என்னைப் பொறுத்தவரை பும்ராவுக்கு தான் எப்போதும் முதலிடத்தைக் கொடுப்பேன் - சச்சின்..!

Sachin Praise Bumrah
Sachin
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது சிறப்பாகவே உள்ளது. இதற்கு முக்கிய காரணமாகத் திகழ்பவர் ஜஸ்பிரீத் பும்ரா. இந்திய அணியில் திறமையான வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்துள்ள பும்ராவை மற்ற நாட்டு வீரர்களும் புகழ்கின்றனர். பும்ரா அணியில் இருக்கும் போது மற்ற பௌலர்கள் அவருக்கு சரியான ஒத்துழைப்பை அளிக்கத் தவறுகின்றனர். அதேசமயம் பும்ரா இல்லாத ஆட்டங்களில் மற்ற பௌலர்கள் சிறப்பாக செயல்படுவதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதில் இந்தியா வெற்றி பெற்ற 2 டெஸ்ட் போட்டிகளிலும் பும்ரா விளையாடவில்லை. இந்நிலையில் பும்ரா இல்லாத இந்திய அணி தான் வெற்றி பெற்றுள்ளது போன்ற கருத்துகள் சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகின்றன. பும்ராவுக்கு எதிரான கருத்துகளுக்கு, கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கர் பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து சச்சின் கூறுகையில், “ஜஸ்பிரீத் பும்ரா ஒரு தரமான பந்துவீச்சாளர். 3 வடிவ கிரிக்கெட்டிலும் அவரது செயல்பாடு சிறப்பாகவே உள்ளது. உலகின் அபாயகரமான பந்து வீச்சாளரான பும்ரா, அந்நிய மண்ணில் பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருந்துள்ளார். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா தான் டாப் பௌலராக இருந்துள்ளார். இம்முறை பும்ரா விளையாடாத 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வென்றது தற்செயலான நிகழ்வு. இதற்காக பும்ராவை நாம் மறந்து விடக் கூடாது.

அவர் விளையாடிய 3 டெஸ்ட் போட்டிகளில் 2 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பும்ராவின் பந்துவீச்சு திறமையை நிரூபிக்க இதுவொன்றே போதும். என்னைப் பொறுத்தவரை ஜஸ்பிரீத் பும்ராவுக்கு தான் எப்போதும் முதலிடத்தைக் கொடுப்பேன். பும்ராவின் திறமை என்னவென்று எனக்கு நன்றாகவே தெரியும். யாரும் அவரை குறைத்து மதிப்பிடக் கூடாது. துல்லியமான யார்க்கர்கள் மூலம் இந்திய அணிக்கு பல வெற்றிகளை அவர் பெற்றுக் கொடுத்திருக்கிறார். அதனை யாரும் மறந்து விடக் கூடாது” என சச்சின் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்:
கபில்தேவின் வாழ்நாள் சாதனையை சமன் செய்த ஜஸ்பிரீத் பும்ரா! என்ன சாதனை?
Sachin Praise Bumrah

தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் குறித்து சச்சின் டெண்டுல்கர் கூறுகையில், “அணிக்குத் தேவையானதை வாஷிங்டன் சுந்தர் தொடர்ந்து செய்து வருகிறார். பேட்டிங் மற்றும் பௌலிங்கில் சிறப்பாக பங்காற்றி வரும் சுந்தர், 4வது டெஸ்ட் போட்டியை ரவீந்திர ஜடேஜாவுடன் டிரா செய்த விதம் அருமையாக இருந்தது. அதோ போல் 5வது டெஸ்டில் இக்கட்டான சூழலில் அரைசதம் அடித்து இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இந்தியா 5வது டெஸ்ட் போட்டியை வென்றதில் வாஷிங்டன் சுந்தரின் இந்த அரைசதத்திற்கும் முக்கிய பங்குண்டு” என்றார்.

கிரிக்கெட்டை கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த சச்சின் டெண்டுல்கர், பும்ரா மற்றும் வாஷிங்டன் சுந்தரைப் புகழ்வது உண்மையில் நல்லதாகவே பார்க்கப்படுகிறது. பும்ரா காயமடைந்து விடக்கூடாது என்பதற்காகவே 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடினார். ஜஸ்பிரீத் பும்ரா இந்திய கிரிக்கெட் அணிக்கு கிடைத்த பொக்கிஷம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

இதையும் படியுங்கள்:
இந்திய வேகப் புயல் பும்ரா கொண்டாடப்படுவது ஏன்? பும்ரா அப்படி என்ன செய்தார்?
Sachin Praise Bumrah

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com