சொந்த ஊரிலேயே கல்லடி வாங்கி வளர்ந்த பெண்... இன்று ஆசிய விளையாட்டில் வரலாற்று சாதனை..!

தலிபான் அச்சுறுத்தலை மீறி இத்தாலிக்குத் தப்பிச் சென்று வரலாற்றுச் சாதனை படைத்த ஃபரிபா ஹாஷிமி!
ஆசிய விளையாட்டு
ஆசிய விளையாட்டுsource: al jazeea
கோவீ.ராஜேந்திரன்

வணக்கம், அடிப்படையில் நான் ஓர் ஆட்டோமொபைல் இன்ஜினியர், ரிலாக்சேஷனுக்காக பத்திரிகைகளில் ஆரம்பத்தில் துணுக்குகள் எழுத ஆரம்பித்தேன். பின்னர் கட்டுரைகள் எழுதும் அளவிற்கு வந்துள்ளேன். தமிழகத்தில் வரும் முன்னணி பத்திரிகைகளில் என்னுடைய கட்டுரைகள் 500க்கும் மேற்பட்டவைகள் வந்துள்ளது. பொது அறிவு சம்பந்தமாக இது வரை 12 புத்தகங்கள் எழுதியுள்ளேன். கல்கி ஆன்லைன் பத்திரிகை குழு நிர்வாகம் மற்றும் அதன் ஆசிரியர் குழு அன்பாலும், ஆதரவாலும் இது வரை 300 க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதி உள்ளேன் என்பதை நன்றியடன் தெரிவித்துக் கொள்கிறேன். வித்தியாமான தகவல்கள் அடங்கிய படைப்புகள் வழங்க வேண்டும் என்பது என் விருப்பம்.

Updated on: 

நடந்து முடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 45 நாடுகளைச் சேர்ந்த 11,000 க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது நாட்டிற்கு பெருமை சேர்த்தனர்.அதில் தங்கம் வென்று தங்களது பிறந்த நாட்டை பெருமை படுத்திய இரண்டு பெண்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்...

ரி சாங் கம் (Ri Song Gum) என்பவர் பெண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவில் மூன்று புதிய உலக சாதனைகளுடன் 2026 ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வட கொரியப் பளுதூக்கும் வீராங்கனை ஆவார். 28 வயது ரி சாங் கம் பெண்களுக்கான 49 கிலோ பளுதூக்குதல் பிரிவில் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 215 கிலோ (ஸ்னாட்ச்: 94 கிலோ, கிளீன் & ஜெர்க்: 121 கிலோ) எடையைத் தூக்கி உலக சாதனை படைத்தார்.

ஆசிய விளையாட்டுப் பளுதூக்குதலில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்ற முதல் பெண் வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.நடப்பு இருமுறை உலக சாம்பியனான இவர், 2018-ல் ஜகார்த்தாவில் 48 கிலோ எடைப் பிரிவிலும், 2023-ல் ஹாங்சோவில் 49 கிலோ எடைப் பிரிவிலும் வென்ற தனது ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் தங்கப் பதக்கங்களுடன் மேலும் ஒரு பதக்கத்தைச் சேர்த்துள்ளார்.

Ri Song Gum
Ri Song Gum

தொடக்க ஸ்னாட்ச் பிரிவில், ரி தனது தலைக்கு மேல் 94 கிலோ எடையைத் தூக்கினார், இது முந்தைய உலகத் தரமான 93 கிலோவை விட ஒரு கிலோகிராம் அதிகமாகும்.பின்னர் அவர், 116 கிலோ மற்றும் 121 கிலோ எடையைத் தூக்கி, கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 115 கிலோவாக இருந்த உலக சாதனையை இருமுறை முறியடித்தார். அவர் தூக்கிய மொத்த எடையான 215 கிலோ, முந்தைய உலக சாதனையை விட 7 கிலோ அதிகமாகும்.இந்த வெற்றியானது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அவர் மூலம் வட கொரியா பெற்ற முதல் தங்கப் பதக்கமாகும்.

"எனக்கு இந்தத் தங்கம் கிடைத்ததற்குக் காரணம் என் தாய்நாட்டின் மீது நான் கொண்ட உணர்வுகளுக்காகத்தான். அதோடு மக்கள் என் மீது பெரும் எதிர்பார்ப்புகளை வைத்திருந்தனர்," என்று ரி செய்தியாளர்களிடம் கூறினார்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வட கொரியா வென்ற முதல் தங்கப் பதக்கம் இது என்பதால், இந்த வெற்றி மிகவும் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக விளங்குகிறது. காரணம் வடகொரியா மீது உலக நாடுகளின் வெறுப்பான பார்வை காரணமாக சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் வட கொரியாவின் பங்கேற்பு குறைவாக உள்ள ஒரு காலகட்டத்தில் ரி சோங்-கமின் இந்தச் சாதனை நிகழ்ந்துள்ளது. அந்நாடு 2021-ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் போட்டியிடவில்லை, மேலும் 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற பாரிஸ் விளையாட்டுப் போட்டிகளுக்கும் தகுதி பெறவில்லை. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெற்ற இந்த வெற்றி, வட கொரிய விளையாட்டுத் துறைக்கு ஒரு முக்கியமான தருணமாகும்.

