
2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்), உலகின் முதன்மையான டி20 கிரிக்கெட் போட்டியாகும். 10 அணிகள் இடையிலான உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல். 18-வது சீசன் மார்ச் 22-ம் தேதி தொடங்கியது. இதில் ஒவ்வொரு அணியும் 14 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும். மெகா நிகழ்வான இறுதிப்போட்டி வருகிற 25-ந் தேதி கொல்கத்தாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஐபிஎல் 18-வது சீசனில் மொத்தம் 65 நாட்கள் 13 நகரங்களில் நடக்கிறது.
இதில் இமாசலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் 8-ம்தேதி இரவு அரங்கேறிய 58-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை சந்தித்தது. போட்டி தொடங்கிய சிறிது நேரத்தில் நிறுத்தப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் இரவில் பாகிஸ்தான், இந்திய எல்லையை குறி வைத்து விமானம் மற்றும் டிரோன்கள் மூலம் எல்லைப்பகுதியில் இடைவிடாமல் தாக்குதல் நடத்துவதும், அதற்கு இந்தியா பதிலடி கொடுத்து வருவதுமாக இருப்பதால், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போட்டி கைவிடப்படுவதாக ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்தது. போட்டி ரத்து செய்யப்பட்டாலும் இரு அணிகளுக்கும் புள்ளிகள் பகிர்ந்து அளிப்பது குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை.
தொடர்ந்து வீரர்கள் மற்றும் ரசிகர்கள், நடுவர்கள், ஒளிபரப்பு குழுவினர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். கிரிக்கெட் வீரர்கள், நடுவர்களை சிறப்பு ரெயில் மூலம் டெல்லிக்கு அழைத்து செல்ல கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்தது. நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இதுவரை 58 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் இன்னும் 12 லீக், 4 நாக்-அவுட் உள்பட 16 ஆட்டங்கள் இன்னும் எஞ்சியிருந்தாலும் இதுவரை எந்த அணியும் அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பை உறுதி செய்யவில்லை.
இதனிடையே இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழ்நிலையில் ஐ.பி.எல். போட்டியை தொடர்ந்து நடத்தலாமா? அல்லது தள்ளிவைக்கலாமா? என்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்ய இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அவசர கூட்டம் நேற்று நடந்தது. 10 அணிகளின் நிர்வாகிகள், போட்டி ஒளிபரப்பு நிறுவனம் உள்பட அனைத்து தரப்பினரிடமும் கருத்து கேட்கப்பட்டது.
போர் பதற்றம் காரணமாக பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவும் இந்த சமயத்தில் போட்டியை தொடர்ந்து நடத்துவது நல்லது கிடையாது. அத்துடன் வீரர்கள் மத்தியில் அச்சமும், தயக்கமும் இருப்பதால் போட்டியை தள்ளிவைப்பது தான் சரியாக இருக்கும் என்று கூறப்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் ஒருவாரம் நிறுத்தி வைக்கப்படுவதாக அதிகாரபூர்வமாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும், புதிய அட்டவணை குறித்த விவரங்கள் சூழ்நிலையை கவனமாக ஆராய்ந்த பிறகு வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் ஒரு தேசிய ஆர்வமாக இருந்தாலும், நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பை விட பெரியது எதுவுமில்லை என்றும் இந்தியாவை பாதுகாக்கும் எல்லா முயற்சிக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதுணையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். போட்டி தொடர் பாதிப்பை சந்திப்பது இது முதல்முறையல்ல. 2009, 2014-ல் நாடாளுமன்ற தேர்தல் காரணமாகவும், 2020, 2021-ல் கொரோனா பாதிப்பு காரணமாகவும் போட்டியில் வேறு நாட்டிற்கு மாற்றப்பட்டது குறிப்பிடதக்கது.