கும்பமேளா நடைபெறும் காலத்தில் தான் நிறைய சாமியார்கள் வெளிப்படுவார்கள். அவர்களின் பக்தி தீவிரமாக இருக்கும். கும்பமேளா காலம் தவிர மற்ற காலத்தில் இவர்கள் மலைகளில், காடுகளில் மறைந்து வாழ்கின்றனர். பெரும்பாலான சாதுக்கள் தினசரி உணவு உண்ணுவதில்லை. பிரதாப்காட்டை சேர்ந்த சாமியார் ஒருவர் 40 வருடங்களாக எந்த ஒரு திட உணவையும் தொட்டதில்லை. வெறும் தேனீர் மட்டுமே அருந்தி அவர் இவ்வளவு காலம் உயிர் வாழ்ந்து வருகிறார் என்பது அனைவரையும் ஆச்சரியப் படுத்துகிறது. மேலும் அவர் 40 ஆண்டு காலம் வாய் திறந்து ஒரு வார்த்தையும் பேசியது இல்லை. மிக நீண்ட கால மெளன விரதத்தை அவர் கடைப்பிடிக்கிறார்.
இந்த மெளன சாமியார் பற்றி நிறைய தகவல்கள் வெளிவந்து ஆச்சரியப் படுத்துகின்றன. இந்த கும்பமேளாவில் இவரை பற்றி தான் அதிகம் பேசப்படுகிறது. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரதாப்காட்டில் சாய்வாலே பாபா என்ற புகழ்பெற்ற மெளன சாமியார் வாழ்ந்து வருகிறார். இவரது இயற்பெயர் தினேஷ் ஸ்வரூப் பிரம்மச்சாரி. இவரது தந்தை அந்த பகுதியில் தேனீர் கடை நடத்தி வந்துள்ளார்.40 ஆண்டுகளாக இவர் தேனீர் மட்டும் அருந்தி வருவதால் இவரை அனைவரும் சாய்வாலே பாபா என்றழைக்கின்றனர். இவரது உணவு தினசரி 10 கோப்பை தேனீர் மட்டும் தான்.
மிக நீண்ட காலம் இவர் வாய் திறந்து பேசாமல் இருந்தாலும் 40 ஆண்டுகளாக சிவில் சர்வீஸ் (UPSC) மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருகிறார். தினசரி மாணவர்களுக்கு குறிப்புகள் மூலம் கற்பிக்கிறார். வாட்ஸ்அப் மூலம் தகவல்களை அனுப்புகிறார். அவர்களுக்கு தினசரி குறிப்புகளை எழுதி வைக்கிறார். சாய்வாலே பாபாவின் சரியான வழிகாட்டுதலினால் நிறைய மாணவர்கள் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.
சாய்வாலே பாபா தனது மாணவர்களுக்கு இலவச பயிற்சி மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கி வருகிறார். வாட்ஸ்அப்பில் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார், அவர்களது சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கிறார். அவரது தனித்துவம் மிக்க பயிற்சியினால் பல மாணவர்கள் சிறப்பாக தேர்ச்சியடைகின்றனர். பாபா தனது ஆற்றலைக் காக்க நீண்டகாலமாக மௌன விரதம் இருக்கிறார். அதன் மூலம் கிடைக்கும் அறிவை மாணவர்களுக்கு தருகிறார் . மாணவர்களை ஊக்கப்படுத்தி அவர்களை வெற்றியடைய வைப்பதே நோக்கமாக வைத்திருக்கிறார்.
இதுபற்றி அவரது மாணவர்கள் கூறுகையில் "பல ஆண்டுகளாக பாபா எங்களை வழிநடத்தி வருகிறார். அவர் மெளனமாக இருந்தாலும், அவர் எழுதி அனுப்பும் குறிப்புகள் நமது சந்தேகங்களுக்கு சரியான விளக்கமாக இருக்கிறது. அவரது அறிவு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது, இந்தியர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு மக்களும் பாபாவை பற்றி கேள்விப்பட்டு ஆச்சரியப்படுகிறார்கள்" என்றார். பாபாவை மாணவர்கள் மகாராஜ் என்றே குறிப்பிடுகின்றனர். பிரயாக்ராஜ் மேளாவில் இன்னும் நிறைய சாமியார்களும் சாதுக்களும் நன்மை நிறைய ஆச்சரியப்பட வைப்பார்கள்.