அஸ்வின் தந்தை தனது மகனின் இந்த திடீர் ஓய்வுக்கு காரணம் இதுதான் என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார். அதற்கு விளக்கமளிக்கும் விதமாக அஸ்வின் பதிவிட்டிருக்கிறார்.
2011ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணியில் அறிமுகமான அஸ்வின் தனது திறமையால் மட்டுமே இந்திய அணியில் நிலைத்து நின்றார். இந்திய அணியின் ஆல்ரவுண்டராகச் செயல்பட்டு வந்த அஸ்வின் இதுவரை 537 விக்கெட்டுகளையும் 3,503 ரன்களையும் எடுத்துள்ளார்.
அந்தவகையில் இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் சமயத்தில், இதன் மூன்றாவது போட்டி முடிந்தவுடன் அஸ்வின் தனது ஓய்வை அறிவித்தார். இது இந்திய அணி வீரர்கள் உட்பட ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இதன்தொடர்ச்சியாக அஸ்வின் அவரது சொந்த ஊரான தமிழகத்திற்கு வந்தார். அவரை குடும்பத்தினர் கோலாகலமாக வரவேற்றனர்.
இப்படியான நிலையில், அஸ்வினின் தந்தை ரவிச்சந்திரன் இதுகுறித்து பேசினார், “அஸ்வின் இந்த துறையில் 14 முதல் 15 ஆண்டுகள் உள்ளார். திடீரென இந்த ஓய்வு அதிர்ச்சி அளிக்கிறது, அதேநேரம் இது எதிர்பார்த்ததுதான். காரணம் என்னவென்றால் அவர் அவமானப்படுத்தப்பட்டார். எவ்வளவு நாள்தான் இதை தாங்கிக்கொள்வார்?” என்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், இதே குற்றச்சாட்டைதான் ரசிகர்களும் முன்வைத்தனர். ஆனால், அவர்கள் ஒரு கணிப்பின்மூலமே இதைப் பகிர்ந்து வந்தனர். இந்த சமயத்தில் அஸ்வினின் தந்தையே இப்படி கூறியது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனது தந்தையின் இந்த செயலுக்கு அஸ்வின் விளக்கமளித்திருக்கிறார். “என் அப்பா மீடியாவில் பேசுவதற்கு பயிற்சி பெற்றவர் அல்ல. டேய் அப்பா என்னடா இதெல்லாம்?? அப்பா அறிக்கையை நீங்களும் பின்பற்றுவீர்கள் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை. அவரை மன்னித்து தனியே விடுங்கள் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.” என்று பதிவிட்டிருக்கிறார்.
அஸ்வினின் நெருங்கிய நண்பரும், கிரிக்கெட் விமர்சகருமான பிடாக்கும் இதே குற்றச்சாட்டைதான் முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல்தான் யுவராஜ் சிங் தந்தை போக்ராஜ் சிங், தனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கை அழிந்துபோனதற்கு தோனிதான் காரணம் என்று கூறியதும், இதற்கு பலமுறை யுவராஜ் சிங் தனிப்பட்ட முறையில் தனது தந்தையை கண்டித்ததும் குறிப்பிட வேண்டிய ஒன்று.