

நேற்று நடைபெற்ற ஒரு உள்ளூர் போட்டியில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் ஷர்மா கட்டிய அதிரடி, இந்திய அளவில் பேசுபொருளாகியுள்ளது. சமீபத்திய போட்டிகளில் வைபவ் சூரியவன்சியுடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கும் அபிஷேக், தொடர்ச்சியாக அதிரடியாக விளையாட ஆசைப்பட்டு ஒற்றை இலக்கத்தில் அவுட் ஆகி வெளியேறிக் கொண்டிருந்தார். பலரும் அபிஷேக், "வைபவை போலவே மிகவும் அதிரடியாக விளையாட வேண்டும் என்று நினைத்து தேவையற்ற ஷாட்களை அடித்து உடனடியாக அவுட் ஆகி விடுகிறார்", என்ற குற்றச்சாட்டை முன் வைத்தனர்.
வைபவ் அணிக்கு வந்த பின்னர் அபிஷேக்கின் ஆட்டத்தில் ஒரு மாற்றம் தெரிந்தது. ஆனால், அதற்கு முன்னர் அயர்லாந்து தொடரில் ஒட்டுமொத்த இந்திய அணி சொதப்பி இருந்தாலும், அபிஷேக் மட்டும் தன் நிலையில் இருந்து சரியான முறையில் விளையாடினார். ஆயினும் , தற்போது நடந்து முடிந்த இங்கிலாந்து மற்றும் ஜிம்பாவே தொடரில் அபிஷேக் சரியாக விளையாடாமல், விரைவில் அவுட் ஆகி விடுகிறார், என்ற விமர்சனம் அவர் மீது கிளம்பியது.
ஜிம்பாப்வேவிற்கு எதிரான டி20 தொடரில் சொற்ப ரன்களிலேயே அவுட் ஆகி , மைதானத்திற்கு திரும்பியதால் அபிஷேக் மீதான விமர்சனங்கள் மேலும் அதிகமானது. இறுதியாக அவர் விளையாடிய 6 சர்வதேச டி20 போட்டிகளில் வெறும் 40 ரன்கள் எடுத்தது தேர்வுக் குழுவினரை அதிர வைத்தது. இந்த தொடரின் 3 போட்டிகளிலும் அவர் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. அதனால், அந்த தொடரின் முடிவில் இவரை அணியை விட்டே தூக்க வேண்டும், என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தில் பேசப்பட்டதாக தகவல்களும் வெளியாகின.
மேலும் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் , கிரிக்கெட் விமர்சகர்களும் "அபிஷேக்கை மட்டும் தொடர்ந்து விளையாட அனுமதிப்பது ஏன்? இந்த வாய்ப்பை சஞ்சு சாம்சன் , கே. எல்.ராகுல் உள்ளிட்ட மற்ற வீரர்களுக்கு கொடுப்பதில்லையே?" போன்ற கேள்விகளை எழுப்பினர். இந்த கருத்துக்கள் சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வந்தன.
ஜிம்பாப்வே தொடரில் இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடிய வெற்றியைப் பெற்றாலும் , அபிஷேக்கிற்கு கிளம்பிய எதிர்ப்புகள் அதிகரித்து வண்ணம் இருந்தன.
இந்நிலையில் , நேற்று(ஆகஸ்ட் 2) அமிர்தசரஸில் உள்ள காந்தி மைதானத்தில் நடைபெற்ற, பஞ்சாப் இன்டர்-டிஸ்ட்ரிக்ட் சீனியர் ஆண்கள் ஒருநாள் கிரிக்கெட் தொடரில், அபிஷேக் ஆடிய ருத்ர தாண்டவம் அவரை விமர்சித்தவர்களின் வாயை மூட வைத்துள்ளது.
இந்த போட்டியில் அமிர்தசரஸ் அணிக்காக விளையாடிய அபிஷேக் 91 பந்துகளில் 233 ரன்களை விளாசினார். 25 சிக்சர்கள் அடித்து உள்ளூர் மக்களுக்கு வானவேடிக்கை காட்டியுள்ளார் , மேலும் 15 பவுண்டரிக்களையும் அடித்து அசத்தியுள்ளார். சிக்சர்கள் மூலம் 150 ரன்களையும் பவுண்டரிகள் மூலம் 60 ரன்களை கடந்து அவர் சாதனை செய்துள்ளார். இந்த அதிரடியின் மூலம் அமிர்தசரஸ் அணி 50 ஓவர்களில் 533/8 ஸ்கோரை எட்டியது.
இந்த இமாலய இலக்கை துரத்திய தரன் தரன் அணியால் 313 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. அபிஷேக்கின் அதிரடி அமிர்தசரஸ் அணியை பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளது. தரன் தரன் அணியில் அர்ஷ்தீப் சிங் , மண்பீரித் சிங் உள்ளிட்ட இந்திய அணி வீரர்களும் விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அதிரடியின் மூலம் அபிஷேக் தன் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்வார் என்று பேசப்படுகிறது.