
நாம் அனைவரும் தும்பியை பார்த்திருப்போம். மழைக்காலம் ஆரம்பித்தவுடன் நாம் பார்க்கும் பல்வேறு பூச்சியினங்களுள் தும்பியும் ஒன்று. ஆனால் இலக்கியத் தும்பி என்ற ஒன்று இருக்கிறது தெரியுமா? இலக்கியத் தும்பி என்று யாரை அழைக்கப்பார்கள் தெரியுமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்!
இலக்கியத் தும்பியை தெரிந்து கொள்வதற்கு முன் முதலில் தும்பியின் பெருமைகளை அறிந்து கொள்வோமா! தும்பி என்பது ஒரு வகை பூச்சி. அதனுடைய வேலை ஒவ்வொரு பூவாக சென்று அந்தப் பூக்களின் மீது அமர்ந்து அதன் வாசனையை உணர்ந்து அதிலிருந்து தேனை உண்பது. இங்கு வாசனை என்று கூறியவுடன் நம் மனதிற்கு பல்வேறு வகையான வாசனைகள் நினைவுக்கு வரலாம். ஆனால் அனைத்து நறுமணத்தையும் விட பூக்களில் இருந்து வரும் நறுமணமே மிகவும் மேன்மையானது. எனவே ஒவ்வொரு பூவாக சென்று அமர்ந்து நறுமணத்தை நுகரும் தும்பி மிகவும் சிறப்பு பெற்ற ஒன்று என்றே சொல்லலாம். அப்படியானால் மற்ற எந்த உயிரினமும் நறுமணத்தை உணர்வது இல்லையா? என்று கேட்கலாம். பூச்செடிகளுக்கு அடியில் இருக்கும் பாம்புகள் சில நேரங்களில் நறுமணத்தை நுகரலாம். பூக்களுக்கு அருகில் சென்று மேயும் ஆடு, மாடுகள் சில சமயங்களில் வாசனையை நுகரலாம். நிறத்தாலயோ, வாசனையாலோ கவரப்பட்டு மனிதர்கள் சில நேரம் வாசனையை நுகரலாம். ஆனால் முழுக்க முழுக்க வாசனையை நுகர்வதை மட்டுமே வேலையாக கொண்ட ஒரு உயிரினம் தான் இந்த தும்பி பூச்சிகள்.
அப்படியானால் தும்பி பூச்சிக்கும் கவிஞர்களுக்கும் என்ன ஒற்றுமை? இது அடுத்த கேள்வி இல்லையா?
உலகில் பல்வேறு கலைகள் இருப்பினும் அவற்றுள் மிகவும் மேன்மையானது இசையும் இலக்கியமுமே ஆகும். ஆனால் அந்த இசையின் ரசனையை கூட பாடும் போதும், கேட்கும் போது மட்டுமே உணர முடியும். ஆனால் இலக்கியத்தின் சுவையோ, இசையையும் தாண்டி, பேசும்போது, நினைக்கும் போதெல்லாம் இன்பம் கொடுக்கும் தன்மையுடையது. இத்தகைய பெரும் சிறப்பு அதற்கு இருப்பதால்தான் இலக்கியம் பல நூற்றாண்டுகளைக் கடந்தும் கூட இன்னும் அழியாமல் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஆக பழந்தமிழ் இலக்கியம் ஒன்றுதான் இன்று வரையில் நாம் பெற்று மகிழும் பெருங்கலைச் செல்வங்களில் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இத்தகைய இலக்கிய இன்பத்தை நுகரும் பேறு பெற்றவர்களாக இருப்பவர்களே கவிஞர்கள்.
