சினிமா டூ கிரிக்கெட்: ஆர்சிபி அணியை வாங்குவதில் ஹோம்பாலே பிலிம்ஸ் தீவிரம்..!

Is Hombale Films Buying RCB
Is Hombale Films Buying RCB
Published on

இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு பெரும் வருமானத்தை அள்ளி கொடுக்கும் அட்சயபாத்திரமாக ஐ.பி.எல். திகழ்கிறது. கடந்த ஜூன் 3-ந்தேதி நிறைவடைந்த 18-வது ஐ.பி.எல் கிரிக்கெட்டில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி முதல்முறையாக மகுடம் சூடியது பெங்களூரு ராயல் சேலஞ்ச் (ஆர்சிபி). கடந்த 17 சீசன்களில் ஒருமுறை கூட அந்த அணியால் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாத நிலையில், நீண்ட வருட காத்திருப்புக்கு பிறகு 18-வது சீசனின் ஆர்சிபி அணி (RCB) முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

அதனை தொடர்ந்து, ஆர்சிபியின் வெற்றிக்கொண்டாட்டம் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்தபோது ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால் நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியதுடன் ஆர்சிபி நிர்வாகம் மீது நிறைய விமர்சனங்கள் எழுந்தன. அந்த சம்பவத்திற்கு பிறகு இந்த அணி விற்கப்பட இருப்பதாக தகவல்கள் உலா வந்த நிலையில் தற்போது அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

2008-ம் ஆண்டு பெங்களூரு அணியை ஏலத்தில் ரூ.438 கோடிக்கு பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா வாங்கி சில சீசன்கள் அணியை வெற்றிகரமாக நடத்தினார். பிறகு வங்கியில் பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாமல் மல்லையா 2016-ம் ஆண்டு லண்டனுக்கு தப்பி சென்றதால், பெங்களூரு அணி இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மதுபான நிறுவனமான டியாஜியோ வசம் சென்றது.

இதையும் படியுங்கள்:
RCB வெற்றிக்கொண்டாட்டத்தில் நடத்த சோகம்- 11 பேர் பலி
Is Hombale Films Buying RCB

இத்தகைய சூழலில் டியாஜியோவின் துணை நிறுவனமான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் ஆர்சிபி ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளை விற்பனை செய்ய இருப்பதாக மும்பை பங்கு சந்தைக்கு கடிதம் எழுதியது. யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பிரவீன் சோமேஷ்வர் கூறுகையில், ‘ஆர்.சி.பி. அணி எங்களுக்கு மதிப்புமிக்க மற்றும் முக்கிய சொத்தாக இருந்து வருகிறது. ஆனாலும் எங்களின் முதன்மை தொழிலான மதுபான வர்த்தகத்துக்கு கிரிக்கெட் வணிகம் ஒரு முக்கிய அங்கமாக இல்லை. எனவே இந்த முடிவை எடுத்துள்ளோம்’ என்று தெரிவித்திருந்தது.

பெங்களூரு அணியின் தற்போதைய மதிப்பு 2 பில்லியன் அமெரிக்க டாலராக ( இந்திய மதிப்பில் ரூ.17,240 கோடி) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

சமீப காலமாக பல பெரிய முதலீட்டாளர்கள் ஆர்சிபி மீது கண் வைத்திருப்பதாகக் கூறப்படும் நிலையில் தான், ஆர்சிபி அணியை வாங்க சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம், அதானி குழுமம், ஜே.எஸ்.டபிள்யூ. குரூப்பின் பார்த் ஜிண்டால், ரவி ஜெய்புரியாவின் தேவ்யானி சர்வதேச குழுமம், ஜெரோதா இணை நிறுவனர் நிகில் காமத் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த இரு நிறுவனங்கள் என பல தொழிலதிபர்கள் போட்டா போட்டி போட்டு வருகின்றனர். அதற்கு முக்கிய காரணம், ஐபிஎல்லில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை, மும்பை அணியை விட அதிக மதிப்பு ஆர்சிபி அணிக்கு தான் உள்ளது என்று கூறப்படுகிறது.

இவர்களில் யார் இந்த அணியை வாங்குவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் புதிதாக ஒரு பிரபலம் இந்த களத்தில் குதித்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, பிரபல தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ், இந்தியன் பிரீமியர் லீக் உரிமையாளரான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை வாங்க முயற்சிகள் எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர். இந்நிறுவனம், ‘கேஜிஎஃப் 1’, ‘கே ஜி எஃப் 2’, ‘காந்தாரா’, ‘காந்தாரா 2’, 'சலார்' போன்ற பிரம்மாண்டமான பட்ஜெட் படங்களை தயாரித்து, பான் இந்திய படைப்பாக அளித்து, ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பிளாக்பஸ்டர் வெற்றிப் படங்களைத் தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் ஆர்சிபி அணி வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதன் மூலம் சினிமாவை தாண்டி கிரிக்கெட்டில் புதிய தொடக்கத்தை நோக்கிச் செல்வதாகக் கூறப்படுகிறது. ஆர்சிபி அணியை வாங்குவது குறித்து இரு தரப்பினரும் அதிகாரப்பூர்வமாக உறுதிபடுத்தவில்லை என்றாலும், ஹோம்பலே, டியாஜியோவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்கள்:
ஐபிஎல் அணிகளின் பிராண்ட் மதிப்பு: சறுக்கியது சென்னை, ஏறுமுகத்தில் ஆர்சிபி!
Is Hombale Films Buying RCB

டியாஜியோ, அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதிக்குள் இந்த விற்பனை நடவடிக்கைகளை முழுமையாக முடிக்க திட்டமிட்டுள்ளது. ஆர்சிபியை யார் வாங்கினாலும் உரிமையாளர் மாற்றத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் முறைப்படி அங்கீகரிக்க வேண்டியது அவசியமாகும். இதனால் இந்த நடைமுறை 2026-ம் ஆண்டு ஐபிஎல்யும் தாண்டி செல்வதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com