கிரிக்கெட் வரலாற்றை மாற்றி எழுதிய 5 தவறான தீர்ப்புகள்... அம்பயர்களின் தில்லுமுல்லு அம்பலம்!

famous wrong umpiring decisions in cricket history
famous wrong umpiring decisions in cricket history
Published on

கிரிக்கெட் என்பது வெறும் 22 Yards இடைவெளியில் நடக்கும் ஒரு சாதாரண விளையாட்டு கிடையாது. அது பல நூறு கோடி மக்களின் உணர்வுகளோடும் இதயத் துடிப்போடும் கலந்த ஒன்று. ஒரு பேட்ஸ்மேன் பல மணி நேரம் சிந்திய வியர்வையையும், பந்துவீச்சாளரின் பல ஆண்டு கால உழைப்பையும் ஒரு நடுவரின் ஒற்றை விரல் அசைவு மொத்தமாக அழித்துவிடும். 

இன்று நம்மிடம் தவறுகளைத் திருத்திக்கொள்ள டி.ஆர்.எஸ் (DRS) எனப்படும் நவீன தொழில்நுட்பம் உள்ளது. ஆனால், இந்த வசதி இல்லாத காலத்தில் நடுவர்கள் செய்த சில தவறான தீர்ப்புகளால் கிரிக்கெட் வரலாறே எப்படித் தலைகீழாக மாறியது என்பதைப் பற்றித்தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம்.

1. சிதைக்கப்பட்ட சாதனை: 

2007 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உள்ள ஹோபர்ட் மைதானத்தில் இலங்கை அணி வெற்றி இலக்கை நோக்கிப் போராடிக் கொண்டிருந்தது. அப்போது சங்கக்காரா மிகச் சிறப்பாக விளையாடி 192 ரன்கள் குவித்திருந்தார். ஸ்டூவர்ட் கிளார்க் வீசிய பவுன்சர் பந்து சங்கக்காராவின் தோள்பட்டை பேடில் பட்டு விக்கெட் கீப்பரிடம் தஞ்சம் அடைந்தது. 

நடுவர் ரூடி கோர்ட்சன் அவுட் கொடுக்க, சங்கக்காரா அதிர்ச்சியில் உறைந்து நின்றார். ரிப்ளேவில் பந்து பேட்டில் படவே இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. அன்று மட்டும் டி.ஆர்.எஸ் இருந்திருந்தால், அவர் இரட்டை சதம் அடித்திருப்பதுடன், ஆஸ்திரேலிய மண்ணில் இலங்கைக்கு முதல் டெஸ்ட் வெற்றியையும் பெற்றுக் கொடுத்திருப்பார்.

2. பறிபோன உலகக்கோப்பை கனவு!

1999 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. அப்போது கேப்டன் ஹன்சி குரோனியே பேட்டிங் செய்து கொண்டிருந்தார். ஷேன் வார்ன் வீசிய பந்து குரோனியேவின் காலில் பட்டு ஸ்லிப்பில் நின்ற மார்க் வாக் வசம் சென்றது. பந்து ஷூவின் நுனியில் பட்டதே தவிர பேட்டில் படவில்லை, ஆனால் நடுவர் அவுட் கொடுத்துவிட்டார். 

அங்கே டி.ஆர்.எஸ் இருந்திருந்தால் குரோனியே நிச்சயம் ரிவியூ செய்திருப்பார். ஒருவேளை தென்னாப்பிரிக்க அணி உலகக்கோப்பையை வென்று, தங்களின் மீதான Chokers என்ற மோசமான முத்திரையையும் துடைத்தெறிந்திருக்கலாம்.

3. ஹாட்ரிக் சாதனை, இருண்ட போட்டி!

2001 கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார். ஆனால், கில்கிறிஸ்ட் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆக்கப்பட்ட அந்த பந்து, லெக் ஸ்டம்பிற்கு வெளியே பிட்ச் ஆகி பேட்டிலும் பட்டிருந்தது. அன்று டி.ஆர்.எஸ் இருந்திருந்தால் கில்கிறிஸ்ட் நாட் அவுட் ஆகியிருப்பார், ஹர்பஜனின் ஹாட்ரிக் சாதனையும், இந்தியாவின் வரலாற்று வெற்றியும் ஒருவேளை நிகழாமலேயே போயிருக்கலாம். 

இதையும் படியுங்கள்:
ஐயோ பாவம்... இப்படித்தான் நாம மத்தவங்கள நம்பி மோசம் போறோமா? உஷார்!
famous wrong umpiring decisions in cricket history

4. இதைவிட மோசம் 2008 சிட்னி டெஸ்ட் போட்டி. நடுவர்கள் ஸ்டீவ் பக்னர் மற்றும் மார்க் பென்சன் செய்த தவறுகளால் அந்த போட்டியே இருண்டு போனது. ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் 30 ரன்களில் எட்ஜ் ஆகியும் அவுட் கொடுக்கப்படவில்லை. அவர் 162 ரன்கள் குவித்தார். ஆனால் ராகுல் டிராவிட் பேட்டில் பந்து படாமலேயே அவுட் கொடுக்கப்பட்டார். அந்த தொடரில் நடுவர்களின் தவறுகளால்தான் இந்தியா வெற்றியை நழுவவிட்டது என்பதை ஸ்டீவ் பக்னர் பின்னாளில் ஒப்புக்கொண்டார்.

5. கண்ணீரில் முடிந்த கதை!

இறுதியாக 1993 அடிலெய்டு டெஸ்ட் போட்டி. ஆஸ்திரேலியா வெற்றி பெற வெறும் 2 ரன்கள் தேவை, கையில் ஒரு விக்கெட் மட்டுமே இருந்தது. கர்ட்னி வால்ஷ் வீசிய பந்தை கிரேக் மெக்டெர்மோட் எதிர்கொண்டார். பந்து அவரது ஹெல்மெட்டில் பட்டு கீப்பரிடம் செல்ல, நடுவர் அவுட் கொடுத்தார். ஒரு ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோல்வியைத் தழுவியது. மெக்டெர்மோட் கண்ணீருடன் வெளியேறிய அந்த காட்சி இன்றும் ரசிகர்களை உலுக்குகிறது. டி.ஆர்.எஸ் இருந்திருந்தால் ஆஸ்திரேலியா ஒரு விக்கெட் வித்தியாசத்தில் சரித்திர வெற்றியைப் பெற்றிருக்கும்.

இதையும் படியுங்கள்:
மிரட்டலான வேகம்... இந்திய சந்தையில் இன்று அறிமுகம்... 'Audi SQ8' சொகுசு கார்!
famous wrong umpiring decisions in cricket history

இன்று டி.ஆர்.எஸ் வந்த பிறகு நடுவர்களின் தவறுகள் பெருமளவு குறைந்துள்ளன. ஆனாலும், இந்த 5 பழைய நினைவுகள் இன்றும் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் விவாதப் பொருளாகவே இருக்கின்றன. இந்தத் தவறான தீர்ப்புகள் மட்டும் நடக்காமல் இருந்திருந்தால், இன்று நாம் கொண்டாடும் பல சாதனைகள் காணாமல் போயிருக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com