
முழு பட்ஜெட் என்பது அடுத்த நிதியாண்டுக்கான அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் நிதிக் கொள்கைகளை கோடிட்டுக் காட்டும் ஒரு விரிவான ஆவணமாகும். ஒரு நிதியாண்டு என்பது ஏப்ரல் 1 முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை நீடிக்கும். ஆனால் சில வருடங்களாக பட்ஜெட் ஜனவரி இறுதி அல்லது பிப்ரவரி தொடக்கத்தில் தாக்கல் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான பட்ஜெட் பிப்ரவரி 1-ம்தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.
பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டாலும், பாராளுமன்றத்தில் பட்ஜெட் சமர்ப்பிக்கப்படுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே பட்ஜெட் தயாரிக்கும் செயல்முறை தொடங்க ஆரம்பித்து விடுவது குறிப்பிடத்தக்கது. அதாவது முந்தைய ஆண்டின் ஆகஸ்ட்- செப்டம்பர் மாதங்களில் விவாதங்களைத் தொடங்குகிறது. மத்திய பட்ஜெட் தயாரிக்கும் பணியில் சுமார் 100 பேர் கொண்ட குழு ஈடுபடுகிறது. இவர்கள் பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரை நிதி அமைச்சகத்தின் தலைமையகத்தில் இருக்க வேண்டியது கட்டாயம்.
மத்திய பட்ஜெட் ஒரு அரசாங்கத்தின் வருவாய் மற்றும் செலவுகளை உள்ளடக்கியது. பட்ஜெட்டில் நிதி அமைச்சகம் பல்வேறு துறைகளின் முன்னேற்றத்திற்கு தேவையான வருவாய்களை ஒதுக்குகிறது. நிதி ஒதுக்குவதில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் பிரதமர் அல்லது மத்திய அமைச்சரவைக்கு சென்று தீர்வு காணப்படும். பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு நிதியமைச்சர் அதில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமா என்பது குறித்து அறிந்து கொள்ள, கட்சி அமைச்சர்களுடன் பட்ஜெட் குறித்த கூட்டங்களை நடத்துவார். முன்மொழிவுகள் மற்றும் கோரிக்கைகளை அமைச்சர்களுடன் விவாதித்த பின்னர் கடைசியாக பிரதமருடன் சேர்ந்து இறுதி முடிவுகளை எடுப்பார்.
ஆண்டு தோறும் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட் மக்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்றே சொல்ல வேண்டும். இந்த வகையில் பிப்ரவரி 1-ம்தேதி தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டை வணிகங்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பொது மக்களால் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகிறது. மேலும் நாட்டின் பொருளாதார சமநிலையை கொண்டுவரவும் பட்ஜெட் அவசியமானதாக கருதப்படுவதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
வழக்கம்போல், இந்தாண்டு பட்ஜெட்டில் வெளியாகும் அறிவிப்புகள் குறித்து எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. குறிப்பாக, மாத சம்பளக்காரர்கள் தங்களது வருமானவரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படுமா என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு வருடமும் பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு வரம்பை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து இருந்து வருகிறது. அதன்படி, புதிய வருமானவரி திட்டத்தின்கீழ், வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.
மக்கள் கையில் பணம் புழக்கத்தில் இருக்க வரி விகிதங்களை குறைக்க வேண்டியது அவசியமாகும். கார்ப்பரேட்டுகளுக்கு அதிக வரியும், மக்களுக்கு குறைந்த வரியும் விதிக்க வேண்டும். அனைத்துப் பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி. என்ற பெயரில் வரிப் போட்டு மக்களின் நுகர்வு குறைந்து போய் இருக்கிறது.
மேலும் இந்த பட்ஜெட்டில் பெண்கள் முன்னேற்றத்துக்கான அறிவிப்புகள் இடம்பெற்றால் நன்றாக இருக்கும் என்ற கருத்து நிலவுகிறது.
முத்ரா கடன் திட்டத்தில் மூலம் பயன் அடைந்து வரும் பெண்களுக்கு மேலும் அந்த திட்டத்தில் சில தளர்வுகளை செய்து புதிய அறிவிப்புகள் இடம்பெறச் செய்ய வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது.
மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் பட்ஜெட்டில் அறிவிப்புகள் இடம்பெற வேண்டும் என்பது பெண்களின் விருப்பமாகும்.
அதேபோல் தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் உச்சத்தை நோக்கி செல்கிறது. எனவே அதன் விலையும் கட்டுக்குள் இருக்கும் வகையில் திட்டங்களை ஏற்படுத்த வேண்டும் என்பது பெண்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.