World Yoga Day - June 21 - யோகாவின் குறிக்கோள் என்ன? யோகம் எனும் தத்துவம் கடவுளை ஏற்று கொள்கிறதா?

World Yoga Day
World Yoga Day

மனிதன் நல்வாழ்விற்கு இயற்கை வழியிலான யோகா ஒன்றே சிறப்பானது என்கிற எண்ணம் உலகம் முழுவதும் ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில் யோகா என்றால் என்ன? யோகா நல்வாழ்க்கைக்கு எப்படி உதவுகிறது? யோகா என்பது குறித்து அறிந்து கொள்வது மட்டுமின்றி, அதனை வாழ்க்கையில் எப்படிக் கடைப்பிடிப்பது என்பது குறித்தும் நாம் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. உலக யோகா தினமான இன்று, யோகா குறித்த பல தகவல்களை இப்பதிவில் பார்ப்போம்.

வாய்க்கு ருசியாகச் சாப்பிட வேண்டுமென்று ஆசைப்பட்டு, வேதிப்பொருள் கலந்து செய்யப்படும் பல்வேறு உணவுகளைச் சாப்பிட்டு, அதனால் வந்த பக்க விளைவுகளால் உடல் நலத்தை இழந்து விட்டான் மனிதன். அது மட்டுமில்லாது, உணர்ச்சிகளையும், கிளர்ச்சிகளையும் தூண்டிவிடும் பல்வேறு செயற்கையான செயல்பாடுகளுக்கு ஆசைப்பட்டு, போதுமென்கிற மனமின்றி மகிழ்ச்சியைத் துறந்து மன நலத்தையும் இழந்து தவிக்கிறான்.

மனமும் உடல் நலமும் பாதித்த மனிதன், இன்றைய அறிவியலின் துணையில், மருந்துகளின் துணையோடும், செயற்கைக் கருவிகளின் உதவியோடும் தனது வாழ்க்கையை நீட்டிக்கப் போராடிக் கொண்டிருக்கிறான். அது முடியாத போது, உயிரிழக்க வேண்டியதாகி விடுகிறது.

தன் அகச்செயல்களுக்கும் புறச்செயல்களுக்கும் இடையே இருந்த நல்லுறவை இழந்த மனிதன், தனது மகிழ்ச்சிகரமான வாழ்கைக்குத் தேவையானவை எவையெவை என்பதையே முற்றிலும் மறந்து போய் விட்டான். சுருக்கமாகச் சொன்னால், மனிதன் சிந்தனையாலும், செயலாலும் ஒரு உயிருள்ள இயந்திரமாகவேப் மாறிப் போய்விட்டான். வேதியியல் மருத்துவத்தின் பிடியிலும், அறிவியல் கருவிகளின் பிடியிலும் சிக்கிக் கொள்ளாமல், நோய்கள் எதுவுமின்றி மனமகிழ்வுடன் நீண்ட காலம் வாழ என்ன செய்வது என்கிற சிந்தனை தற்போது பலரிடமும் வரத் தொடங்கியிருக்கிறது.

மனிதன் நல்வாழ்விற்கு இயற்கை வழியிலான யோகா ஒன்றே சிறப்பானது என்கிற எண்ணம் உலகம் முழுவதும் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், யோகா என்பது குறித்து அறிந்து கொள்வது மட்டுமின்றி, அதனை வாழ்க்கையில் எப்படிக் கடைப்பிடிப்பது என்பது குறித்தும் நாம் தெரிந்து கொள்வது அவசியமாகிறது.

யோகா என்பது ஒரு கலை. இக்கலையினை வாழ்க்கை அறிவியல் மற்றும் வாழும் கலை என்று கூட சொல்லலாம். யோகா எனும் இக்கலையானது, உடல், மனம், அறிவு, உணர்வு மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும், சமன்பாட்டிற்கும் உதவிடும் ஒரு கலையாக இருக்கிறது.

யோகம் என்ற வடமொழிச் சொல்லுக்கு இணைதல் அல்லது இணக்கமாக இருத்தல் என்று பொருள். அதாவது, ஒருவரின் கவனத்தை ஒருமுகப்படுத்துவது. இதற்கு, சங்கமம் என்ற பொருளும் ஒன்று கலத்தல் என்ற மற்றொரு பொருளும் உண்டு.

