

இந்தியா உலகளவில் அதிக கிரிக்கெட் ரசிகர்களை கொண்ட நாடாக உள்ளதால் தானோ என்னவோ! உலகிலேயே அதிக அளவில் கிரிக்கெட் மைதானங்கள் இருப்பதும் இந்தியாவில்தான். அது மட்டுமல்ல உலகின் பெரிய மற்றும் உயரமான கிரிக்கெட் மைதானங்கள் இருப்பதும் இந்தியாவிலேதான். குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானம் உலகின் பெரிய கிரிக்கெட் மைதானமாக உள்ளது.
இங்குதான் இந்தியாவின் 1000 வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இமாச்சலப்பிரதேசத்தின் தர்மசாலாவில் உள்ள தௌலாதர் மலைத்தொடருக்கு எதிரே, கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,780 அடி உயரத்தில் உள்ள மைதானமே உயரமான மைதானமாக உள்ளது.
தற்போது அதனை விட 2 மடங்கு உயரத்தில் ஜம்மு காஷ்மீரில் சுமார் ரூ.100 கோடி மதிப்பீட்டில் லடாக்கில் உள்ள லே அருகே, திக்ஸே என்ற இடத்தில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 11,800 அடி உயரத்தில் கிரிக்கெட் மைதானம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மைதானம் கட்டி முடிக்கப்பட்டால் இதுவே உலகின் உயரமான கிரிக்கெட் மைதானமாக இருக்கும்.
இந்தியாவில் 52 சர்வதேச கிரிக்கெட் விளையாடும் மைதானங்கள் உள்ளன. ஆனால், அதில் ஒன்று கூட கிரிக்கெட் வீரர் பெயரில் இல்லை என்பது ஆச்சரியமான விஷயம் . உலகிலேயே இந்தியாவில்தான் அதிக கிரிக்கெட் மைதானங்கள் 52 உள்ளன. இரண்டாம் இடத்தில் உள்ள இங்கிலாந்து நாட்டில் 23 மைதானங்கள் மட்டுமே உள்ளது.
இந்தியாவின் முதல் டெஸ்ட் போட்டி இந்தியா- இங்கிலாந்து இடையே டிசம்பர் 1933 ம் ஆண்டு மும்பையில் உள்ள ஜிம் கானா மைதானத்தில்தான் நடைபெற்றது.இப்போது இங்கு கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதில்லை.
இந்தியாவின் இரண்டு பிரபலமான கிரிக்கெட் மைதானங்கள் பெண்கள் பெயரில்தான் உள்ளது. ஒன்று கொல்கத்தாவின் பிரபலமான ஈடன் கார்டன் மைதானம். இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக பிரிட்டிஷ் காலத்தில் இருந்த லார்டு ஆக்லாண்டின் தங்கைகள் எமிலி மற்றும் ஃபன்னி ஈடன் பெயரில்தான் இந்த கிரிக்கெட் மைதானம் 1864 இல் திறக்கப்பட்டது.
இந்த மைதானம் ராணுவத்திற்கு சொந்தமானது என்பது இதுவரை பலருக்கு தெரியாத ரகசியம். இந்த மைதானத்தில் 90 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கலாம்.
இந்தியாவின் முதல் பகல்- இரவு கிரிக்கெட் டெஸ்ட் போட்டி 2019 ம் ஆண்டு நவம்பர் 23 ம் தேதி பகல் 1 மணிக்கு இந்தியா- பங்களாதேஷ் இடையே கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. ( உலகின் முதல் பகல் -இரவு டெஸ்ட் போட்டி 2015 ம் ஆஸ்திரேலியா அடிலாய்டில் நடந்தது.)
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிகபட்ச கிரிக்கெட் வீரரின் ரன் 281. அதை இந்திய கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ் லட்சுமணன் 2001 ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக எடுத்தது ஈடன் கார்டனில்தான். அதேபோல் ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச பேட்ஸ் மேனின் ஸ்கோர் 264. இதை 173 பந்துகளில் 2014 ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக எடுத்தார் ரோகித் சர்மா அது நடந்தது ஈடன் கார்டனில் தான். ஒரு அணி கிரிக்கெட் ஆட்டத்தில் அதிக பட்சமாக 657/7 எடுத்தது.இதை இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக எடுத்ததும் ஈடன் கார்டனில்தான்.
