சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா

indian cricket team
indian cricket teamimage credit - @SouvikPurkaya16
Published on

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டம் மட்டும் துபாயில் நடக்கிறது.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது முதல் 2 லீக் ஆட்டங்களில் முறையே வங்காளதேசத்தையும், பாகிஸ்தானையும் தோற்கடித்து ஏற்கனவே அரைஇறுதிக்கு தகுதி பெற்று விட்டது.

இந்நிலையில் இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. டாசில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சுப்மன் கில் 2 ரன்னிலும், கேப்டன் ரோகித் சர்மா 15 ரன்னிலும், விராட் கோலி 11 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

இதையும் படியுங்கள்:
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை பந்தாடி வெற்றியை பதிவு செய்த இந்தியா
indian cricket team

30 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தள்ளாடிய நிலையில் 4-வது விக்கெட்டுக்கு ஸ்ரேயாஸ் அய்யரும், அக்‌ஷர் பட்டேலும் இணைந்து அணியை சரிவில் இருந்து காப்பாற்றினர். அணியின் ஸ்கோர் 128-ஆக உயர்ந்த போது அக்‌ஷர் பட்டேல் 42 ரன்களிலும், ஸ்ரேயாஸ் அய்யர் 79 ரன்களிலும், அடுத்து வந்த ராகுல் 23 ரன்களில் வெளியேற 50 ஓவர் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுக்கு 249 ரன்கள் சேர்த்தது.

அதனை தொடர்ந்து 250 ரன் இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி ஆடியது. தொடக்க வீரர்கள் ரச்சின் ரவீந்திரா, வில் யங் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர். இன்னொரு பக்கம் இந்தியாவின் 4 சுழற்பந்து வீச்சாளர்கள் இடைவிடாது கொடுத்த நெருக்கடியை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் நியூசிலாந்து அணியின் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன.

கடைசியில் நியூசிலாந்து அணி 45.3 ஓவர்களில் 205 ரன்னில் ஆல்-அவுட்டானது. இதன் மூலம் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சுழற்பந்து வீச்சாளரான தமிழகத்தை சேர்ந்த வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை பெற்றார். நியூசிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

‘ஏ’ பிரிவில் தோல்வியே சந்திக்காத இந்திய அணி தொடர்ச்சியாக 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகளை பெற்று முதல் இடத்திலும், நியூசிலாந்து 4 புள்ளியுடன் 2-வது இடத்திலும் உள்ளது.

இதையும் படியுங்கள்:
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த நியூசிலாந்து
indian cricket team

இந்த வெற்றியின் மூலம் ‘ஏ’ பிரிவில் முதலிடத்தை பிடித்த இந்திய அணி வரும் 4-ம்தேதி துபாயில் நடைபெறும் அரையிறுதியில் ‘பி’ பிரிவில் 2-வது இடத்தை பெற்ற ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com