
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட்கோலி அறிவித்தார். இதனால் அவரது 14 ஆண்டு கால டெஸ்ட் பயணம் முடிவுக்கு வந்தது. தனது ஓய்வு விருப்பத்தை விராட் கோலி இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்தார். விராட் கோலி இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடினால் நன்றாக இருக்கும் என்பதால் அவரது ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
ஆனால் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாத 36 வயதான விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்ஸ்டாகிராம் மூலம் தெரிவித்தார். ஏற்கனவே கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த 20 ஓவர் உலகக் கோப்பையை இந்தியா வென்றதும், ரோகித் சர்மாவுடன் இணைந்து விராட் கோலியும் சர்வதேச 20 ஓவர் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். எனவே அவர் இனிமேல் சர்வதேச ஒருநாள் போட்டியில் மட்டுமே இந்திய அணிக்காக விளையாடுவார்.
ஆக்ரோஷமான அணுகுமுறைக்கு பெயர் போன கோலி இதுவரை 123 டெஸ்டில் விளையாடி 30 சதம், 31 அரைசதம் உள்பட 9,230 ரன்கள் குவித்துள்ளார். டெஸ்டில் அதிக ரன் மற்றும் அதிக சதம் அடித்த 4-வது இந்திய வீரர் என்ற சிறப்புக்குரிய விராட்கோலி அதிக முறை (7 தடவை) இரட்டை சதம் விளாசிய இந்தியர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆவார். கேப்டனாக டெஸ்டில் அதிக ரன் குவித்த (68 டெஸ்டில் 5,864 ரன்கள்) இந்தியரும் அவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. ‘ரன் குவிக்கும் எந்திரம்’ என்று வர்ணிக்கப்பட்ட விராட் கோலி 2014-2019 வரையிலான காலத்தில் டெஸ்டில் முத்திரை பதித்தார். அந்த சமயத்தில் 55 டெஸ்டில் 21 சதங்களுடன் 5,347 ரன்கள் சேர்த்து வியக்க வைத்தார்.
இவரது ஓய்வு அறிவிப்பு சமூக வலைதளத்தில் வைரலானதை தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள், இனி டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலியின் அதிரடியை பார்க்கமுடியாததை நினைத்து வருத்தம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் விராட் கோலியின் ஓய்வையொட்டி அவரது மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மா சமூக வலை தளத்தில் மிக அழகான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்:-
"கிரிக்கெட்டில் நீங்கள் செய்துள்ள சாதனைகள், மைல்கல் குறித்து தான் இப்போது எல்லோரும் பேசுவார்கள். ஆனால் நீங்கள் வெளியே காட்டிக்கொள்ளாத கண்ணீர், யாரும் பார்க்காத போராட்டங்கள், டெஸ்ட் கிரிக்கெட் மீது நீங்கள் கொண்டிருந்த அளப்பரிய காதல் அவற்றை நான் அறிவேன். அது எப்போதும் எனது மனதில் பசுமையாக நிலைத்து நிற்கும். ஒவ்வொரு டெஸ்ட் தொடருக்கு பிறகும் நீங்கள் கொஞ்சம் பக்குவமடைந்தீர்கள். தடைகளை கடந்து உங்களது முன்னேற்றத்தை பார்த்தது எனது பாக்கியம். நீங்கள் எப்போதும் உங்களது மனது சொல்வதை செய்வீர்கள். என் அன்பே, இந்த பிரியாவிடையின் ஒவ்வொரு துளி மதிப்பையும் நீங்கள் சம்பாதித்து விட்டீர்கள் என்று சொல்ல விரும்புகிறேன்."
இவ்வாறு அனுஷ்கா கூறியுள்ளார்.