மற்றொன்று உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் உள்ள 'கிரீன் பார்க் 'மைதானம்.பிரிட்டிஷ் காலத்தில் பெரிய பொறுப்பில் அதிகாரியாக இருந்த ஒருவரின் மனைவி மேடம் கிரீன்.அவர் குதிரையேற்ற பயிற்சி செய்ய 1945 ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பின்னர் கிரிக்கெட் மைதானமாக மாறியது. இந்தியாவில் மாணவர் பார்வையாளர் மாடம் உள்ள ஒரே மைதானம் இதுதான். கிரீன் பார்க், உலகின் மிகப்பெரிய, கையால் இயக்கப்படும் ஸ்கோர்போர்டைக் கொண்டுள்ளது.
இந்தியாவில் ஒரேயொரு கிரிக்கெட் மைதானம் மட்டும் பிரபலமான ஒரு ஹாக்கி வீரர் பெயரில் உள்ளது. அது தான் கே.டி.சிங் பாபு ஸ்டேடியம். லக்னோவில் உள்ள இந்த கிரிக்கெட் மைதானத்தில் ஒரே ஒரு முறை 1994 ம் ஆண்டு டெஸ்ட் மேட்ச் நடந்தது. உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கே.டி. சிங் பாபு மைதானம், புகழ்பெற்ற இந்திய ஹாக்கி வீரர் குன்வர் திக்விஜய் சிங்கின் பெயரால் அழைக்கப்படுகிறது.
இது வரை மும்பையில் மட்டுமே மூன்று மைதானங்களில் கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளது. அவைகள் பாம்பே ஜிம் கானா மைதானம், பிரபோன்ஸ் ஸ்டேடியம். இங்குதான் இந்தியாவின் முதல் டி20 போட்டி நடைபெற்றது. வான்கடே ஸ்டேடியம் சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், விஜய் மெர்ச்சன்ட் போன்ற புகழ்பெற்ற வீரர்களின் பெயர்களில் மாடங்கள் (Stands) உள்ள இங்குதான் 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டி நடைபெற்றது .
சென்னை சேப்பாக்கம் எனும் இடத்தில் உள்ளது. எம் ஏ சிதம்பரம் ஸ்டேடியம். இதனை 'சேப்பாக்கம் மைதானம்' என்று அழைக்கிறார்கள்.1934 இல் திறக்கப்பட்ட இந்த மைதானத்தில் 38 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கலாம். இதுவும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு புகழ்பெற்ற மைதானம் ஆகும். 1934 ம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே மாதத்தில் இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது சேப்பாக்கம் மைதானத்தில் தான். 2021 ம் ஆண்டு பிப்ரவரி 5 ம் தேதி முதல் 9 வரை ஒரு டெஸ்ட் போட்டியும், அடுத்து பிப்ரவரி 13 முதல் 17 வரை இரண்டாவது டெஸ்ட் போட்டியும் நடந்தது. கிரிக்கெட் வரலாற்றில் இப்படி நடந்தது அதுவே முதல் முறை, காரணம் கொரோனா.
பட்டேல் ஸ்டேடியம் நவி மும்பையில் நெருன் பகுதியில் அமைந்துள்ளது. 60 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கலாம். இங்கு 9 டென்னிஸ் கோர்ட்கள், நாலு பேட்மிட்டன் கோர்ட்டுகள், ஒரு ஒலிம்பிக் நீச்சல் குளம் ஆகியவை உள்ளன. கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும் . அதற்கு ஏதுவாக இசை அமைப்பு வசதி செயயப்பட்ட கிரிக்கெட் மைதானம் இது மட்டுமே.
சின்னசாமி ஸ்டேடியம் பெங்களூர் குயின்ஸ் ரோடு கப்பன் பார்க் மத்தியில் அமைந்துள்ளது.1969ல் கட்டப்பட்டது. நிறைய சர்வதேச போட்டிகள் நடைபெற்றுள்ள மைதானம் ஆகும். இதில் 70 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வசதி உள்ளது. சிறியதும், ஆரவாரமானதும், பெரும்பாலும் அதிக ரன்கள் குவிக்கப்படுவதுமான இந்த மைதானத்தில்தான், 2013-ல் ரோஹித் சர்மா ஒருநாள் போட்டியில் சாதனை படைத்த இரட்டைச் சதம் அடித்தார்.