
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும்.
இந்த நிலையில் துபாயில் நேற்றிரவு நடந்த 6-வது லீக் ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின. பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் கொடூர தாக்குதல், அதற்கு இந்தியாவின் பதிலடியால் உருவான போர் பதற்றம் தணிந்த பிறகு இவ்விரு அணிகளும் சந்தித்த முதல் போட்டி என்பதால் கிரிக்கெட் உலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்து இருந்தது.
‘டாஸ்’ ஜெயித்த பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தொடங்கிய முதல் பந்திலேயே இந்தியா ‘செக்’ வைத்தது. ஹர்திக் பாண்ட்யா வீசிய ஷாட்பிட்ச் பந்தில் சைம் அயூப் (0) சிக்கினார். அதனை தொடர்ந்து 2-வது விக்கெட்டுக்கு இறங்கிய விக்கெட் கீப்பர் முகமது ஹாரிசை (3 ரன்) பும்ரா காலி செய்ய, இதைத் தொடர்ந்து இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் வருண், குல்தீப், அக்ஷர் இடைவிடாது கொடுத்த நெருக்கடியில் பாகிஸ்தான் சீர்குலைந்து போனது.
இந்திய வீரர்களின் அதிரடி பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறிய பாகிஸ்தான் அணியில் பஹர் ஜமான் 17 ரன்னிலும், கேப்டன் சல்மான் ஆஹா 3 ரன்னிலும், ஹசன் நவாஸ் 5 ரன்னிலும், முகமது நவாஸ் ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து வெளியேற்றப்பட்டனர். இதற்கு மத்தியில் போராடிய மற்றொரு தொடக்க வீரர் சகிப்சதா பர்ஹான் 40 ரன்களில் (44 பந்து, ஒரு பவுண்டரி,3 சிக்சர்) கேட்ச் ஆனார்.
இறுதியில் 20 ஓவர் முடிவில் பாகிஸ்தான் 9 விக்கெட்டுக்கு 127 ரன்னில் கட்டுப்படுத்தப்பட்டது.
இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், ஜஸ்பிரித் பும்ரா, அக்ஷர் பட்டேல் தலா 2 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா, வருண் சக்ரவர்த்தி தலா ஒரு விக்கெட்டும் சாய்த்தனர்.
பின்னர் 128 ரன் இலக்கை நோக்கி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் ஷர்மாவும், சுப்மன் கில்லும் களம் புகுந்தனர். ஷகீன் ஷா அப்ரிடி வீசிய முதல் பந்தில் பவுண்டரியும், அடுத்த பந்தில் சிக்சரும் விளாசி அபிஷேக் ஷர்மா அட்டகாசமாக தொடங்கி வைத்தார். 2-வது ஓவரில் சுப்மன் கில் 10 ரன்னில் கேட்ச் ஆகி வெளியேற அதனை தொடர்ந்து துரித ரன் வேட்டையில் கவனம் செலுத்திய அபிஷேக் ஷர்மா 31 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த திலக் வர்மா 31 ரன்கள் எடுக்க, இறுதியில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் சிக்சரோடு தித்திப்பாக ஆட்டத்தை முடித்து வைத்தார். இந்திய அணி 15.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.
இந்தியாவுக்கு இது 2-வது வெற்றியாகும். ஏற்கனவே அமீரகத்தை தோற்கடித்து இருந்த இந்திய அணி, சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறியது. 2-வது லீக்கில் ஆடிய பாகிஸ்தானுக்கு முதலாவது தோல்வியாகும்.
போட்டி முடிந்ததும் இரு அணி வீரர்களும் கைகுலுக்குவது வழக்கம். ஆனால் நேற்றைய ஆட்டம் முடிந்ததும், இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்குவதை தவிர்த்துவிட்டனர்.