
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. இந்த போட்டி மார்ச் 9-ந் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது.
சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் தரவரிசையில் டாப்-8 இடங்களை பிடித்த அணிகள் மட்டுமே இடம் பெற முடியும். அந்த வகையில் முன்னாள் சாம்பியன்கள் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இந்த முறை தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடக்க உள்ளது. மற்ற ஆட்டங்கள் பாகிஸ்தானின் கராச்சி, ராவல்பிண்டி, லாகூர் ஆகிய நகரங்களில் நடைபெறுகின்றன.
நேற்று கராச்சி தேசிய ஸ்டேடியத்தில் நடந்த தொடக்க மோதலில் முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணி, மிட்செல் சான்ட்னெர் தலைமையிலான நியூசிலாந்தை எதிர்கொண்டது.
நியூசிலாந்து அணியை பொறுத்தவரை கடந்த வாரம் நடந்த முத்தரப்பு தொடரில் பாகிஸ்தானை இரண்டு முறை தோற்கடித்து மிரட்டியது. இதற்கு பலிவாக்கும் வகையில் பாகிஸ்தான் வெறித்தனமாக விளையாடும் முனைப்புடன் களம் இறங்கும் என்பதால் போட்டி சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து வில் யங்கும், டிவான் கான்வேவும் நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர். ஆனால் ஆரம்பத்தில் பாகிஸ்தானின் பந்து வீச்சில் சற்று தடுமாறி நியூசிலாந்து, கான்வே, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல் என அடுத்தடுத்து ஆட்டம் இழந்து 73 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளுடன் தடுமாற்றத்திற்குள்ளானது.
இந்த சூழலில் வில் யங்கும், விக்கெட் கீப்பர் டாம் லாதமும் ஜோடி சேர்ந்து நிலைத்து நின்று அணியை சரிவில் இருந்து மீட்டு, ஸ்கோர் 191 ஆக உயர்ந்த போது வில் யங் 107 ரன்களில் அவுட் ஆனார். அடுத்தடுத்து வந்தவர்கள் நிதானமாக விளையாடி 50 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுக்கு 320 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ரவுப், நசீம் ஷா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
களம் இறங்கிய பாகிஸ்தான் அணியில் சாத் ஷகீல் (6 ரன்), கேப்டன் முகமது ரிஸ்வான் (3 ரன்) சீக்கிரம் நடையை கட்ட, அதன் பின் வந்தவர்கள் நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 27.2 ஓவர்களில் 100 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதனை அடுத்து வந்தவர்களும் சொர்ப்ப ரன்களில் அவுட்டாக பாகிஸ்தான் அணி 47.2 ஓவர்களில் 260 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இதன் மூலம் நியூசிலாந்து 60 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வெற்றியோடு தொடங்கியது. நியூசிலாந்து தரப்பில் வில்லியம் ஓ ரூர்கே, மிட்செல் சான்ட்னெர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். லாதம் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.