
கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டிகளுக்கு என்று தனி அடையாளமே இருக்கிறது. ஆசிய நாடுகளில் நிலவும் காலநிலை மற்றும் மைதானத்தின் தன்மை சழற்பந்துவீச்சுக்கு ஏற்றதாக இருக்கும். ஆனால் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் தரமான வேகப்பந்து வீச்சு தான் வெற்றியைப் பெற்றுத் தரும். வேகம் இருந்தால் மட்டும் போதும் என்றால், இந்தியா என்றைக்கோ வெளிநாடுகளில் டெஸ்ட் போட்டிகளை வென்றிருக்கும். ஆனால் வேகத்தோடு துல்லியமான பந்துவீச்சும், பேட்ஸ்மேன்களை கலங்கடிக்கச் செய்யும் திறமையும் வேண்டும். அவ்வகையில் கபில்தேவ் காலத்தில் அவர் சிறந்து விளங்கினாலும், மற்ற பௌலர்களின் ஒத்துழைப்பு குறைவாக இருந்ததால், வெற்றியைப் பெற முடியாமல் போனது.
ஆனால் இந்திய அணியின் இன்றைய நிலைமை அப்படி இல்லை. இன்றைய கிரிக்கெட் உலகில் பேட்ஸ்மேன்கள் ஜஸ்பிரீத் பும்ரா என்ற பெயரைக் கேட்டாலே பயப்படுகிறார்கள். அவரது வேகமும், துல்லியமான பந்துவீச்சும் எதிரணி பேட்ஸ்மேன்களை கலங்கடிக்கின்றன. இதனால் தான் தற்போது உலகின் நம்பர் 1 டெஸ்ட் பௌலராக இருக்கிறார் பும்ரா.
இந்திய அணி பல ஆண்டுகளாக வெளிநாடுகளில் டெஸ்ட் தொடரை வெல்ல முடியாமல் தவித்து வந்தது. விராட் கோலியின் தலைமையில், இந்திய அணி முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் தொடரை வென்றது. பேட்ஸ்மேன்கள் ரன்களைக் குவித்தாலும், வேகப்பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு தான் இதில் அபரிமிதமான ஒன்று.
விராட் கோலியின் கேப்டன்சியில் இருந்த போது அவர் எடுத்த மிகச்சிறந்த முடிவுகளில் ஒன்று தான் பும்ராவின் டெஸ்ட் அறிமுகம். டி20 போட்டிகளில் யார்க்கர்களை வீசி கவனம் பெற்ற பும்ராவை, ரெட் பால் கிரிக்கெட்டுக்கு கொண்டுவந்த பெருமை விராட் கோலிக்கே சொந்தம். கோலியின் நம்பிக்கையை உண்மையாக்கும் விதமாக பும்ராவின் செயல்பாடு அபரிமிதமாகவே உள்ளது. தற்போது டெஸ்ட் போட்டிகளில் புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார் பும்ரா.
ஒரு பௌலர் வெளிநாடுகளில் ஒருமுறை 5 விக்கெட்டுகளை எடுப்பதே சிறப்பானது தான். ஆனால் 66 போட்டிகளில் 12 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி கபில்தேவ் சாதனைப் படைத்திருந்தார். ஒரு சிறப்பான ஆல்ரவுண்டராகத் திகழ்ந்த கபில்தேவ் இந்த சாதனையை பல ஆண்டுகளாக தன்வசம் வைத்திருந்தார். தற்போது கபில்தேவின் வாழ்நாள் சாதனையை சமன் செய்திருக்கிறார் ஜஸ்பிரீத் பும்ரா. இந்தச் சாதனையை சமன் செய்ய பும்ராவுக்கு தேவைப்பட்டது வெறும் 34 போட்டிகள் தான்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இந்தச் சாதனையைப் படைத்திருக்கிறார். மேலும் இந்தத் தொடரிலேயே பும்ரா இந்தச் சாதனையைத் தகர்த்து முதலிடத்திற்கும் வந்து விடுவார் என்பது உறுதி.
வெளிநாடுகளில் அதிகமுறை 5 விக்கெட்டுகள் வீழ்த்திய டாப் 5 இந்திய பௌலர்களின் பட்டியல் இதோ:
1. ஜஸ்பிரீத் பும்ரா (34 போட்டிகள்) - 12 முறை
2. கபில்தேவ் (66 போட்டிகள்) - 12 முறை
3. இஷாந்த் சர்மா (63 போட்டிகள்) - 9 முறை
4. ஜாகீர் கான் (54 போட்டிகள்) - 8 முறை
5. இர்ஃபான் பதான் (15 போட்டிகள்) - 7 முறை.