International Day of Sign Languages - காது கேளாதவர்களின் பிரச்னைகளைக் காது கொடுத்துக் கேட்போம்!

செப்டம்பர் 23: சர்வதேச சைகை மொழிகள் தினம்!
International Sign Language Day
International Sign Language Day
Published on

1951 ஆம் ஆண்டில், உலகக் காது கேளாதோர் கூட்டமைப்பு நிறுவப்பட்ட நிலையில், முதன் முதலில், 2018 ஆம் ஆண்டில் சர்வதேச சைகை மொழிகள் நாள் (International Day of Sign Languages) அதிகாரப்பூர்வமாகக் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, உலகம் முழுவதும் செப்டம்பர் 23 அன்று சைகை மொழி நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. சைகை மொழியின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது இந்நாளின் முக்கிய நோக்கமாகும். சைகை மொழியானது, உலகெங்கிலும் உள்ள காது கேளாத, செவித்திறன் குறைபாடுகளைக் கொண்ட மக்களை ஒன்றாக இணைக்க உதவுகிறது.

உலகளவில், 1.5 பில்லியன் மக்கள் செவித்திறன் குறைபாட்டுடன் வாழ்கின்றனர். அவர்களில் சுமார் 430 மில்லியன் மக்கள் தங்கள் காது கேளாமையைச் சரி செய்வதற்கான சேவைகளை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். 2050 ஆம் ஆண்டில் செவித்திறன் குறைபாடுடையவர்களின் எண்ணிக்கை 2.5 பில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உயர்வின் மூலம், உலகளவில் 700 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு செவிப்புலன் மறுவாழ்வு தேவைப்படும்.

தட்டம்மை, சளி, ரூபெல்லா, மூளைக்காய்ச்சல் மற்றும் காது தொற்று போன்ற நோய்களால் குழந்தைகளில் 30% பேருக்குக் காது கேளாமை ஏற்படுகிறது. உலகளவில் 330 மில்லியன் மக்கள், நாள்பட்ட காது நோய்த் தொற்றுகள் அல்லது நாள்பட்ட இடைச்செவியழற்சி ஊடகத்தால் பாதிக்கப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சிகிச்சையளிக்கப்படா விட்டால், நாள்பட்ட காது நோய்த் தொற்றுகள், காது கேளாமைக்கு வழி வகுக்கும். நாள்பட்ட காது நோய்த் தொற்றுகள் தடுக்கக்கூடியவை. மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சைகளின் வழியாக, அதனைச் சரி செய்து கொள்ள முடியும். 

தற்போதைய நிலையில், ஒவ்வொரு 1000 குழந்தைகளில் ஐந்து பேர் வரை காது கேளாமையுடன் பிறக்கிறார்கள் அல்லது பிறந்த உடனேயேக் காது கேளாத நிலையை அடைகிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. காது கேளாமை, குழந்தையின் வளர்ச்சி மற்றும் கல்வி சாதனைகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இத்தகைய செவித்திறன் இழப்பை முன்கூட்டியேக் கண்டறிதல் மற்றும் உடனடியாகச் சிகிச்சை அளித்தல் போன்றவைகளின் வழியாக, காது கேளாமை மற்றும் செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகள் சமூகத்தில் சம வாய்ப்புகளைப் பெற உதவிட வேண்டும். 

இதே போன்று, 60 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு 4 பேருக்கு ஒருவர் செவித்திறன் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களுக்குச் சிகிச்சையளிக்கப்படாமல் இருந்தால், காது கேளாமை தகவல் தொடர்பிலிருந்து அவர்களை விலக்குவதற்கு வழி வகுக்கும், இதனால் தனிமை, விரக்தி மற்றும் சமூகத் தனிமை உணர்வுகள் அவர்களிடம் அதிகமாகத் தோன்றும்.

