
இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணி, அங்கு 5 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபியில் விளையாடி வந்தது.
இந்த தொடரின் இறுதிப் போட்டி ஜூலை 31 ஆம் தேதி தொடங்கியது. தொடரில் இதற்கு முன்னர் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் இருந்தது. இறுதிப் போட்டி புகழ்பெற்ற ஓவல்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக விலகியதால், ஆலி போப் கேப்டனாக பொறுப்பேற்றார்.
இந்த தொடர் முழுக்க டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன், இம்முறை பந்து வீச்சை தேர்வு செய்தார். போட்டியில் யார் வேணாலும் ஜெயிக்கலாம், ஆனால் டாஸ் வெல்வதில் நாங்க தான் கில்லி என்று இங்கிலாந்து அணி மார்தட்டிக் கொள்ளலாம். இங்கிலாந்து மகளிர் அணி கூட டாசை தொடர்ச்சியாக வென்று, கோப்பையை விட்டது குறிப்பிடத்தக்கது.
முதல் இன்னிங்சை இந்திய அணியின் ஜெய்ஸ்வாலும் கே.எல்.ராகுலும் துவக்கினர், வந்த வேகத்திலேயே ஜெய்ஸ்வால் 2 ரன்களில் திரும்பினார். அதன் பிறகு வந்த இந்திய பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் வெளியேற, முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கட் இழப்பிற்கு 204 ரன்கள் மட்டும் எடுத்திருந்தது. களத்தில் அருண் நாயரும் (52) வாஷிங்கடன் சுந்தரும் (19) இருந்தனர்.
இரண்டாவது நாள் துவங்கிய சிறிது நேரத்திலேயே அனைத்து விக்கட்டுக்களையும் இழந்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 224 ரன்கள் மட்டுமே எடுத்தது. கருண் நாயர் 57 ரன்கள் எடுத்திருந்தார், சுதர்சனும் எக்ஸ்ட்ராஸ்ஸும் தலா 38 ரன்கள் எடுத்து இரண்டாம் இடத்தில் இருந்தனர். எக்ஸ்டிராஸ் என்றதும் இந்திய அணியின் புதிய பேட்ஸ்மேன் என்று நினைக்க வேண்டாம்.
இரண்டாவது நாளில் தனது முதல் இன்னிங்சை இங்கிலாந்தின் ஜாக் கிரெலியும் (64) பென் டக்கட்டும் (43) சிறப்புடன் துவக்கினர். ஹாரி புரூக் 53 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். முதல் இன்னிங்ஸ் முடிவில் இங்கிலாந்து அணி 247 ரன்கள் எடுத்து இந்திய அணியை விட 23 ரன்கள் முன்னிலைப் பெற்றது. சிராஜ்ஜும் பிரசித்தும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
இந்தியா தனது இரண்டாவது இன்னிங்சை இரண்டாவது நாளிலே தொடங்கியது. ஜெய்ஸ்வால் இம்முறையும் சிறப்பாக விளையாடினார். ஜெய்ஸ்வால் அரை சதமடித்து, ஆகாஷ் தீப்புடன் (4) களத்தில் இருந்தார். இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 75/2 ரன்கள் எடுத்திருந்தது.
மூன்றாவது நாளில் ஜெய்ஸ்வால் (118) சிறப்பாக விளையாடி சதமடித்தார். ஆகாஷ் (66), ஜடேஜா (53) , வாஷிங்டன் சுந்தர் (53) ஆகியோர் அரை சதமடிக்க இந்திய அணி இரண்டாவது இன்னிங்க்ஸ் முடிவில் 396 ரன்களை குவித்து, 374 ரன்களை இங்கிலாந்து அணிக்கு வெற்றிக்கு இலக்காக நிர்ணயித்தது. இங்கிலாந்து அணியின் ஜோஷ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
மூன்றாவது நாளில் இங்கிலாந்து தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. ஜாக் கிரெலி விரைவில் அவுட்டாகி வெளியேற, பென் டக்கட்டும் ஆலி போப்பும் களத்தில் இருந்தனர். மூன்றாவது நாள் முடிவில் 50 ரன்களை இங்கிலாந்து அணியினர் எட்டியிருந்தனர்.
நான்காவது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி விஸ்வரூபம் எடுத்தது. ஜோ ரூட்டும் (105) ஹாரி புருக்கும் அதிரடியாக விளையாடி சதமடித்தனர். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக 16 வது சதமடித்த வீரர் என்ற பெருமையை ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித்துடன் பகிர்ந்து கொள்கிறார். ஹாரி புரூக் ஒரு நாள் ஆட்டத்தை போல விளையாடி 98 பந்துகளில் 111 ரன்களை கடந்தார். 4வது நாள் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கட் இழப்பிற்கு 335 ரன்கள் எடுத்திருந்தது.
இன்னும் 35 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் 5 நாள் ஆட்டத்தை இங்கிலாந்து தொடர்ந்தது. தொடங்கிய சில நிமிடங்களில் ஜேமி ஸ்மித், ஜேமி ஓவர்டான், கஸ் அட்கின்சன் ஆகியோரை இந்திய அணியின் சிராஜ் அவுட்டாக்க இந்திய அணி இறுதிப் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இரண்டாவது இன்னிங்சில் சிராஜ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு காரணமாக இருந்தார். ஆட்ட நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
5 போட்டிகளைக் கொண்ட ஆண்டர்சன்-டெண்டுல்கர் டெஸ்ட் டிராபி 2-2 என்ற கணக்கில் சமன் செய்யப்பட்டது. இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லும், இங்கிலாந்து அணியின் ஹாரி புரூக்கும் தொடர் நாயகன் விருதினை பெற்றனர்.