Fariba Hashim
Fariba Hashimsource:hindu

ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த பெண் சைக்கிள் ஓட்டுநர் ஃபரிபா ஹாஷிமி (Fariba Hashimi), 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு மகளிர் சாலை சைக்கிள் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தவர்.இந்த பெண்களுக்கான சைக்கிள் சாலை பந்தய இலக்கை 2 மணி நேரம், 50 நிமிடங்கள் மற்றும் 5 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.இதன் மூலம், 2002 ஆம் ஆண்டிற்கு பிறகு ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வெல்லும் முதல் ஆப்கானிஸ்தான் வீராங்கனை என்ற பெருமையை ஃபரிபா ஹாஷிமி பெற்றுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சிக்குப் பிறகு பெண்களின் சுதந்திரம் மற்றும் விளையாட்டு உரிமைகள் கடுமையாக மறுக்கப்பட்டன. இதனால் இவர் ஆரம்ப காலத்தில் ஆப்கானிஸ்தானில் சைக்கிள் பயிற்சி பெற ஆணாக மாறுவேடமிட்டுச் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது..

2021-ல் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து தனது நாட்டை விட்டு வெளியேறி, தற்போது இத்தாலியில் வசித்து வருகிறார்.பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளிலும் பங்கேற்றுள்ள இவர், ஆப்கானிஸ்தான் பெண்களின் தைரியத்திற்கும் உரிமைக்கும் அடையாளமாகத் திகழ்கிறார்.

தற்போது 23 வயதான ஹாஷிமி, 9 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2017 ஆம் ஆண்டில் தான் முதன்முறையாக சைக்கிள் ஒட்டக் கற்றுக்கொண்டுள்ளார். அவர் தன் அக்கா யுல்துஸ் ஹாஷிமியுடன் சேர்ந்து , ஃபர்யாப் பகுதியில் நடக்கவிருந்த ஒரு பந்தயத்திற்கான விளம்பரத்தைப் பார்த்தாள்.அதன் பின்னர், பக்கத்து வீட்டில் உள்ளவர்களின் சைக்கிளை இரவல் வாங்கி, சைக்கிள் ஓட்ட பயிற்சி எடுத்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் நிலவிய பழமைவாதச் சூழலால் பெண்கள் போட்டிகளில் பங்கேற்க எதிர்ப்பு எழும் என்பதால், தலைமுக்காடுகள், முகமூடிகள் மற்றும் சூரியக்கண்ணாடிகள் தரித்து ஆண் போல் மாறுவேடமிட்டு கலந்து கொண்டு போட்டிகளில் ஃபரிபா முதலிடத்தைப் பிடித்தார். அவரது அக்கா யுல்தூஸ் இரண்டாமிடத்தை பிடித்தார்.

அதை தொடர்ந்து அவர்களுக்கு சைக்கிள் மீதான ஆர்வம் அதிகரித்தாலும் உள்ளூர் மக்களின் எதிர்ப்பு காரணமாக போலியான ஆண் பெயர்கள் மற்றும் ஆடைகள் என ஆண் வேடமிட்டே தங்கள் அடையாளங்களை மறைத்து, அப்பகுதியில் இரகசியமாகப் பந்தயங்களில் ஈடுபட்டு வந்தனர்.மக்கள் அவர்களை கண்டறிந்த பின்னர், அவர்கள் வெளியே செல்லும் போது கற்கள் மற்றும் பாட்டில்களை வீசி தாக்குதல் நடந்துள்ளது.

2020 ஆம் ஆண்டில், அந்தச் சகோதரிகளின் விடாமுயற்சியையும் திறமையையும் அங்கீகரிக்கும் விதமாக, ஆப்கானிஸ்தானின் தேசிய மகளிர் சைக்கிள் ஓட்ட அணி, அவர்களைத் தங்கள் அணியில் சேர அழைப்பு விடுத்தது. ஆனால், 2021 ஆம் ஆண்டில் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் நிலைமை தீவிரமடைந்து பெண்கள் மீது கடுமையான அடக்குமுறை செலுத்தப்பட்டது.அந்தச் சகோதரிகள் சைக்கிள் ஓட்டுதலில் கொண்டிருந்த ஈடுபாடு, இத்தாலிய ஒலிம்பிக் வீராங்கனையான அலெஸாண்ட்ரா கேப்பெல்லோட்டோவுடன் அவர்களுக்கு ஒரு பிணைப்பை ஏற்படுத்தியது.

அவரின் உதவியுடன் இருவரும் ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பி இத்தாலிக்கு சென்றனர்.இத்தாலியில், இரு சகோதரிகளுக்கும் ஒலிம்பிக் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு, அதன் மூலம் அவர்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்பப் பயிற்சி உதவிகள் கிடைத்தன. பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில், ஆப்கானிஸ்தான் கொடியின் கீழ் போட்டியிட்ட 6 விளையாட்டு வீரர்களில், ஃபரிபாவும் யுல்தூஸும் இருவர் ஆவர்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது "கனவு காணும் பெண்கள் தாக்கப்படும் ஒரு நாட்டில் நான் பிறந்தேன், அதற்கு எதிராக நான் போராடியதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி,அடுத்த தலைமுறையினர் இங்கு வந்து, எவ்வித அச்சமுமின்றித் தங்கள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்."என்று அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்:
மிஸ் பண்ணிடாதீங்க..! சன் டிவியில் ரஜினியின் பிரத்யேக பேட்டி.! அக்டோபர் 11-ல் ஒளிபரப்பாகிறது..!
ஆசிய விளையாட்டு
logo
Kalki Online
kalkionline.com