இன்றைய காலகட்டங்களில் தொழில்நுட்பம் பல்வேறு அளவில் வளர்ந்து இருந்தாலும் கூட சுமார் ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரைந்த ஓவியங்களோ, பாடிய பாடல்களோ தற்போதைய கால சூழலில் பெரும்பாலும் சிதைந்து போய் இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் இலக்கியம் ஒன்றுதான் கிடைத்த வரையில் இன்றும் கூட அதன் மகத்துவம் மாறாமல் நம் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கிறது. அதற்கு ஒரு சிறு உதாரணம் தான் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டு உலகியல் உண்மைகளை எடுத்துக் கூறும் மாபெரும் நூலான திருக்குறள்.
மேலும் நாம் அனைவரும் இன்று பல்வேறு துறைகளில் நம்முடைய வாழ்க்கையை நடத்திக் கொண்டு இருக்கிறோம். அதில் நாம் பல நேரங்களில் பொழுதுபோக்காக இலக்கியத்தை நாடுகிறோம். எனினும் நம்மால் அதன் சுவையை சிறிதளவே உணர முடிகிறது. ஆனால் இலக்கியத் துறையை உள்ளம் கவர்ந்த தொழிலாகவும், தொண்டாகவும் ஏற்று வாழ்பவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள். இவர்களே இலக்கியத் தும்பிகளாகவும் கருதப்படுகிறார்கள்.
மேலும் தும்பிகள் என்பவை அழகான சிறிய சிறகுகளை உடையவை. அதில் ஒளி வீசும் பல வண்ணங்கள் உள்ளன. அது மற்ற உயிரினங்களான நத்தை, நண்டைப் போல மண்ணோடு மண்ணாக வாழ்வதில்லை. மலர் எப்படி மண்ணை விட்டு உயரே எழுந்து நிற்கிறதோ அதைப்போலவே தும்பிகளும் ஒளியை நோக்கி, வானை நோக்கி உயரப் பறக்கும் சிறு உயிரினம் ஆகும்.
தும்பிக்கு சிறகுகள் எப்படியோ அப்படியே ஒரு கவிஞனுக்கு கற்பனை. ஒரு கவிஞன் தன்னுடைய கற்பனை சிறகை விரித்து பறவைகள் பறக்கக்கூடிய வான்வெளியையும் தாண்டி தன்னுடைய அறிவுக் கண்களால் அனைத்தையும் கண்டு மகிழ்கிறான். கவிஞனும் ஒரு சாதாரண மனித பிறப்பாக மண்ணிலே பிறந்து வாழ்ந்தாலும் கூட மனதளவில் அவன் கற்பனை சிறகுகளை விரித்து ஒரு பறவையைக் காட்டிலும் உயர உயர பறந்து கொண்டே இருக்கிறான். கனவிலும் கூட அவனுடைய கற்பனையின் சிறகுகள் அசைந்து கொண்டே இருக்கின்றன. மேலும் தான் கற்பனை சிறகுகளை விரித்து பறப்பதோடு மட்டுமல்லாமல் தன்னுடைய எண்ணங்களையும் சிந்தனைகளையும் எழுத்துக்களாக பதிவிட்டு தன்னுடைய சிந்தையில் உதித்த உயர்வான இன்பத்தை மற்றவர்களும் அனுபவிக்க வேண்டும் என்று கருதி ஒரு கருணை உள்ளத்தோடு செயல்பட்டு ஒரு ஏணியாக மாறி மற்றவர்களையும் உயரத்தை அடைய வைக்கிறான்.
எனவே 'உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்' என்ற கருத்திற்கு ஏற்ப இன்று கவிஞர்களாக, எழுத்தாளர்களாக இருக்கும் பலரும், எழுதக்கூடிய எழுத்துக்கள் பட்டை தீட்டப்பட்ட வைரங்களாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அவை மனித குலம் முழுமைக்கும் விடுதலை அளித்து அவர்களது வாழ்க்கையை சுபிட்சமாக மாற்றும் வகையில் ஆக்கபூர்வமானதாக இருக்க வேண்டும்!
குறிப்பு: (மு.வ. எழுதிய கொங்குதேர் வாழ்க்கை என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.)