
இந்தியாவின் தற்போதைய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இளம் வீரர்கள் தான் அதிகமாக உள்ளனர். புதிய கேப்டன் சுப்மன் கில் அணியை சிறப்பாக வழிநடத்தினாலும், இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியை வெறும் 22 ரன்களில் இந்தியா கைநழுவ விட்டது. மிகக் குறைந்த ரன்களில் டெஸ்ட் போட்டியை இழப்பது இந்தியாவிற்கு இதுவொன்றும் புதிதல்ல. அந்த வகையில் மிகக் குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றியை நழுவ விட்ட டாப் 5 டெஸ்ட் போட்டிகள் குறித்து இப்போது பார்ப்போம்.
1. 1999 ஆம் ஆண்டு சென்னை சேப்பாக்கத்தில் பாகிஸ்தான் நிர்ணயித்த 271 ரன்கள் இலக்கைத் துரத்திய இந்திய அணி 258 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இப்போட்டியில் சச்சின் சதம் அடித்தார். இருப்பினும் சச்சின் அவுட் ஆன பிறகு இந்தியா விக்கெட் சரிவைக் கண்டதால் வெறும் 12 ரன்களில் வெற்றியை இழந்தது. இப்போட்டியில் த்ரில் வெற்றியைப் பெற்ற பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு மதிப்பளிக்கும் விதமாக சென்னை ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டினர். எதிரணியின் வெற்றியைக் கூட சென்னை ரசிகர்கள் மதிப்பார்கள் என்ற வரலாறு இன்றும் தொடர்கிறது.
2. 1971 ஆம் ஆண்டு பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 16 ரன்களில் வெற்றியை நழுவ விட்டது இந்தியா. வெற்றி இலக்கான 341 ரன்களைத் துரத்திய இந்திய அணி 324 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இப்போட்டியில் சுனில் கவாஸ்கர் சதமடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
3. 1987 ஆம் ஆண்டு பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்ட இந்தியா, 16 ரன்களில் தோல்வியைத் தழுவியது. சொந்த மண்ணில் 221 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய இந்திய அணியால் 204 ரன்களே எடுக்க முடிந்தது. இப்போட்டியில் கவாஸ்கர் அதிகபட்சமாக 96 ரன்களை எடுத்திருந்தார்.
4. நடப்பாண்டில் இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. 193 என்ற எளிதான இலக்கை எட்டி முடியாமல் 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்தியா. இப்போட்டியில் தொடக்க நிலை பேட்ஸ்மேன்கள் சொதப்பிய நிலையில் ரவீந்திர ஜடேஜா மட்டும் வெற்றிக்காக கடைசி வரை போராடி நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்தார். இருப்பினும் மற்ற வீரர்களின் ஒத்துழைப்பு இல்லாததால் இந்தியா வெற்றி பெற வேண்டிய இந்த டெஸ்ட் போட்டியை இழந்து விட்டது.
5. கடந்த ஆண்டு மும்பை வான்கடே மைதானத்தில் நியூசிலாந்து அணியிடம் 25 ரன்களில் வெற்றியை நழுவ விட்டது இந்தியா. மிகவும் எளிய இலக்கான 147 ரன்களை எட்டி முடியாமல் சொந்த மண்ணில் 121 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்தியா. விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் இந்திய மண்ணில் கடைசியாக விளையாடிய டெஸ்ட் போட்டி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா நழுவ விட்ட இந்த 5 டெஸ்ட் போட்டிகளில் 3 போட்டிகள் சொந்த மண்ணில் நடைபெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.