இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திர அஸ்வின் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்திருக்கிறார். யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் இந்த அறிவிப்பு வெளியானதால் ரசிகர்கள் பெரிய ஷாக்கில் உள்ளனர்.
2011ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணியில் அறிமுகமான அஸ்வின் இன்று வரை அவரின் திறமையால் மட்டுமே இந்திய அணியில் நிலைத்து நின்றார். இந்திய அணியின் ஆல்ரவுண்டராகச் செயல்பட்டு வரும் அஸ்வின் இதுவரை 537 விக்கெட்டுகளையும் 3,503 ரன்களையும் எடுத்துள்ளார்.
அந்தவகையில் பிரிஸ்பானில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் ஐந்தாவது நாள் மழையால் பாதிக்கப்பட்டது. அப்போது ஆஸ்திரேலிய ஊடகவியலாளர்கள் சிலர் தங்களின் சமூக வலைதள பக்கத்தில் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று வெளியாக உள்ளது என பதிவிட்டு இருந்தனர்.
இதனைத்தொடர்ந்து ஓய்வறையில் விராட் கோலி அஸ்வினை கட்டியணைத்துக்கொண்டு நிறைய நேரம் பேசிக்கொண்டிருந்தனர். அதன்பின்னர் தோள்களில் கைப் போட்டு அமர்ந்திருந்தனர். அடுத்து அஸ்வின், ஜடேஜாவை சந்தித்து தனது ஓய்வு முடிவை கூறினார். ஜடேஜா மற்றும் அஸ்வின் இணைப் பிரியாமல் பல போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு இருந்த நிலையில் அவரும் இந்த செய்தியால் சோகமானார்.
ஜடேஜாவிடம் கூறிவிட்டு ஆஸ்திரேலியா சுழற்பந்து வீச்சாளர் ஜாம்பவான் நாதன் லியோனை சந்தித்து தனது ஓய்வை முடிவை தெரிவித்தார்.
இவர்கள் இருவருக்குள் யார் அதிக விக்கெட்டுகள் எடுக்கிறார்கள் என்ற போட்டியெல்லாம் நடந்தது.
இந்த சந்திப்புகளையெல்லாம் முடித்துவிட்டு, பத்திரிக்கையாளர் சந்திப்பில் ரோஹித் ஷர்மாவுடன் அஸ்வின் அமர்ந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் தனது ஓய்வு குறித்தான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். பின்னர் ரோஹித் சர்மாவை கட்டி அணைத்து விடைப் பெற்றார்.
அஸ்வினின் இடத்தை நிரப்புவது மிகவும் கடினம். ஆனால், அவருக்கு பதில் இந்திய அணியில் வீரர்களை இறக்குவது அவசியமே. அஸ்வின் இடத்தை நிரப்பும் முதல் இடத்தில் வாஷிங்டன் சுந்தர் உள்ளார். சமீப காலமாகவே டெஸ்டில், தொடர்ந்து விக்கெட் வேட்டையில் ஈடுபடுவது, கடைசி நேரத்தில் களமிறங்கி, ரன்களை அடிப்பது போன்ற விஷயங்களில் வாஷிங்டன் சுந்தர் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்த ஆஸ்திரேலியா இந்தியா இடையேயான தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் அஸ்வினுக்கு பதில் சுந்தர் விளையாடவுள்ளார்.
மேலும் இந்திய அணியில் அஸ்வின் இடத்தை நிரப்ப சௌரப் குமார் மற்றும் மனோவ் சுதர் ஆகியோருக்கும் வாய்ப்புகள் இருக்கும் என்று நம்பப்படுகிறது.