சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இந்திய அணியின் வீரர்களை தேர்ந்தெடுப்பதில் பிசிசிஐ தாமதம் காட்டி வருவதோடு, அதற்கு சற்று அவகாசம் வேண்டுமென்று ஐசிசியிடம் கேட்டுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் மொத்தம் 8 அணிகள் மோதவுள்ளன. 29 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானில் முதல்முறையாக சாம்பியன்ஸ் ட்ராபி நடைபெறவுள்ளது. இதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு பல நூறு கோடிகளையும் செலவிட்டுள்ளது. பாகிஸ்தானில் ராவல்பிண்டி, லாகூர் மற்றும் கராச்சி ஆகிய மூன்று இடங்களில் போட்டிகள் நடத்தப்படும்.
ஐசிசி ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபியின் ஒன்பதாவது தொடர் மொத்தமாக 19 நாட்கள் நடைபெறும். இந்த ஐசிசி சாம்பியன்ஷிப் தொடர் பிப்ரவரி 19ம் தேதி கராச்சியில் தொடங்குகிறது. இறுதிப் போட்டி மார்ச் 9 அன்று நடைபெறும்.
8 அணிகள் போட்டியிடும் இந்த தொடரில் 15 போட்டிகள் நடைபெறும். அதன்படி குரூப் ஏ வில் பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம் இடம் பெற்றிருக்கிறது. குரூப் பி யில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து ஆகிய அணிகள் இடம் பிடித்திருக்கிறது.
இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் நடத்தப்படும்.
அந்தவகையில் சாம்பியன்ஸ் ட்ராபிக்கான அணியை ஜனவரி 12ம் தேதி அதாவது நாளைக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐசிசி கூறியது. இதனால், இந்திய அணியின் வீரர்களை இன்று அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அஜித் அகர்கர் தலைமையிலான இந்திய தேர்வுக்குழு சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியை அறிவிக்க ஒரு வாரம் கூடுதல் அவகாசம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏனெனில் பிசிசிஐ கவுதம் கம்பீர் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோரை அழைத்து சில விஷயங்களை கேட்கவுள்ளதாக நேற்றே செய்திகள் வந்தன. பிசிசிஐ தனது உள் விவாதங்களை முடித்தப்பின்னர், வீரர்களை தேர்ந்தெடுக்கவுள்ளதாம்.
இதனால் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி வருகிற ஜனவரி 18-19 ஆகிய தேதிகளில் அறிவிக்கப்படலாம் என்று பிசிசிஐ வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து இங்கிலாந்து அணி உடனான ஒருநாள் தொடருக்கான அணியும் சேர்த்து அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.