யோகாவின் தோற்றம் குறித்துப் பல்வேறு கருத்துகள் சொல்லப்படுகின்றன. இக்கலை வேத காலத்திற்கு முன்பேத் தோன்றியது என்கின்றனர். சிந்துச் சமவெளி நாகரிகத்தின் தளங்களில் உள்ள சில முத்திரைகள் ஒரு பொதுவான யோகா அல்லது தியான நிலைகளை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கின்றன என்கின்றனர்.

யோகா குறித்து, இந்து சமயம் மட்டுமின்றி, இந்தியாவில் தோன்றிய பௌத்தம், சமணம் ஆகிய சமயங்களிலும் பல்வேறு குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.

இந்து சமயத்தவர்களின் புனித நூலான பகவத்கீதை, யோகா என்ற சொல்லைப் பல்வேறு வழிகளில் விரிவாகப் பயன்படுத்துகிறது. பகவத் கீதையின் ஆறாவது அத்தியாயம் முழுவதும் பாரம்பரிய யோகா பயிற்சிகளுக்காகவே அமைந்திருக்கிறது. மேலும், இங்கு மூன்று முக்கிய யோகா வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவை:

1. கர்ம யோகம் - செயல்களின் யோகம்.

2. பக்தி யோகம் - அர்ப்பணித்தல் யோகம்

3. ஞான யோகம் - அறிவு யோகம்

இந்திய அத்வைத மரபில் வந்த வேதாந்த தத்துவவாதியான மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மதுசூதன சரஸ்வதி என்பவர், கீதையை மூன்று பிரிவுகளாகப் பிரித்து, முதல் ஆறு பாகங்ககள் கர்ம யோகமாகவும், நடுவில் ஆறு பாகங்கள் பக்தி யோகமாகவும், கடைசி ஆறு பாகங்கள் ஞான யோகமாகவும் வகைப்படுத்தியுள்ளார். ஆனால், அதன் பின் வந்தவர்கள் ஒவ்வொரு பாகத்திற்கும் வேறுபட்ட யோகாவைக் குறிப்பிட்டு, மொத்தம் 18 மாறுபட்ட யோகாக்கள் இருப்பதாகக் குறிப்பிடுகின்றனர்.

இதையும் படியுங்கள்:
June 20: World Refugee Day - உலக அகதி நாள் - அகதிகள் உள்ளடக்கப்பட்ட ஓர் உலகம் காண்போம்!
World Yoga Day

யோகம் எனும் தத்துவம் கடவுள் இருப்பதை ஏற்றுக் கொள்கிறது. அதாவது, கடவுள் என்பது வெளியே இல்லை, உனக்குள்ளே இருக்கிறான் எனும் தத்துவக் கொள்கையாக இருக்கிறது. பதஞ்சலியின் யோகத் தத்துவமும் இதனையே வலியுறுத்துகிறது.

சமண சமய நிறுவனரான மகாவீரர் பன்னிரெண்டு ஆண்டுகள் யோகப் பயிற்சிகளைச் செய்தார். சமண சமயத்தில் யோகப்பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

பௌத்த சமயத்தை நிறுவிய கௌதம புத்தர் கூட, முழுமையான ஞானோதயம் அடைவதற்கு முன்பாக, ஆறு ஆண்டு காலம் தொடர்ந்து யோகப்பயிற்சிகள் செய்தார் எனப்படுகிறது. பௌத்த நூல்களும் யோக பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளன.

பிற்காலத் தத்துவவாதிகள், குறிப்பாக, அத்வைதிகளும் மற்றும் மகாயான பெளத்தர்களும், யோக சூத்திரத்தைத் தங்களது தத்துவங்களில் தாராளமாகச் சேர்த்துக் கொண்டிருக்கின்றனர். நியாய தத்துவத்திலும், வைசேடிகம் தத்துவத்திலும், வேதாந்தத் தத்துவத்திலும் யோகம் எனும் தத்துவத்திற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

பொதுவாக, யோகாவின் குறிக்கோள் உடல் நலத்தை முன்னேற்றுவதில் தொடங்கி, வீடுபேறு எனும் நிலையை அடைந்திட வேண்டுமென்பதாக இருக்கிறது. அதாவது, உலகியல் துன்பங்களில் இருந்தும், பிறப்பு, இறப்பு என்ற சுழற்சியில் இருந்தும் விடுதலை பெற்றிட வேண்டும் என்பதையே முடிவாகக் கொண்டிருக்கின்றது. சைவ சமயத்திலும், சமண சமுதாயத்திலும், தனித்த அத்வைத வேதாந்தப் பள்ளிகளிலும் யோகாவின் குறிக்கோள் வீடுபேறு அடைய வழிகாட்டுவதாகவே இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com