
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி, டெஸ்ட் போட்டிகளில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றார். அதற்குப் பின் அவருடைய பெயரைத் தான் கிரிக்கெட் உலகம் தொடர்ந்து உச்சரித்துக் கொண்டே இருக்கிறது. பலர் விராட் கோலிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வரும் நிலையில், சிலர் கோலியுடன் விளையாடியதை நினைவு கூர்ந்துள்ளனர். அவ்வகையில், விராட் கோலியின் நெருங்கிய நண்பரான ஏபி டிவில்லியர்ஸ் தனது நினைவுகளைப் பகிர்ந்துள்ளார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், தொடக்க காலத்தில் இவருக்கு கோலியை பிடிக்கவே பிடிக்காதாம். பிறகு எப்படி நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள் என்பதில் தான் சுவாரஸ்யமே இருக்கிறது.
தென்னாபிரிக்காவைச் சேர்ந்த டிவில்லியர்ஸ் மற்றும் இந்தியாவின் விராட் கோலி ஆகிய இருவரும் கிரிக்கெட் உலகில் மிகச் சிறந்த நண்பர்களாக கருதப்படுகின்றனர். விராட் கோலி குறித்து விமர்சனங்கள் எழுந்தால், உடனே டிவில்லியர்ஸ் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பார். அதற்கேற்ப கோலியும் அவ்வப்போது டிவில்லியர்ஸ் பற்றி கருத்துகளை கூறுவார். அந்த அளவிற்கு இருவரும் நெருங்கிய நண்பர்களாகவும், உடன் பிறவா சகோதரர்களாகவும் பழகி வருகின்றனர். இதற்கெல்லாம் முக்கிய காரணமே ஐபிஎல் தொடர் தான் என்றால் அது மிகையாகாது.
ஐபிஎல் தொடர் இந்திய வீரர்களுக்கும், வெளிநாட்டு வீரர்களுக்கும் இடையிலான நட்புறவை மேம்படுத்தி வருகிறது. ஐபிஎல் தொடரில் பல வீரர்கள் நண்பர்களாகி உள்ளனர். ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல் கூட ஐபிஎல் தொடரில் விளையாடிய போது தான், கோலியுடன் நண்பரானார். அவ்வகையில் டிவில்லியர்ஸ் மற்றும் கோலி ஆகியோரின் நட்புக்கு அடித்தளமாக அமைத்துக் கொடுத்ததே ஐபிஎல் தொடர் தான்.
விராட் கோலியுடனான நட்பு குறித்து சமீபத்தில் பேசிய டிவில்லியர்ஸ், “ஆரம்பத்தில் எனக்கு விராட் கோலியை பிடிக்காது. களத்தில் அவர் எதிரணி வீரர்களை நண்பர்களாக பார்க்க மாட்டார்; கடுமையான போட்டியாளர்களாகவே பார்ப்பார். கோலிக்கு எதிராக நான் விளையாடிய பல போட்டிகள் எனக்கு மிகவும் கடினமாகவே இருந்தது. அவரைப் பற்றி தெரியாத வரை தான் பிடிக்காமல் இருந்தது. ஆனால் கோலியின் குணத்தைப் பற்றித் தெரிந்ததும் எனக்கு அவரை மிகவும் பிடித்து விட்டது. விராட் கோலியுடன் இணைந்து விளையாடும் வாய்ப்பை ஐபிஎல் தொடர் மூலமாகவே பெற்றேன்.
நாங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கு ஐபிஎல் தொடர் தான் காரணம். அவருடன் இணைந்து விளையாடிய போது நன்றாக புரிந்து கொண்டேன். கிரிக்கெட்டில் கோலி எனக்கு ஒரு சகோதரரைப் போன்றவர். நாங்கள் இருவரும் பல போட்டிகளில் பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களைக் குவித்த போது தான் எங்களுக்குள் நெருக்கம் அதிகமானது.
பெங்களூர் அணிக்காக நாங்கள் இருவரும் இணைந்து பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்திருக்கிறோம். களத்தில் எங்கள் இருவரின் இலக்கும் வெற்றி மட்டுமே. இப்போது குடும்ப நண்பர்களாகவும் எங்களது நட்பைத் தொடர்கிறோம். பெங்களூர் அணிக்காக கோலியுடன் களத்தில் விளையாடிய ஒவ்வொரு நொடியையும் நான் உணர்வுப்பூர்வமாக ரசித்திருக்கிறேன்.
அவருடன் இணைந்து கிரிக்கெட் விளையாடிய காலங்களையும், ஐபிஎல் தொடரின் போது அவருடன் நேரம் செலவிட்டதையும் என்னால் மறக்கவே முடியாது. எங்கள் அணிக்குத் தேவையான அனைத்தையும் நாங்கள் கொடுத்துள்ளோம்” என டிவில்லியர்ஸ் தெரிவித்தார்.