
ஆந்திராவின் காக்கிநாடா மாவட்டத்தை சேர்ந்த 52 வயது கொண்ட பெண்மணி ஒருவர் வங்கக்கடலில் 150 கிலோ மீட்டர் தூரம் நீந்தி சாதனை படைத்துள்ளார். 52 வயதில் அவர் செய்த மிகப்பெரிய சாதனை அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக ஒருவர் நீச்சலடித்து அரை கிமீ போகும் முன்னரே முழு சக்தியும் கரைந்து போய்விடும். இந்த 52 வயது பெண்மணி 150 கிமீ தூரம் கடந்து இந்த சாகசத்தை செய்துள்ளார்! விசாகப்பட்டினத்தில் தொடங்கிய அவரது நீச்சல் பயணம் அவரது சொந்த ஊரான காக்கிநாடாவில் நிறைவடைந்தது. இந்த சாகசப் பயணம் செய்த பெண்மணியின் பெயர் கோலி ஷாமளா.
காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள சமர்லகோட்டாவை சேர்ந்தவர் கோலி ஷாமளா. இவருக்கு கடலில் நீந்துவது விருப்பமான விளையாட்டு. 2019 இல்தான் ஷாமளா தனது நீச்சல் பயிற்சியை தொடங்க ஆரம்பித்தார். படிப்படியாக தனது திறனை மேம்படுத்திக் கொண்டார். அவருக்கு நீச்சலில் பெரியதொரு சாதனை செய்ய ஆர்வம் வந்தது. அதற்கு பயிற்சியை அதிகப்படுத்தி சாகச முயற்சியை மேற்கொண்டார்.
ஷாமளாவின் நீச்சல் பயிற்சியாளர் ஜான் சித்திக்கின் ஊக்கத்தினால், சர்வதேசப் போட்டிகளில் கலந்து கொள்ள முயற்சிகளை மேற்கொண்டார். அவரது முயற்சியில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதும் ஒன்று. ஆனால், அவரின் வயதின் காரணமாக ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள முடியாமல் போனது. அதன் பிறகு மாஸ்டர்ஸ் நீச்சல் போட்டிகளில் ஷாமளா பங்கேற்றார். தனது முதல் போட்டியிலேயே 6 வது இடத்தை பிடித்தார்.
அதன் பிறகு ராமசேது அருகே ஷாமளா தனது சாகசத்தை தொடங்கினார். ராமேஸ்வரத்தில் தொடங்கி இலங்கையின் தலைமன்னாரில் நிறைவு செய்தார். இந்த சாகச பயணத்தை அவர் 13 மணி நேரம் 43 நிமிடங்களில் நிறைவு செய்தார். இந்த சாதனை செய்த இரண்டாவது பெண்மணியாக கோலி ஷாமளா இருந்தார்.
இவருக்கு முன் அமெரிக்காவின் கேடலினா தீவில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் வரை 36 கிலோமீட்டர் தூரத்தை பிளாரன்ஸ் என்ற பெண்மணி கடந்ததுள்ளார். ஷாமளா இதேபோல், லட்சத்தீவு, கீல்டன் தீவு, கத்மத் தீவு ஆகிய தீவுகளையும் ஹூக்ளி, கங்கை, பாகீரதி போன்ற ஆறுகளில் மிக நீண்ட தூரத்தினை கடந்து சாதனை செய்துள்ளார்.
கடந்த டிசம்பர் 28 தேதியிலிருந்து ஜனவரி 4 ஆம் தேதி வரை விசாகப்பட்டினம் முதல் காக்கிநாடா வரை தனது நீச்சல் பயணத்தை தொடங்கினார். தினசரி 30, கிமீ தூரம் நீச்சல் பயணம் மேற்கொண்டு 150 கிமீ துரத்தினை கடந்து இறுதியாக காக்கிநாடாவில் உள்ள சூர்யா ராவ் கடற்கரையை அடைந்தார். அங்கு உள்ளூர் மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவரது சாதனையை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பாராட்டியுள்ளார்.
தனது சாதனை குறித்து பேசிய கோலி ஷாமாளா "தான் செய்த நீச்சல் சாதனைகள் அனைத்தும் விழிப்புணர்வுக்காக மட்டுமே செய்யப்பட்டது. அனைவரும் நீச்சல் மற்றும் நீர் சார்ந்த போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டும். அரசும் அதற்கு ஊக்கம் அளிக்க வேண்டும்," என்று கூறினார்.