
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அதிரடியாக விளையாடியதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வசப்படுத்தியது. சமீபகாலமாக தொடர் தோல்விகளை சந்தித்து வந்த நிலையில் இந்த வெற்றியின் மூலம் இந்தியா அணி அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தது.
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர்கள் அதிரடியாக விளையாடியது மட்டுமல்லாமல் பல சாதனைகளையும் புரிந்தனர். கடைசி தொடரில் அபிஷேக் ஷர்மா 135 ரன்களை எடுத்து சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக ரன் (13 சிக்ஸர்கள் ) குவித்த இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.
அதுமட்டுமின்றி இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரே டி20 தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரராக இருந்த விராட் கோலியின் சாதனையை அபிஷேக் சர்மா முறியடித்து உள்ளார். இந்த சாதனைகள் மூலம் தற்போது ஐசிசி வெளியிட்டு இருக்கும் டி20 தரவரிசைக்கான பட்டியலில், அபிஷேக் ஷர்மா புதிய உச்சத்தை பெற்றிருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மகத்தான வெற்றியை பெற்றதன் மூலம் மற்ற இந்திய வீரர்களும் தரவரிசை பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) 20 ஓவர் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதன்படி பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா (829 புள்ளி) 38 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். அவர் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் அதிரடியாக விளையாடி இந்தியாவின் வெற்றிக்கு உதவியதுடன் 54 பந்தில் 135 ரன்கள் விளாசியதன் மூலம் ஏற்றம் கண்டு 2-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.
ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் (855 புள்ளி) முதலிடத்தில் நீடிக்கிறார். இந்திய வீரர் திலக் வர்மா (803 புள்ளி) 3-வது இடத்திலும், பில் சால்ட் (798) 4-வது இடத்திலும், சூர்யகுமார் யாதவ் (738) 5-வது இடத்திலும் உள்ளனர். ஹர்திக் பாண்ட்யா 51-வது இடத்துக்கும், ஷிவம் துபே 58-வது இடத்துக்கு முன்னேறி உள்ளனர்.
பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இதுவரை ‘நம்பர் ஒன்’ இடத்தில் இருந்த இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் 20 ஓவர் போட்டிகளில் மோசமான விளையாட்டின் மூலம் 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்து வீச்சாளர் அகில் ஹூசைன் ஒரு இடம் முன்னோறி ‘நம்பர் ஒன்’ தனதாக்கிக்கொண்டார்.
இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடர் முழுவதும் அதிரடியாக பந்து வீசி இங்கிலாந்து வீரர்களை நிலைகுழைய வைத்ததுடன் மொத்தம் 14 விக்கெட்டுகள் வீழ்த்தி தொடர்நாயகனாக ஜொலித்த இந்திய சுழற்பந்து வீச்சாளரான தமிழகத்தை சேர்ந்த வருண் சக்ரவர்த்தி மூன்று இடம் உயர்ந்து அடில் ரஷித்துடன் 2-வது இடத்தை பகிர்ந்து கொண்டார்.
ஆல்-ரவுண்டர் தரவரிசையில் அதிரடி வீரர் இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா 251 புள்ளிகளுடன் தொடர்ந்து ‘நம்பர் ஒன்’ வீரராக அரியணையில் அமர்ந்துள்ளார்.