கடல் போர்க்களமா? இல்லை, மாலுமிகளின் வியர்வை களம்!

ஜூன் 25: உலகக் கடலோடிகள் நாள்
World Seafarers' Day
World Seafarers' Day
Published on

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25 ஆம் நாளன்று, ‘உலகக் கடலோடிகள் நாள்’ (Day of the Seafarer) கொண்டாடப்பட்டு வருகிறது. உலகெங்குமுள்ள கடலோடிகளின் கடுமையான உழைப்பையும், அவர்களது தியாகங்களையும் போற்றும் வழியில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் 2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற, மாலுமிகளுக்கான பயிற்சி, சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு தரநிலைகள் குறித்தப் பன்னாட்டு மாநாட்டின் (International Convention on Standards of Training, Certification and Watchkeeping for Seafarers (STCW) ) போது, 2011 ஆம் ஆண்டு முதல் ஜூன் 25 ஆம் நாளினை ‘உலகக் கடலோடிகள் நாள்’ (Day of the Seafarer) என்று கொண்டாடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 2011 ஆம் ஆண்டு முதல் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளினை ஐக்கிய நாடுகள் அவையும் அங்கீகரித்துள்ளது. இதனைப் பன்னாட்டுக் கடல் சார் அமைப்பும் (International Maritime Organization) அங்கீகரித்துள்ளது.

கடல் வழியாகத் தங்களது பயணத்தைத் தொடரும் கடலோடிகள் எனப்படும் மாலுமிகளின் வாழ்வு பெரும்பான்மையாக, கடற்பகுதியில் மிதந்து கொண்டிருப்பதாகவே இருக்கிறது. உலகில் நடைபெறும் வணிகத்தில் 90% கடல் வழியிலான போக்குவரத்தையே நம்பியிருக்கிறது. உணவு, தானியங்கள், எரிபொருட்கள், மின்னணுச் சாதனங்கள், ஆடைகள் என நாம் அன்றாடம் பயன்படுத்தும் அத்தனைப் பொருட்களும் உற்பத்தி செய்யப்படும் இடங்களிலிருந்து கடல் போக்குவரத்து வழியாகவே மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறது. குறிப்பாக, ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு அல்லது ஒரு கண்டத்திலிருந்து மற்றொரு கண்டத்திற்கு எடுத்துச் செல்லப்படும் அனைத்துப் பொருட்களும் கடல் வழியாகவேக் கொண்டு செல்லப்படுகின்றன. கப்பல் போக்குவரத்து மற்ற போக்குவரத்துகளை விட மலிவானது என்பதால் இப்போக்குவரத்து உலகப் பொருளாதாரத்தில் முக்கியமானதாக இருக்கிறது. மேலும், உலகப் பொருளாதாரத்தின் ஆணி வேராகவும் இருந்து வருகிறது.

இதையும் படியுங்கள்:
உலகப் பசுமையின் பொக்கிஷமாக விளங்கும் கடல் வாழ்விடப் பாதுகாப்பின் அவசியம்!
World Seafarers' Day

உலகம் முழுவதும் 51,400 வணிகக் கப்பல்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இந்தக் கப்பல்களைத் திறம்பட இயக்குபவர்களாகக் கடலோடிகள் எனும் மாலுமிகள் இருக்கின்றனர். குடும்பத்தைப் பிரிந்த தனிமை, கடுமையான பணிச் சூழல், கடலின் சீற்றம், கடல் கொள்ளையர்களின் அச்சுறுத்தல், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் ஆபத்துகள் என்று பல துன்பங்களுக்கிடையே இவர்களின் பணி அமைந்திருக்கிறது.

இவர்களின் செயல்பாடுகள் இல்லையெனில், உலக வணிகமும், பொருளாதாரமும் ஆட்டம் கண்டுவிடும். இருப்பினும், இவர்களின் பணி வெளியில் தெரியாததாகவும், அங்கீகாரமற்றதாகவுமே இருந்து வருகிறது என்பது கவலைக்குரியது. உலகப் பொருளாதாரத்தில் இவர்களது பங்களிப்பை எடுத்துச் சொல்லவும், மாலுமிகளின் உரிமைகள், பாதுகாப்பு, உடல் நலம் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்நாள் உதவுகிறது.

இதேப் போன்று, பன்னாட்டளவில் கடல்சார் தொழில் துறையில் உள்ள பல்வேறு சவால்களைப் பற்றி விவாதிக்கவும், அதற்கான தீர்வுகளைக் கண்டறியவும் இந்நாள் அமைந்திருக்கிறது. மேலும், இளம் தலைமுறையினரைக் கடல்சார் தொழிலில் ஈடுபடுத்துவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்நாள் உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
கடல் ஆழத்தில் மறைந்திருக்கும் பிரம்மாண்ட ரகசியங்கள்!
World Seafarers' Day

உலக மக்களின் தேவைகளைக் கடல் போக்குவரத்தின் வழியாக, ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மலிவு விலையில் கொண்டு செல்லும் மதிப்புமிக்க கடலோடிகள் பொதுவெளியில் அடையாளமற்று இருந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையினை மாற்றக் கொண்டாடப்பட்டு வரும் உலகக் கடலோடிகள் நாளில், அவர்களது பணியைப் போற்றுவதுடன், அவர்களின் தியாகங்களுக்கு நன்றி செலுத்தவும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம். இன்று அவர்களின் பணிகளுக்கு நன்றி சொல்வதுடன், அவர்களது பணியில் இருக்கும் பல்வேறு சிக்கல்களுக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டுமென்று நாம் வேண்டிக் கொள்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com