
ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் தனது நாட்டுக்காக தேசிய அணியில் விளையாட வேண்டுமென்ற கனவோடு தான் களத்திற்குள் நுழைகின்றனர். ஆனால் ஒருசிலருக்கு மட்டும் இந்தக் கனவு இன்னும் கனவாகவே இருக்கிறது. இந்திய அணியில் இடம் பிடிக்க பல இளம் வீரர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். அதேபோல் இந்திய அணிக்குத் தேர்வான சில வீரர்களுக்கும் களத்தில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அப்படிப்பட்ட ஒரு வீரர் தான் அபிமன்யூ ஈஸ்வரன்.
பெங்காலைச் சேர்ந்த அபிமன்யூ ஈஸ்வரன் முதல் தரப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி ரன்களைக் குவித்ததால், தேசிய அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் இந்திய டெஸ்ட் அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு கிட்டத்தட்ட நான்கரை ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனால் இன்று வரை ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கூட இவருக்கு கிடைக்கவே இல்லை.
அபிமன்யூவுக்குப் பின் இந்திய அணிக்குத் தேர்வான 15 வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகி விட்டனர். ஆனால் இன்று வரை இந்திய டெஸ்ட் அணிக்குத் தேர்வாகி வரும் அபிமன்யூ ஈஸ்வரனுக்கு, களத்தில் விளையாடும் வாய்ப்பு எட்டாக்கனியாகவே உள்ளது.
அபிமன்யூ ஈஸ்வரன் மீது மட்டும் ஏன் இந்தப் பாரபட்சம்? வாய்ப்பை வழங்க மறுக்கையில், ஏன் இந்திய அணிக்குத் தேர்வு செய்ய வேண்டும்? இதுபோன்ற பல கேள்விகள் ரசிகர்களுக்கு உண்டு. கோலி கேப்டனாக இருந்த போது இந்திய அணிக்குள் வந்தவர் அபிமன்யூ ஈஸ்வரன். தற்போது ரோஹித் சர்மாவுக்குப் பின் சுப்மன் கில் கேப்டன்சியை எடுத்து விட்டார். ஆனாலும் அபிமன்யூ மீதான பாரபட்சம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
இதுவரை இவர் 103 முதல் தரப் போட்டிகளில் 27 சதங்கள் மற்றும் 31 அரைசதங்களுடன் 7,841 ரன்களைக் குவித்துள்ளார். 2021 ஜனவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அபிமன்யூ தேர்வானார். அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு முறை அணித்தேர்வு நடைபெறும் போதெல்லாம் அபிமன்யூவின் பெயர் தவறாமல் இடம்பெறுகிறது. ஆனால், விளையாடும் வாய்ப்பை மட்டும் வழங்க மறுக்கின்றனர். வாய்ப்பு கிடைக்காததால் எனது மகன் மனதளவில் சோர்வடைந்து விட்டான் என அபிமன்யூவின் தந்தை ரங்கநாதன் ஈஸ்வரன் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “வாய்ப்பு கிடைக்காததால் எனது மகன் மனச்சோர்வடைந்து இருக்கிறான். ஐபிஎல் தொடரை வைத்து டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அணியை தேர்வு செய்கின்றனர். ஆனால் ரஞ்சி டிராபி, துலீப் டிராபி மற்றும் ராணிக் கோப்பை போன்ற உள்ளூர் போட்டிகளின் அடிப்படையில் தான் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். எனது மகன் முதல் தரப் போட்டிகளில் சிறப்பாக விளையாடியும், 11 பேர் கொண்ட அணியில் இடம் கிடைக்கவில்லை. இது புறக்கணிப்பின் உச்சம்.
அபிமன்யூ இந்திய அணியில் இணைந்து இன்னும் அறிமுகமாகாத நாட்களை மட்டும் நான் எண்ணவில்லை; ஆண்டுகளையும் எண்ணிக் கொண்டிருக்கிறேன். தேர்வுக்குழு ஒருதலைப்பட்சமாக செயல்படுவது எனது மகனுக்கு மட்டுமல்ல, வாய்ப்புக்காக ஏங்கும் பல வீரர்களின் கனவை உடைப்பதற்கு சமம்” என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.