சாம்பியன்ஸ் ட்ராபி தொடரை ஹைப்ரிட் முறையில் நடத்தவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சாம்பியன்ஸ் ட்ராபி பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 29 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானில் முதல்முறையாக சாம்பியன்ஸ் ட்ராபி நடைபெறவுள்ளது. இதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு பல நூறு கோடிகளையும் செலவிட்டுள்ளது.
இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்புவதா? வேண்டாமா? என்ற முடிவை பிசிசிஐ பல மாதங்களாக எடுக்காமல் இருந்தது. கடந்த ஆண்டு ஆசிய கோப்பைத் தொடருக்கு கூட இந்திய அணி அங்கு செல்லவில்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஹைப்ரிட் முறையில் போட்டிகள் நடத்தக்கூடாது என்றும், நாங்கள் இந்தியாவுக்கு போகவில்லையா? அதேபோல் இந்திய வீரர்களும் இங்கு வர வேண்டும் என்றும் தொடர்ந்து கூறி வந்தது.
இந்த தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து சாம்பியன்ஸ் தொடரை எங்கு நடத்தலாம் என்ற ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடத்தப்பட்டது. இந்த மீட்டிங்கில் இந்தியாவின் போட்டிகளை மட்டும் வேறு இடங்களில் நடத்த சில நிபந்தனைகளுடன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியானது. ஆனால், இந்த செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது.
அந்தவகையில் இன்று ஐசிசி இதுகுறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
2024-2027வரை ஐசிசி சார்பில் நடத்தப்படும் இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் அனைத்தும் பொதுவான மைதானத்தில் நடைபெறும் என ஐசிசி இன்று உறுதிப்படுத்தியுள்ளது. அதுபோல், ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுத்ததுபோலவே, சாம்பியன் டிராபி கிரிக்கெட்டில் இந்தியா விளையாடும் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறாது எனவும், இந்தியாவில் நடைபெறும் தொடர்களில் பாகிஸ்தான் அணி பங்கேற்காது எனவும் ஐசிசி தெரிவித்துள்ளது.
இது 2025 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் ஆண்களுக்கான சாம்பியன்ஸ் டிராபி, 2025 இந்தியாவில் நடைபெறும் பெண்களுக்கான உலகக்கோப்பை, 2026ஆம் ஆண்டு இந்தியா - இலங்கை ஆகிய நாடுகள் சேர்ந்து நடத்தும் டி20 உலகக்கோப்பை ஆகிய அனைத்திற்கும் பொருந்தும்.
அதேபோல் 2028ம் ஆண்டு ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பையை நடத்தும் உரிமை பாகிஸ்தானுக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் 8 அணிகள் பங்கேற்கவுள்ள சாம்பியன்ஸ் தொடருக்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் ஐசிசி தெரிவித்திருக்கிறது.