
இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டியில் விளையாட ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான ஒருநாள் தொடரில் முதலாவது ஆட்டம் பெர்த்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்தது.
கடந்த மார்ச் மாதம் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் அரைஇறுதியில் ஆஸ்திரேலியாவையும், இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்தையும் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதன் பிறகு இந்திய அணி விளையாடும் முதல் சர்வதேச ஒருநாள் போட்டி இதுவாகும். டெஸ்ட் மற்றும் 20 ஓவர் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்ட நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் 7 மாத இடைவெளிக்கு பிறகு சர்வதேச போட்டிக்கு களம் திரும்புகின்றனர். ரோகித் சர்மாவிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டு ஒருநாள் போட்டி அணியின் கேப்டனாக சுப்மன் கில் சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.
அவரது தலைமையில் ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதல்முறையாக களம் காணுவதால் அந்த போட்டிக்கு ரசிகர்கள் இடையே அதிக எதிர்பார்ப்பு நிலவியது.
இவ்விரு அணிகளும் இதுவரை ஒருநாள் போட்டியில் 152 முறை மோதி இருக்கின்றன. இதில் ஆஸ்திரேலியா 84 ஆட்டங்களிலும், இந்தியா 58 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 10 ஆட்டங்கள் முடிவு இல்லாமல் போனது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததால் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், புதிய கேப்டன் சுப்மன் கில்லும் நுழைந்தனர்.
ரோகித் சர்மா 8 ரன்னில் வெளியேற 2-வது விக்கெட்டுக்கு இறங்கிய விராட் கோலி 8 பந்துகளை எதிர்கொண்டு ரன் ஏதுமின்றி வெளியேற சிறிது நேரத்தில் கேப்டன் சுப்மன் கில் 10 ரன்னிலும், ஸ்ரேயாஸ் அய்யர் 11 ரன்னிலும் நடையை கட்டினர்.
இதற்கிடைய மழையால் ஆட்டம் 49 ஓவராக குறைக்கப்பட்ட நிலையில் மீண்டும் மீண்டும் மழை குறுக்கிட்டதால் 35 ஓவர், 32 ஓவர் என குறைந்து கடைசியில் 26 ஓவர்களாக ஆட்டம் நடத்தப்பட்டது. ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க் ஆகியோரது மிரட்டல் பந்து வீச்சும், அவ்வப்போது மழையால் ஆட்டம் தடைபட்டதும் இந்தியாவின் உத்வேகத்தை முற்றிலும் சீர்குலைத்தது.
45 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து இந்திய அணி தத்தளித்த நிலையில், அக்ஷர் பட்டேலும், விக்கெட் கீப்பர் லோகேஷ் ராகுலும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து ஓரளவு மீட்டனர்.
அக்ஷர் பட்டேல் 31 ரன்னிலும், லோகேஷ் ராகுல் 38 ரன்களிலும் ஆட்டமிழக்க கடைசி கட்டத்தில் நிதிஷ்குமார் ரெட்டி இரண்டு சிக்சர் விளாசி ஆறுதல் அளித்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 26 ஓவர்களில் இந்திய அணி 9 விக்கெட்டுக்கு 136 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. நிதிஷ்குமார் ரெட்டி 19 ரன்னுடன் களத்தில் இருந்தார். ஆஸ்திரேலிய தரப்பில் ஹேசில்வுட், மிட்செல் ஓவன், மேத்யூ குனேமேன் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
பின்னர் டக்வொர்த்-லீவிஸ் விதிப்படி ஆஸ்திரேலியாவுக்கு 26 ஓவர்களில் 131 ரன் எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் அதை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் 8 ரன்னிலும், மேத்யூ ஷார்ட் 8 ரன்னிலும் துரிதமாக வெளியேறினாலும் கேப்டன் மிட்செல் மார்சும், விக்கெட் கீப்பர் ஜோஷ் பிலிப்பும் அணியின் வெற்றிப்பாதையை எளிதாக்கி நிலையில் ஜோஷ் பிலிப் 37 ரன்னில் வெளியேறினர்.
அதனை தொடர்ந்து களம் இறங்கிய ரென்ஷா ஆட்டத்தை வெற்றியுடன் முடித்து வைத்தார்.
ஆஸ்திரேலிய அணி 21.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மார்ஷ் 46 ரன்களுடனும், ரென்ஷா 21 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
2-வது ஒரு நாள் போட்டி வருகிற 23-ந்தேதி அடிலெய்டில் நடக்கிறது.