இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக வலம் வந்த ஆர்.அஸ்வின் ஓய்வை அறிவித்தது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது ஓய்வு கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
தனக்கு ஏற்பட்ட தொடர்ச்சியான காயம் மற்றும் இந்திய டெஸ்ட் அணியில் அவரது எதிர்காலம் ஆகிய இரண்டு காரணிகளுடன் அஸ்வினின் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் அவரது 14 ஆண்டு கால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. அஸ்வினின் தொடர்ச்சியான முழங்கால் பிரச்சனையால், பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கு முன்னதாக ஓய்வை யோசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
38 வயதான அவர் 106 ஆட்டங்களில் 537 ஸ்கால்ப்களுடன் டெஸ்டில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரராக உள்ளார். ஒட்டுமொத்த புள்ளிவிவரத்தில் சிறந்த அனில் கும்ப்ளே (619 விக்கெட்) அடுத்த இடத்தில் உள்ளார்.
தற்போதைய இந்திய அணியின் ஒவ்வொரு வீரருக்கும் அவரது ஓய்வு குறித்து அஸ்வின் தனித்தனியாகத் தெரிவித்ததாகவும், அவரது சக வீரர்களின் பொதுவான பதில் அதிர்ச்சியாக இருந்தது என்றும் கூறப்படுகிறது.
அவருக்கு இன்னாள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் சமூக வலைதளம் மூலம் புகழாரம் சூட்டியுள்ளனர். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கவாஸ்கர்: தோனி போல அஸ்வின் விடை பெற்றுள்ளதாகவும், இது இந்திய வீரர்களிடம் உணர்வுபூர்வமாக தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், இந்திய அணியில் ஒரு வீரர் குறைந்துள்ளதாகவும் கவாஸ்கர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
சச்சின் தெண்டுல்கர்: அஸ்வின், கிரிக்கெட் விளையாட்டில் உங்களது அணுகுமுறையை பார்த்து நான் எப்போதும் பிரமித்து இருக்கிறேன். திறமையான இளம் பந்து வீச்சாளர் என்ற நிலையில் இருந்து இந்திய அணியின் மேட்ச் வின்னர் வரை கிரிக்கெட் களத்தில் உங்கள் வளர்ச்சியை பார்த்தது அற்புதமானது. உங்களது கிரிக்கெட் பயணம் ஒவ்வொருவருக்கும் உத்வேகம் அளிக்கும். உங்களுடைய 2-வது இன்னிங்ஸ் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.
ஆஸ்திரேலியா நாதன் லயன்: ஆஸ்திரேலியாவின் முதன்மையான ஆஃப் ஸ்பின்னர் நாதன் லயன் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு இதயப்பூர்வமான வாழ்த்து தெரிவித்துள்ளார். அஸ்வின் மீது தனக்கு 'மரியாதையைத் தவிர வேறு எதுவும் இல்லை' என்றும் அவரது திறமை 'நம்பமுடியாத அளவுக்கு உயர்ந்தது' என்றும் விவரித்தார்.
விராட் கோலி: நான் உங்களுடன் 14 ஆண்டுகள் இணைந்து விளையாடி இருக்கிறேன். ஓய்வு பெறப்போவதாக நீங்கள் என்னிடம் கூறியது என்னை உணர்ச்சிவசப்பட வைத்தது. உங்களுடனான இந்த பயணத்தின் ஒவ்வொரு பகுதியையும் நான் ரசித்தேன். நீங்கள் எப்போதும் இந்திய கிரிக்கெட்டில் ஒரு ஜாம்பவனாக நினைவில் இருப்பீர்கள்.
கவுதம் கம்பீர்: இளம் பந்து வீச்சாளராக இருந்து நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவனாக உருவெடுத்தது வரை உங்களது வளர்ச்சியை பார்த்தது எனக்கு பெருமை. அடுத்த தலைமுறை வீரர்கள் பலரும் அஸ்வினை பார்த்து பந்து வீச்சாளராக ஆனதாக சொல்வார்கள்.
ஹர்பஜன் சிங்: இது சற்று ஆச்சரியமாக இருந்தது. டெஸ்ட் கிரிக்கெட் வீரராக உங்கள் லட்சியம் பாராட்டத்தக்கது. பத்தாண்டுகளுக்கும் மேலாக இந்திய சுழற்பந்து வீச்சில் கொடிகட்டிப் பறந்ததற்கு வாழ்த்துக்கள். உங்கள் சாதனைகளைப் பற்றி பெருமிதம் கொள்ளுங்கள்.
அனில் கும்பிளே: அஸ்வின், உங்களது கிரிக்கெட் பயணம் அசாதாரணமானது. 700-க்கும் மேற்பட்ட சர்வதேச விக்கெட்டுகளை கைப்பற்றியதோடு மட்டுமின்றி, களத்தில் நீங்கள் சிறந்த வீரர்களில் ஒருவர் என்பதை காட்டியது. எதிர்காலம் இன்னும் பிரகாசமாக அமைய வாழ்த்துகள்.
ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ்: அஸ்வினின் ஓய்வு எனக்கு சற்று ஆச்சரியமாக இருந்தது. சுழற்பந்து வீசும் வீரர்கள் இவ்வளவு நீண்ட காலம் சிறப்பாக விளையாடியதில்லை. எப்போதும் எங்களுக்கு சவாலான பந்து வீச்சாளராக இருந்துள்ளார். அவர் மீது நாங்கள் மிகுந்த மரியாதை வைத்துள்ளோம்.