலக மருந்தாளுநர்கள் நாள்’ கொண்டாடப்பட்டு வருகிறது. 2024 ஆம் ஆண்டுக்கு, “மருந்தியலாளர்கள்: உலகளாவிய உடல்நலத் தேவைகளை நிறைவு செய்தல்” (Pharmacists: Meeting global health needs) எனுக் கருத்துரு உருவாக்கப்பட்டிருக்கிறது.
மருந்தகத் தொழிலில் நாள்தோறும் பல வழிகளில் மக்களின் உடல் நலத்திற்குத் தேவையான மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டு, அதன் வழியாக மக்களின் உடல் நலம் காக்கப்படுகிறது. உலகளாவிய உடல் நலத்தில் மருந்துகளும், அதனைப் பற்றிய விளக்கங்களை மருத்துவர்களுக்குப் பரிந்துரைக்கும் மருந்தாளுநர்களின் பங்கு இன்றியமையாதது. உடல் நலப் பாதுகாப்பில் மருந்தாளுநர்களின் பங்கை மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில், இந்த ஆண்டு இத்தலைப்பு முன்னெடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய உடல் நலத் தேவைகளின் பரப்பு அதிகரித்து வரும் இவ்வேளையில், உடல் நலத்திற்கான ஏற்றத் தாழ்வுகளை சரி செய்யும் அதே வேளையில், உலகளவில் நல்ல உடல் நலம் மற்றும் வலுவான, நிலையான உடல் நல அமைப்புகளை மேம்படுத்துவதன் அவசியத்தையும் பன்னாட்டு மருந்துக் கூட்டமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
மருந்தாளுநர்களுக்கான இந்நாளில் மருந்தாளுநர்கள் குறித்து சில சுவையான தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.
உலகளாவிய நிலையில் 4 மில்லியனுக்கும் அதிகமான மருந்தாளுநர்கள் இருக்கின்றனர். இவர்களில் 78% மருந்தாளுநர்கள் பெண்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மருந்தாளுநரான ஜான் பெம்பர்டன் என்ற மருந்தாளரால் கோகோ கோலா, மருந்தாளுநரான சார்லஸ் ஆல்டர்டன் என்பவரால் டாக்டர் பெப்பர், மருந்தாளுநர் ஜேம்ஸ் வெர்னர் என்பவரால் வெர்னரின் ஜிஞ்சர் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன.
நியூ ஆர்லியன்ஸைச் சேர்ந்த லூயிஸ் டுஃபில்ஹோ ஜூனியர் என்பவர் 1800 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் அமெரிக்காவின் முதல் உரிமம் பெற்ற மருந்தாளுநராக ஆனார். அதற்கு முன், மருந்தாளுநர் ஆவதற்கு உரிமம் எதுவும் தேவையில்லை.
உலகளாவிய மருந்து சந்தை மதிப்பு 300 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கிறது.
ஐக்கிய அமெரிக்காவை உருவாக்கிய மூத்தத் தலைவர்களில் ஒருவரும் அறிவியலாளருமான பெஞ்சமின் ஃபிராங்க்ளின் ஒரு மருந்தாளுநராக இருந்தவர்.
உலகப் புகழ்பெற்ற துப்பறியும் கதை எழுத்தாளரான அகதா கிறிஸ்டி ஒரு மருந்தியல் தொழில்நுட்ப வல்லுநராக இருந்தவர்.
லிபிட்டர் (Lipitor) என்பது அனைத்துக் காலத்திலும் அதிகம் விற்பனையாகும் மருந்து. இது 1997 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் காப்புரிமை 2011 ஆம் ஆண்டில் காலாவதியானது. இம்மருந்தின் விற்பனை மதிப்பு சுமார் 125 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
பாதகமான நிகழ்வுகளை ஏற்படுத்தும் பொதுவான மருந்துகளில் இன்சுலின் ஒன்றாக இருக்கிறது.
அமெரிக்காவில் பொதுவாகப் பரிந்துரைக்கப்படும் மருந்துகளில் ஹைட்ரோகோடோன் / அசெட்டமினோஃபென் (Hydrocodone/ Acetaminophen) என்பது 2 வது இடத்தில் உள்ளது.
உலகளவில் மிகவும் விலையுயர்ந்த மருந்து கிளிபெர்ரா (Glybera) இருக்கிறது. இம்மருந்துக்கு ஆண்டுக்கு 1.21 மில்லியன் அமெரிக்க டாலர் செலவாகிறது. மரபணு சிகிச்சையில் பயன்படுத்தப்படும் இந்த மருந்து, லிப்போபுரோட்டீன் லிபேஸ் எனும் குறைபாடு உள்ளவர்களுக்கு லிப்போபுரோட்டீன் லிபேஸ் என்சைம் செயல்பாட்டை மீட்டெடுக்க உதவுகிறது.