இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ரா தனி ஒரு வீரராக ஒட்டுமொத்த இந்திய அணியின் பவுலிங் சுமையை தாங்கி வருகிறார். இதுகுறித்து ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் பிரட் லீ பேசியிருக்கிறார்.
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்தது. அதுவும் ஐந்து நாட்களுக்கு குறைவான நாட்களிலேயே ஆட்டத்தை முடித்தது. இரு அணிகளுக்கும் இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பானில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் தொடங்கியது. இதன் முதல் நாள் ஆட்டத்தின்போது மழை குறுக்கிட்டதால் பாதியிலேயே ஆட்டம் நின்றது. பின் அடுத்தடுத்த நாட்கள் விறுவிறுப்பாக போட்டி நடைபெற்றது. இந்த மூன்றாவது போட்டி ட்ராவில் முடிந்தது.
இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி முடிவில் யாரும் எதிர்பாராத ஒரு விஷயம் நடந்தது. இந்திய அணியின் முன்னணி பவுலரான அஸ்வின் சர்வதேச போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார். ஒட்டுமொத்த இந்திய அணி வீரர்களும் கண் கலங்கியப்படி விடை கொடுத்தனர்.
ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அந்தவகையில் அதிக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளராக பும்ரா 21 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். அவர் பந்துவீச்சில் கொடுத்துள்ள இந்தத் தாக்கம் மட்டுமே இந்திய அணி ஒரு போட்டியை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இல்லையென்றால் இந்திய அணி தற்பொழுது இரண்டுக்கு பூஜ்ஜியம் என இந்தத் தொடரில் பின்தங்கி இருந்திருக்கும்.
இந்திய அணியில் பும்ராவுக்கு பந்துவீச்சு முனையில் ஆதரவு தரக்கூட ஷமி இல்லை. அதேபோல் சிராஜும் நல்ல பவுலிங் ஃபார்மில் இல்லை. இதனால் தனி ஒரு வீரராக போராட வேண்டிய நிலைக்கு பும்ரா தள்ளப்பட்டார்.
அந்தவகையில் இதுகுறித்து பிரட் லீ கூறும் பொழுது, “பும்ரா உலகத்தரம் வாய்ந்தவர். ஆனால் துரதிஷ்ட வசமாக தற்பொழுது ஷமி இல்லை. சிராஜ் ஓரளவுக்கு ஆதரவு கொடுப்பதாகவே நான் நினைக்கிறேன். என் கருத்துப்படி இந்தியா சில நல்ல பந்துவீச்சாளர்களை வைத்திருக்கிறது.
ஆனால் பந்துவீச்சு தாக்குதலில் முழு சுமையை பும்ரா மட்டுமே தாங்குகிறார் என்று மக்கள் சொல்ல காரணம் அவர் சிறந்தவராக இருக்கிறார். பும்ரா மற்ற பந்துவீச்சாளர்கள் போல் இல்லை. அவர்களைவிட பல மடங்கு உயர்ந்தவர். இதனால், மற்ற பந்துவீச்சாளர்களை அவமானப்படுத்துகிறேன் என்று நினைக்க வேண்டாம். அவர்கள் சிறந்தவர்களாக இருக்கிறார்கள். ஆனால் பும்ரா அவர்களை விட மிகச் சிறந்தவராக இருக்கிறார்.” என்றார்.