மைசூர் அரசின் அரசர் திப்பு சுல்தானிடம் 'திப்புவின் புலி' (Tipu's Tiger) எனும் ஒரு தானியங்கி பொம்மை இருந்தது. இந்தப் பொம்மையானது, ஒரு புலி பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் படை வீரர் ஒருவரைக் கடித்துக் குதறுவது போன்று அமைக்கபட்டிருந்தது. 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இப்பொம்மை, தற்போது லண்டனில் உள்ள விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் உள்ளது.
மைசூரின் புலி என்றழைக்கபப்ட்ட திப்பு, தனது சின்னமாக புலியை அனைத்து இடங்களிலும் பயன்படுத்தினார். அவருடைய படை வீரர்களின் சீருடைகள், மாளிகை அலங்காரங்கள், ஆயுதங்கள் என்று அனைத்திலும் புலிகள் இடம் பெற்றிருந்தன. அவ்வேளையில், 1795 ஆம் ஆண்டில் திப்புவுக்காக ஒரு தானியங்கி புலி பொம்மை செய்யப்பட்டது. கையினால் திருப்பப்படும் ஒரு சுழற்றியால் இதனுள் இருக்கும் பல இயங்கு முறைகள் இயக்கப்படுகின்றன.
படை வீரனின் தொண்டையில் உள்ள ஒரு குழாயின் வழியாக இரு துருத்திகள் காற்றை வெளியேற்றுகின்றன. இதனால், படை வீரன் ஓலமிடுவது போன்ற சத்தம் உருவாகுகின்றது. அதே நேரம், இன்னொரு எந்திர இணைப்பு, வீரனின் இடது கை மேலும் கீழும் அசையும்படி செய்கிறது. வீரனின் கை அசைந்தால், அவன் ஓலத்தின் சுருதி மாறுகிறது. புலியின் தலையினுள் உள்ள இன்னொரு இயங்கு முறை இரு குழாய்களின் மூலம் காற்றினை வெளியேற்றுகிறது. இதனால் புலி உறுமும் ஓசை எழுகிறது. புலி உடலின் ஒரு பக்கத்தில் தந்தத்தால் ஆன ஒரு இசை விசைப்பலகை மறைத்து வைக்கப்பட்டுள்ளது. அதன் விசைகளை அழுத்தினால் ஆர்கன் குழாய்கள் வழியாக, காற்று வெளியேறி இசை உண்டாகிறது.
இந்த ஆர்கன் குழாய்களின் பித்தளை உள்ளடக்கத்தை ஆராய்ந்ததிலிருந்து, இந்தப் பொம்மை இந்தியாவில்தான் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டுமென்று தெரிகிறது. பிரெஞ்சுக் கைவினைக் கலைஞர்களும் படைத்துறைப் பொறியாளர்களும் திப்புவிடம் பணி புரிந்து வந்ததால், இந்தப் பொம்மையை உருவாக்குவதில் அவர்களது பங்கும் இருந்திருக்குமென பல வரலாற்றாளர்கள் கருதுகிறார்கள். பொம்மையின் மர ஓடு, இந்து சமய கைவினைக் கலை மரபுகளின் தாக்கத்தில் அமைந்திருக்கிறது.
ஆங்கில-மைசூர் போர்களில் திப்புவைத் தோற்கடித்த ஆங்கிலத் தளபதி சர்.ஹெக்டர் மன்ரோவின் மகன் ஹூக் மன்ரோவின் மரணம் இப்பொம்மையைச் செய்யத் தூண்டுகோலாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. 1792 ஆம் ஆண்டு, டிசம்பர் 22 அன்று சாகர் தீவில் ஹூக் மன்ரோ ஒரு புலியால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.
நான்காவது ஆங்கில-மைசூர்ப் போரின் முடிவில் 1799 ஆம் ஆண்டு, மே 7 அன்று திப்பு கொல்லப்பட்டு, அவரது தலைநகரான ஸ்ரீரங்கப்பட்டணம் கோட்டை, பிரித்தானியக் கிழக்கிந்தியக் நிறுவனப் படையினரால் கைப்பற்றப்பட்டது. அப்போது, இந்த பொம்மையும் அந்நிறுவனத்தின் வசமானது. அப்போதைய இந்தியத் தலைமை ஆளுனர் ரிச்சர் வெல்லஸ்லியின் துணை அதிகாரிகளுள் ஒருவர், இப்பொம்மை கம்பனி படைகளால் கைப்பற்றப்பட்டதைப் பற்றி, “இசைக் கருவிகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஒரு அறையில் ஒரு புதிரான பொருள் கண்டெடுக்கப்பட்டது. திப்பு சாகிப் ஆங்கிலேயரின் பால் கொண்டிருந்த கடும் வெறுப்புக்கு அது சான்றாக இருந்தது. இந்த இயங்குமுறை கீழே விழுந்து கிடக்கும் ஒரு ஐரோப்பியரை ஒரு ராயல் புலி விழுங்கும் காட்சியை சித்தரிக்கிறது. ஆர்கன் இசைக்கருவியனுடையது போல சில குழாய்கள் புலியின் உடலுக்குள் உள்ளன. அது உண்டாக்கும் ஓசை புலியின் ஐரோப்பியனது ஓலமும் கலந்து வரும் ஒசையைப் போல் உள்ளது. ஓசை எழும் போது, ஐரோப்பியனின் கையாலாகாத் தனத்தை வெளிப்படுத்தும் வகையில் அவனது கை அடிக்கடி மேலெழுகிறது. இந்த வடிவமைப்பு திப்புவின் ஆணைப்படி உருவாக்கப்பட்டுள்ளது. திப்புவின் திமிருக்கும் கொடூரத்துக்கும் நினைவுப் பொருளாக அமைந்துள்ள இந்த பொம்மை லண்டன் கோபுரத்தில் வைக்கத் தகுதியானது என்று கருதலாம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
கிழக்கிந்திய கம்பனியின் ஆளுநர்கள் இப்பொம்மையை பிரித்தானிய அரசிடம் ஒப்படைக்க வேண்டாமென்று முடிவு செய்தனர். ஆரம்பத்தில் லண்டன், லெடன்ஹால் தெருவில் அமைந்திருந்த கிழக்கிந்திய நிறுவன அருங்காட்சியகத்தில் இது காட்சிக்கு வைக்கப்பட்டது. அங்கு அதனைக் கண்ட கவிஞர் ஜான் கீட்ஸ், தனது அங்கதக் கவிதையொன்றில் இதனைக் குறிப்பிட்டார். புலி பிரித்தானியப் போர் அதிகாரியைக் குதறும் காட்சி இங்கிலாந்தில் பிரபலமானது.
தற்போது இந்த பொம்மை லண்டன் விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. ஒரு கண்ணாடி கூண்டில் வைக்கப்பட்டுள்ளதால், பார்வையாளர்களால் இதனை இயக்கிப் பார்க்க முடியாது. இதன் ஒரு சிறிய மாதிரி வடிவம், பெங்களூரில் உள்ள திப்பு சுல்தானின் மர மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.