இதையும் படியுங்கள்:
உலக அமைதிச் சுட்டெண் என்றால் என்ன? இந்தியாவின் அமைதிச் சுட்டெண் எவ்வளவு?
International Sign Language Day

செவிப்புலன் கருவியைப் பயன்படுத்துவதன் மூலம் 17% பேர் மட்டும் பயனடைகின்றனர். 400 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் செவிப்புலன் கருவியைப் பயன்படுத்துவதன் மூலம் பயனடையலாம் என்று உலகச் சுகாதார நிறுவனம் மதிப்பிடுகிறது. இருப்பினும், தற்போதைய செவிப்புலன் உதவிக்கான மதிப்பீடுகள் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் 10% க்கும் குறைவாக இருந்து வருகிறது. அதிக வருமானம் உள்ள நாடுகளில் 25% க்கும் அதிகமாக உள்ளது.

செவித்திறன் இழப்பைத் தடுப்பதற்காக சில உத்திகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்றன. அவை:

  • தடுப்பூசி உட்பட தாய் மற்றும் குழந்தைக்கான சுகாதாரத் திட்டங்களை வலுப்படுத்த வேண்டும். 

  • குழந்தை மற்றும் பள்ளி அடிப்படையிலான செவிப்புலன் பரிசோதனையைச் செயல்படுத்த வேண்டும்

  • செவிப்புலன் பராமரிப்பில் சுகாதார வல்லுநர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்

  • கேட்கும் சாதனங்கள் மற்றும் தகவல் தொடர்பு சிகிச்சைகளை அணுகக்கூடியதாக மாற்ற வேண்டும்.

  • ஓட்டோடாக்ஸிக் மருந்துகளின் பயன்பாடு மற்றும் சுற்றுச்சூழல் இரைச்சல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் முயற்சிக்க வேண்டும். 

  • செவிப்புலனை மேம்படுத்தவும், களங்கத்தைக் குறைக்கவும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். 

உலகெங்கிலும் உள்ள பெற்றோர்கள் மத்தியில் தங்கள் காது கேளாத குழந்தைகளுடன் எவ்வாறு தொடர்பு கொள்வது என்று தெரியவில்லை என்று ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. இதற்கு முக்கியக் காரணம் சைகை மொழியைப் பற்றிய விழிப்புணர்வு பலருக்கும் இல்லை என்பதுதான். காது கேளாமை உள்ளவர்களுக்கான தகவல் தொடர்புகளை எளிதாக்குவதில் சைகை மொழிகள் மிகவும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. செவித்திறன் குறைபாடுள்ளவர்களின் மொழியியல் அடையாளத்தை உறுதி செய்வதற்கும், அணுகலை மேம்படுத்துவதற்கும் சைகை மொழிகளை ஆதரிப்பதும் மேம்படுத்துவதும் முக்கியமானது.

இதையும் படியுங்கள்:
உலகில் மொத்தம் 250 வகைகள்; இந்தியாவில் 46 வகைகள்; நீலகிரி, கொடைக்கானலில் 30 வகைகள் உள்ள ஒரே பூ - அது என்ன பூ?
International Sign Language Day

ஆதி மனிதன் தன் தேவைகளை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த பயன்படுத்திய மொழி சைகை மொழி. சைகை மொழி என்பது பலவிதமான கை அசைவுகள் மற்றும் முக பாவனைகள் வழியாகப் பேசப்படுகிறது. உலகில் பல்வேறு மொழிகள் உள்ளதைப் போன்றே சைகை மொழிகளிலும் இந்திய சைகை மொழி, அமெரிக்க சைகை மொழி, பிரிட்டிஷ் சைகை மொழி என்று பல வகைகள் இருக்கின்றன.

ஒவ்வொரு நாடும், சமூகத்தில் காது கேளாதோர் சந்திக்கும் பிரச்சினைகள், கோரிக்கைகள், அவர்களுக்கான வசதிகளை உருவாக்குதல் குறித்து இந்நாளில் சிந்தித்து, அதற்கான செயல் திட்டங்களை வகுத்துச் செயல்படுத்த முன் வர வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com