

2026 ஆம் ஆண்டுக்கான 20 தாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானின் ஐச்சி - நகோயா (Aichi-Nagoya) என இரு நகரங்களில் 2026 செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை நடைபெற உள்ளன.
வழக்கமாக வீரர்கள் தங்குவதற்கு பல அடுக்கு குடியிருப்புகளுடன் கூடிய விசேஷ விளையாட்டு கிராமம் உருவாக்கப்படும். ஆனால் இந்த முறை ஜப்பான் விளையாட்டு கமிட்டி, கட்டுமான பொருட்களின் அதிக செலவு காரணமாக, விளையாட்டு கிராமம் குடியிருப்புகளை கட்டும் முடிவை கைவிட்டது. அதற்கு பதிலாக 'கோஸ்டா செரீனா' என்ற பிரமாண்ட சொகுசு கப்பலை மிதக்கும் விளையாட்டு கிராமமாக பயன்படுத்துகிறது.
இத்தாலி நாட்டின் சொகுசு கப்பலான இது 14 தளங்களை கொண்ட 300 மீட்டர் நீளம் கொண்டது.1,00,000 டன்கள் எடை கொண்டது இந்த கப்பலில் 1500 அறைகள், ஓட்டல்கள், நீச்சல் குளங்கள், உணவகங்கள், மதுபான பார்கள், பிற பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த கப்பலில் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வீரர்கள் தங்குகிறார்கள்.
அதாவது 20 வகையான விளையாட்டு பிரிவைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக நகோயா துறைமுகத்துக்கு அருகில் நடைபெறும் போட்டிகளுக்குரிய வீரர்கள் இங்கு தங்குவார்கள். வில்வித்தை, 3x3 கூடைப் பந்து, சைக்கிளிங், ஜிம்னாஸ்டிக்ஸ், ஹேண்ட்பால், ஜூடோ, கபடி, துடுப்பு படகு, ரக்பி டென்னிஸ், பளுதூக்குதல், வலுதூக்குதல், ஆகியவை இதில் அடங்கும்.
கிரிக்கெட் மற்றும் கலப்பு தற்காப்புக் கலைகள் (Mixed Martial Arts) போன்றவைகள் புதியதாக இம்முறை இடம்பெறவுள்ளது .
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் அறிமுகமான சுவாரஸ்யமான வரலாறு...!
ஜப்பான், பிலிப்பைன்ஸ் தீவுகள், மற்றும் சீன குடியரசு ஆகியவை பங்கேற்ற தூரக்கிழக்கு ஆசிய போட்டிகளே இன்றைய ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு தொடக்கமாக அமைந்தது. முதல் போட்டியை 1913 ல் பிலிப்பைன்ஸ் நடத்தியது. 1938ல் ஜப்பான் சீனா இடையே போர் தொடங்கியது.
பின்னர் பிலிப்பைன்ஸ்யை ஜப்பான் கைப்பற்றியது இதனையடுத்து இப்போட்டிகள் நிறுத்தப்பட்டது. இரண்டாம் உலகப்போர் நடந்தது. உலகளவில் அது இதர விஷயங்களைச் செயலிழக்க செய்தது. அதன் பின்னர் பல ஆசிய நாடுகள் சுதந்திரம் பெற்றன.
ஆசிய நாடுகளிடையே பரஸ்பரம் புரிதலையும், நட்புறவையும் சமத்துவத்தையும் வெளிப்படுத்தும் வகையில் ஒரு புதிய விளையாட்டு போட்டியை உருவாக்க விரும்பி 1948 ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் கமிட்டியின் இந்திய பிரதிநிதி குருதத்சோந்தி ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது பற்றி மற்ற ஆசிய நாடுகளின் பிரதிநிதிகளுடன் விவாதித்தார்.
அதன் விளைவாக 1949 ம் ஆண்டு ஆசிய தடகள அமைப்பு உருவாக்கப்பட்டது. ஆசிய விளையாட்டுக் கூட்டமைப்பு (Asian Games Federation) 1949 இல் உருவாக்கப்பட்டது. பின்னர் இது ஆசிய ஒலிம்பிக் அவையாக (Olympic Council of Asia) மாறியது.
இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த உடனேயே, 1951-ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் முதன்முதலில் நடத்தப்பட்டன. போரில் முறிந்துபோன ஆசிய நாடுகளுக்கு இடையேயான பிணைப்புகளை விளையாட்டின் மூலம் மீண்டும் நிலைநாட்டவும், ஆசியாவில் நீடித்த அமைதிக்குப் பங்களிக்கவும் விரும்பிய இந்தியாவின் முதல் பிரதமரான நேருவால் இப்போட்டிகள் முன்னெடுக்கப்பட்டன. ஜப்பான் உட்பட 11 நாடுகள் மற்றும் 489 வீரர்கள் பங்கேற்க, முதல் போட்டிகள் புது தில்லியில் நடைபெற்றன.
1949 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதன் மூலம் ஆசிய விளையாட்டிற்கான குறிக்கோள் ‘EVER ONWARD’ (‘எப்போதும் முன்னோக்கி’) மற்றும் ஆசிய விளையாட்டிற்கான சின்னத்தை வடிவமைத்தார் குருதத் சோந்தி. அந்த சின்னம் 16 கதிர்களுடன் சிவப்பு நிறத்தில் ஒளிரும் சூரியன், அதன் நடுவில் வெள்ளை வட்டம் என வடிவமைக்கப்பட்டது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் (Asian Games) என்பது முதன் முதலில் 1951 ஆம் ஆண்டு மார்ச் 4 முதல் 11 வரை இந்தியாவின் புது தில்லியில் நடைபெற்றது. இதை 'ஏசியாட்' என்றும் அழைப்பார்கள். அதிலிருந்து ஆசிய நாடுகளுக்கு இடையே நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பெரிய விளையாட்டு விழாவாக ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மாறியது .
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தற்போது ஆசிய ஒலிம்பிக் மன்றத்தின் (Olympic Council of Asia) அங்கீகாரம் பெற்ற 45 நாடுகள் வழக்கமாகப் பங்கேற்கின்றன. இதில் அனைத்து ஆசிய போட்டிகளிலும் ,1951 முதல் தொடர்ச்சியாக பங்கேற்ற 7 முக்கிய நாடுகள் இந்தியா, ஜப்பான், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், இலங்கை, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகும். ஆசிய விளையாட்டுப் போட்டிகளை அதிக முறை நடத்திய நாடுகளில் தாய்லாந்து முதலிடத்திலும், அதனைத் தொடர்ந்து தென் கொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் முன்னிலையில் உள்ளன.
தாய்லாந்து (4 முறை): பாங்காக் நகரில் 1966, 1970, 1978 மற்றும் 1998 ஆகிய ஆண்டுகளில் போட்டிகளை நடத்தியுள்ளது. மூன்று முறை தென் கொரியாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன 1986 ( சியோல்), 2002( சுமார்), 2014 ( இன்சியான் நகரில் 17 வது ஆசியாட் இதில் 45 நாடுகள் கலந்து கொண்டன).
சீனா (3 முறை): 1990 (பெய்ஜிங்), 2010 (குவாங்சூ) மற்றும் 2023 (ஹாங்சோ) ஆகிய ஆண்டுகளில் நடத்தியுள்ளது.ஜப்பான் (3 முறை): 1958 (டோக்கியோ), 1994 (ஹிரோஷிமா) மற்றும் 2026 (ஐச்சி-நாகோயா) ஆகிய ஆண்டுகளில் நடத்தியுள்ளது.
இந்தியா (2 முறை): 1951 மற்றும் 1982 ஆகிய ஆண்டுகளில் புது டெல்லியில் நடத்தியுள்ளது. இது வரை நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சீனா அதிக பதக்கங்களை வென்றுள்ளது. அடுத்து ஜப்பான் அடுத்ததாக தென் கொரியா இந்த வரிசையில் உள்ளது.
சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இந்தியா முதன்முறையாக 107 பதக்கங்களுடன் சாதனை படைத்து, 100 பதக்கங்கள் என்ற வரலாற்று மைல்கல்லைக் கடந்தது.107 பதக்கங்கள் (28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம்). முந்தைய சிறந்தது: 2018 ஜகார்த்தா-பாலெம்பாங் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 70 பதக்கங்கள். ஒட்டுமொத்த தரவரிசை பதக்கப் பட்டியலில் 4வது இடத்தில் இந்தியா உள்ளது.
2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் புதிய மாற்றங்கள், ஜப்பானின் சொகுசு கப்பல் ஏற்பாடு மற்றும் போட்டியின் வரலாற்றுப் பின்னணி பற்றிய தெளிவான பார்வையை இக்கட்டுரையின் மூலம் பெறலாம்.